மாடலிங்க் துறையில் இருந்த தர்ஷன் பின்னர் விளம்பரப்படங்களில் நடித்து வந்தார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார் தர்ஷன். பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் இறுதிவரை வந்த தர்ஷன் வெற்றி பெறுவார் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் வெற்றி வாய்ப்பு கைமாறிப்போனது.
பிக்பாஸ் 3-வது சீசனில் தர்ஷனின் நடவடிக்கைகளைப் பார்த்து அவரை பிக்பாஸ் மேடையில் வைத்து புகழ்ந்து பேசிய நடிகர் கமல்ஹாசன், ராஜ்கமல் ஃபிலிஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் தர்ஷனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதையடுத்து ‘தாய்க்குப்பின் தாரம்’ என்ற மியூசிக் ஆல்பத்தில் நடித்தார் தர்ஷன். அவருக்கு ஜோடியாக சீரியல் நடிகை ஆயிஷா நடிக்க, தரண் குமார் இசையில் சித் ஸ்ரீராம் குரலில் ப்ளேஸ் கண்ணன் எழுதி இயக்கினார்.
இந்நிலையில் தர்ஷன் நடிக்க இருக்கும் புதிய படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் எனும் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கே.எஸ்.ரவிக்குமார் வாங்கியிருப்பதாகவும் அத்திரைப்படத்தில் நடிகர் தர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இத்திரைப்படத்தை கே.எஸ்.ரவிக்குமாரின் உதவியாளர் இயக்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் தமிழ் பிக்பாஸ் 3-வது சீசனில் டைட்டிலை வென்ற முகென் ராவ் ‘வெப்பம்’ பட இயக்குநர் அஞ்சனா அலிகான் இயக்கத்தில் ‘வெற்றி’ என்ற ஆக்ஷன் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.