கல்லூரி காலத்தில் பேருந்தில் செல்லும் போது பெண்களை உரசியுள்ளதாக நடிகர் சரவணன் கூறியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், தற்போது பிக்பாஸிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன், ஒவ்வொரு வார இறுதியிலும் போட்டியாளர்களிடையே உரையாடுவார். அந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் கமல்ஹாசனின் உரையாடல் அமையும். அந்த வகையில் கடந்த சனிக்கிழமை ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை மீராமிதுன் சேரன் மீது சுமத்திய வீண்பழி குறித்து கமல்ஹாசன் பேசினார். டாஸ்க்கின் போது இயக்குநர் சேரன் தன்னை தவறாக பிடித்து இழுத்ததாக மீராமிதுன் கூறியதை அடுத்து அவருக்கான குறும்படமும் ஒளிபரப்பானது.
தொடர்ந்து மீராமிதுனிடம் பேசிய கமல்ஹாசன், அரசுப் பேருந்துகளில் செல்லும் பெண்களின் நிலை குறித்தும் பேசினார். பெரும்பாலானோர் பணிக்குச் செல்லும் அவசரத்தில் கூட்டத்தில் முண்டியடித்து செல்கின்றனர். அதில் வேண்டுமென்றே பெண்களை உரச வேண்டும் என்ற எண்ணத்தில் வருபவர்களும் உண்டு என்று கமல்ஹாசன் கூற, தனது கையை உயர்த்தி ஆமோதித்தார் சரவணன்.
பதிலுக்கு, பாருங்கள் சரவணன் கூட அதைக் கண்டித்திருப்பார் போல என்று கமல்ஹாசன் கூற, நான் கல்லூரிக் காலத்தில் அப்படி செய்திருக்கிறேன் என்று பொதுவெளியில் கூறினார் சரவணன். அதிர்ச்சியடைந்த நடிகர் கமல்ஹாசன், சரவணன் அதையும் தாண்டி புனிதராகிவிட்டார் என்று கூறினார். அதற்கு அரங்கில் இருந்த பார்வையாளர்கள் அனைவரும் கை தட்டினர்.
இந்த வீடியோவை பாடகி சின்மயிக்கு சமூகவலைதளத்தின் வாயிலாக ஒருவர் அனுப்பியுள்ளார். அந்த வீடியோவை பகிர்ந்து கருத்து பதிவிட்டிருக்கும் அவர், பேருந்தில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறுகிறார். அதையும் ஒளிபரப்புகிறார்கள். பார்வையாளர்களுக்கு நகைச்சுவையாக உள்ளது. சரவணனுக்காக பார்வையாளர்களும், பெண்களும் கைதட்டுகின்றனர்” என்று கூறி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இதேபோன்று சரவணனுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இன்று சரவணனை மன்னிப்பு கேட்கும்படி பிக்பாஸ் கூறினார். இதையடுத்து பேசிய சரவணன், "கல்லூரியில் படிக்கும் போது நான் செய்த தவறுகள் பற்றி பேசினேன். அதுபோல யாரும் செய்யாதீர்கள் என சொல்வதற்காகத்தான் அதை சொன்னேன். ஆனால் அப்போது என்னால் முழுவதுமாக பேச முடியவில்லை. இந்த தருணத்தில் நான் மன்னிப்பு கேட்கிறேன்" என்றார்.
Published by:Yuvaraj V
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.