பிக்பாஸ் சீசன் 5 முடிந்த நாளான்று, உலக நாயகன் கமல் ஹாசன் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற 24 மணி நேர நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என அறிவித்தார். பிக்பாஸ் அல்டிமேட்டில் வனிதா, சினேகன், சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், ஜூலி, அபிராமி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட 14 பேர் நேரடி போட்டியாளர்களாக களமிறங்கினர்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் 24 மணி நேர ஒளிபரப்பு ஆரம்பத்தில் போர் அடிப்பதாக நெட்டிசன்கள் குறை கூறிக்கொண்டிருந்தனர். வனிதா, ஜூலி, சுரேஷ் சக்கரவர்த்தி, அனிதா இவங்க எல்லாம் இருந்துமா? பிக்பாஸ் வீடு போர் அடிக்குது என கலாய்த்தனர். ஆனால் வழக்கம் போல் ஆரம்பத்தில் கொஞ்சம் பிசிறு தட்டினாலும், போகப்போக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி வேற லெவலுக்கு பிக் அப் ஆனது.
ஆரம்பத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல் ஹாசன், விக்ரம் படத்தில் நடிக்க தேதி ஒதுக்க முடியாத காரணத்தால் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். கமலுக்குப் பதிலாக சிம்பு இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டது. தற்போது சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை சுரேஷ் சக்கரவர்த்தி, அபிநய், சுஜா வருணி, ஷாரிக் ஆகியோர் எலிமினேட் ஆகி வெளியே வந்துள்ளனர். சர்ச்சைக்கு பெயர் போன வனிதா, ஆரம்பம் முதலே சக போட்டியாளர்களுடன் சண்டையிட்டுவிட்டு, ‘போதும்டா சாமி போராடினது’ என அவராகவே வெளியேறி விட்டார். வைல்டு கார்டு எண்ட்ரியாக சதீஷும், சுரேஷ் சக்கரவர்த்தி மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். கடந்த வாரம் முதல் ரம்யா பாண்டியன் வைல்டு கார்டு போட்டியாளராக என்ட்ரியாகியுள்ளார்.
Also Read : என்ன எப்படி கேவலமா பேசலாம்.. ஜூலி கண்ணீர்.. எல்லை மீறும் நிரூப்
ஒரு போட்டியாளர் வெளியேறிவிட்டார் என்றால், தனது சொந்த வீட்டிற்கு அடுத்ததாக தன்னைப் போலவே எலிமினேட் ஆன சக போட்டியாளர்களை நேரில் சென்று சந்திப்பதை பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் இருந்தே வாடிக்கையாக கொண்டுள்ளனர். வெறும் சந்திப்போடு மட்டுமல்லாது குடும்ப நண்பர்களாகவும் மாறி வீட்டில் நடக்கும் அனைத்து விசேஷங்களிலும் பங்கேற்கும் அளவிற்கு குளோஸ் ஆகி விடுகின்றனர். கடந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் ஷோவில் இருந்து பாடலாசிரியர் சினேகன் வெளியேறியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதும் தனது மனைவி கனிகாவுடன் தாடி பாலாஜி மற்றும் வனிதாவை சந்தித்துள்ளார். இவர்களது இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக வனிதா விஜயகுமார் மகளுடன் சினேகனின் மனைவி கனிகா இருக்கும் போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது. இந்த சந்திப்பிற்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அடுத்து இந்த ஜோடி யாரை சந்திக்கப்போகிறார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.