சின்னத்திரை நடிகை சித்ரா 2020-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி தனியார் விடுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த நசரத்பேட்டை காவல் ஆய்வாளர், சித்ராவின் கணவர் மற்றும் உறவினர்களுடன் நடத்திய விசாரணைக்குப் பின், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சித்ரா தற்கொலை செய்து கொண்ட போது பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருந்த ரம்யா பாண்டியன் தற்போது சித்ரா இறந்த செய்தி கேட்டு அதிர்ந்து போனதாக தெரிவித்துள்ளார். மறைந்த நடிகை சித்ரா குறித்து ரம்யா பாண்டியன் கூறியதாவது, “தனிப்பட்ட முறையில் எனக்கு அவரைத் தெரியாது. நான் சந்தித்ததில்லை. ஆனால் அவர் இறந்த செய்தி கேட்டு மிக வருத்தமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.
ஏனெனில் எனது அம்மா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பார்ப்பார்கள். நிறைய எபிசோட்கள் என் அம்மாவுடன் பார்த்திருக்கிறேன். இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிடும் போட்டோ ஷூட்கள் எல்லாம் பார்த்திருக்கிறேன். நேரடியாக எனக்கு அவருடம் பழக்கம் இல்லாவிட்டாலும் அவரது வளர்ச்சியை நான் உணர்ந்திருக்கிறேன். அவரது குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு வரும் நெகட்டிவிட்டியான கருத்துகளை அப்படியே புறக்கணித்து விடுவேன். நீங்களும் ஃபேக் ஐடியில் வந்து விமர்சிப்பவர்களுக்கு எதிர்வினையாற்றாதீர்கள். அதைக்கண்டு கொள்ளாதீர்கள். மகிழ்ச்சியாக இருங்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 106 நாட்கள் இருந்துவிட்டு வந்துவிட்டேன். அனைத்து போட்டியாளர்களுடனும் தொடர்பில் தான் இருக்கிறேன். எனவே நான் பிக்பாஸை மிஸ் பண்ணவில்லை” இவ்வாறு ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார்.