தமிழில் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஜனவரி 17-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. 18 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் அதிக வாக்குகளைப் பெற்று நடிகர் ஆரி வெற்றியடைந்தார். அவரைத் தொடர்ந்து பாலாஜி முருகதாஸ் இரண்டாம் இடத்தையும், ரியோ மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
மூன்றாம் இடம்பிடித்த ரியோவுக்கு ‘பெஸ்ட் எண்டர்டெய்னர்’ விருது கொடுத்து அனுப்பினார் கமல்ஹாசன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே அர்ச்சனா, நிஷா, கேபி உள்ளிட்டோரிடம் நட்பு பாராட்டி வந்த ரியோ அன்பு கேங்கின் உறுப்பினராகவே பார்வையாளர்களால் பார்க்கப்பட்டார். அதேபோல் மற்ற போட்டியாளர்களிடம் அதிகம் கோபத்தை வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்ற உறுதியுடன் அவர் பிக்பாஸ் வீட்டில் இருப்பதாகவும் சில போட்டியாளர்கள் தெரிவித்தனர்.
பிக்பாஸ் தமிழ் 4-வது சீசனில் இறுதிவரை களம் கண்ட ரியோ வெற்றி பெறாதது அவரது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தினாலும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இணைந்து சிறப்பான வரவேற்பு அளித்துள்ளனர்.
பிக்பாஸ் செட்டில் இருந்து வெளியேறிய ரியோவுக்கு ஆளுயர மாலை அணிவித்து பட்டாசு வெடித்து கொண்டாடிய நண்பர்கள், அவர் வீட்டுக்கு வரும் போதும் அதே ஆரவாரத்துடன் வரவேற்றுள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
100 நாட்களுக்கும் மேலாக தனது மகளை பிரிந்திருந்த ரியோ அவரைக் கண்டதும் நெகிழ்ந்து போனார். குடும்பத்தினர் மற்றும் உறவினர்களைக் கண்டும் மகிழ்ச்சியடைந்துள்ளார். பிக்பாஸ் முடிந்ததும் காட்டுக்குள் செல்ல இருப்பதாக கமல்ஹாசனிடம் தெரிவித்த ரியோவின் அடுத்த பயணம் எங்கே என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.