Home /News /entertainment /

முன்னாள் காதலருடன் பார்ட்டி... ஷனம் ஷெட்டியை விலகக் காரணம் என்ன? - தர்ஷன் அதிரடி பேட்டி

முன்னாள் காதலருடன் பார்ட்டி... ஷனம் ஷெட்டியை விலகக் காரணம் என்ன? - தர்ஷன் அதிரடி பேட்டி

நிச்சயதார்த்தம் செய்துவிட்டு தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக பிக்பாஸ் புகழ் தர்ஷன் மீது நடிகை ஷனம் ஷெட்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகாரளித்தார்.

ஷனம் ஷெட்டியின் புகார் குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமளித்த தர்ஷன், “2016-ல் தான் நான் என்னுடைய வேலையை விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக சென்னைக்கு வந்தேன். 2017-ம் ஆண்டு பச்சையப்பா சில்க்ஸ் விளம்பரத்தில் நடித்த போதுதான் எனக்கு ஷனம் ஷெட்டி அறிமுகமானார். அதற்குப் பின் என்னை ஃபேஸ்புக்கில் சேர்த்தார்.

பின்னர் என்னுடைய விளம்பரங்கள் வெளியாகும் போது அவ்வப்போது வாழ்த்து தெரிவிப்பார். இதனிடையே ஃபேஸ்புக்கில் மெசேஜ் அனுப்பி நான் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறேன். நீங்கள் நேர்காணலுக்கு வரமுடியுமா என்றார். அதற்குப் பிறகுதான் அவர் அந்தப் படத்தின் இணைதயாரிப்பாளர் என்பதை என்னிடம் சொன்னார். அந்தப் படம் மேகாலயாவில் 35 நாட்கள் படமாக்கப்பட்டன. அப்போது ஷனம் ஷெட்டிக்கு இருந்த காதல் முறியும் தருவாயில் இருந்தது.

2018 ஜனவரியிலிருந்து தான் நாங்கள் இருவரும் காதலிக்கத் தொடங்கினோம். அந்த நேரத்தில் அவர் 2 படங்கள் பணியாற்றிக் கொண்டிருந்தார். அதேவேளையில் அவர் காதலை வெளியில் சொல்ல வேண்டாம் என்று சொல்லியிருந்தார்.

இதனிடையே எனது விசா முடிவடைந்துவிட்டது. அதேவேளையில் பொருளாதார காரணத்துக்காக படமும் நின்று போனது. ஷனம் ஷெட்டி எனக்கு பொருளாதாரம் ரீதியாக உதவவில்லை. தொழில்ரீதியாக எனக்கு உதவி இருக்கிறார்.பிக்பாஸ் வாய்ப்பு வந்த போது ஷனம் ஷெட்டி மட்டுமே தேர்வானார். அதில் இரண்டு படங்கள் வெளியாகியிருந்தால் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு வழங்கப்படும் என்று மக்கள் தொடர்பாளர் தெரிவித்தார். எனவே நானும் ஷனம் ஷெட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க வாழ்த்தினேன். ஆனால் விஜய் டிவி என்னுடைய விளம்பரம் ஒன்றைப் பார்த்து அதன் மூலம் என்னைத் தொடர்பு கொண்டனர். அந்த நேரம் எனக்கும் ஷனம் ஷெட்டிக்கும் நிச்சயதார்த்தம் நடந்திருந்தது. ஆனால் அதை பிக்பாஸ் நேர்காணலில் சொன்னால் வாய்ப்பு பறிபோகும் என்பதற்காக ஷனம் ஷெட்டி அதை வெளியில் கூற வேண்டாம் என்றார். இது அப்போது எங்களுடன் இருந்த நண்பர்களுக்கு நன்கு தெரியும்.

நான் பிக்பாஸில் தேர்வான பிறகும் ஷனம் ஷெட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பினார். வைல்ட் கார்ட் மூலம் உள்ளே வர முயற்சி செய்தார். அவர் பிகினியில் பேட்டி அளித்ததெல்லாம் எனக்கு பிடிக்கவில்லை. நான் அவரிடம் கேட்டதற்கு உன்னுடைய புரமோஷனுக்காகத் தான் பேட்டி கொடுத்தேன் என்றார். நான் பிக்பாஸ்க்கு போனதற்கு பின்னர் என்னுடைய சமூகவலைத்தள கணக்குகளை எனது அண்ணன் மற்றும் சகோதரியிடம் கட்டாயப்படுத்தி ஷனம் ஷெட்டி வாங்கினார். நான் பிக்பாஸை விட்டு வெளியில் வந்ததற்கு பின்னும் சுமார் 2 மாதங்களாக என்னுடைய சமூக வலைத்தள கணக்குகளை அவர்தான் பயன்படுத்தினார்.பின்னர் பிக்பாஸ் பெண் போட்டியாளர்களிடம் பேச வேண்டாம் என்றார். மலேசியாவில் நடந்த நிகழ்வில் என்னுடன் வந்து தங்க வேண்டும் என்று நிகழ்ச்சி தயாரிப்பாளர்களிடம் ஷனம் ஷெட்டி கட்டாயப்படுத்தினார். இப்படித்தான் மோதல் தொடங்கியது.

பின்னர் பொதுவெளியில் நாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்பதை என்னிடம் கூறச் சொன்னார். ஆனால் நான் சொல்ல முடியாது என்றேன். இப்படியே எனக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தார்.

இதன் உச்சகட்டமாக நான் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமானேன். அந்தத் தயாரிப்பாளர்களிடம் என்னை நீக்குமாறு பேசினார். என்னை வைத்து படமெடுக்க வேண்டாம் என்று கூறினார். அதனால் தான் ஷனம் ஷெட்டியை பிரிய முடிவெடுத்தேன். இதையடுத்து அவர் திருமணம் செய்யாவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார்.ஷனம் ஷெட்டி இலங்கை வந்து எனது அம்மாவைச் சந்தித்தார். என் அம்மாவும் தங்கையின் திருமணம் முடிந்த பிறகு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். நிச்சயதார்த்த செலவு சுமார் ரூ.2.5 லட்சம் தான் நான் அவருக்கு கொடுக்க வேண்டிய தொகை. நான் பிக்பாஸில் இருந்த சமயத்தில் அவரது முன்னாள் காதலருடன் ஒரு திருமணத்துக்குச் சென்றிருக்கிறார். அவர்கள் இரவு பார்ட்டியில் ஒன்றாக கலந்து கொண்டனர். அதற்கான ஆதாரங்கள் உள்ளன. அதை மீடியாவிடம் சொல்ல விரும்பவில்லை. போலீஸ் கேட்டால் அதை சமர்பிப்பேன்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் எனக்கு பெண்களுடன் தொடர்பிருந்தால் ஷனம் ஷெட்டி அதை நிரூபிக்கட்டும். ஷெரினிடம் கூட எங்களுக்கு நிச்சயதார்த்தமானதை தெரிவித்துவிட்டேன். அதனால் அவர் என்னிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார். ஷனம் ஷெட்டி சொல்லித்தான் ஷெரினின் சமூகவலைத்தள பக்கத்தை அன்ஃபாலோ செய்தேன். இவ்வளவு நடந்ததற்கு பின்னர் ஷனம் ஷெட்டியை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை.

ஷனம் ஷெட்டி எதற்காக இதைச் செய்கிறார். யார் தூண்டிவிட்டுச் செய்கிறார் என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை. ஷனம் ஷெட்டி மீது வழக்கு எதுவும் தொடுக்கப்போவதில்லை. அவர் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பேன்” இவ்வாறு தர்ஷன் தனது பேட்டியில் தெரிவித்தார்.
Published by:Sheik Hanifah
First published:

Tags: Bigg Boss Tamil 3

அடுத்த செய்தி