'பாரதி கண்ணம்மா' சீரியல் படைத்த புதிய சாதனை - கொண்டாடும் ரசிகர்கள்

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியல் வெற்றிகரமாக தனது 500வது எபிசோடை கடந்துள்ளது.

  • Share this:
சினிமாவுக்கு நிகராக டிவி சீரியல்களுக்கும் வெறித்தனமான ரசிகர்கள் பட்டாளங்கள் உண்டு. ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த சீரியல்கள், நிகழ்ச்சிகள் என ஃபேன் பேஜ் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர். நடிகர் நடிகைகளுக்கு சின்னத்திரையில் கிடைக்கும் வரவேற்பு அவர்களை வெள்ளித்திரை வரை கொண்டு சேர்க்கிறது.

மேலும் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. ஐடி உள்ளிட்ட பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் தங்கள் பணியார்களை வீடுகளிலேயே பணி செய்ய அறிவுறுத்தியுள்ளனர். அவர்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு டிவி சிரியல்களும், நிகழ்ச்சிகளும் தான்.

இதனையடுத்து டிவி சீரியல்கள், நிகழ்ச்சிகள் குறித்த மீம்ஸ்கள், வீடியோ கிளப்புகள் அவ்வப்போது வைரலாகி வருகிறது. அந்த வகையில் விஜய் டிவி சீரியல்களும் நிகழ்ச்சிகளும் பெரிதும் கவர்ந்து வருகின்றன. குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் மிகவும் பிரபலம்.

அந்த சீரியலின் மீம்கள் கடந்த வருடம் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தது. கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பேக் ஒன்றுடன் வீட்டை விட்டு வெளியேறும் கண்ணம்மா ஒவ்வொரு இடமாக அலைந்து கொண்டிருப்பார். அந்த காட்சிகள் சுமார் 1 வாரம் வரை ஒளிபரப்பாகின. அந்த காட்சிகளை கலாய்த்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வெளியாகி வைரலாகின. இதனையடுத்து அந்தத் தொடருக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. இந்த சீரியல் வெற்றிகரமாக தனது 500வது எபிசோடை கடந்துள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் ஹேஷ்டேக் உருவாக்கிக் கொண்டாடி வருகிறார்கள்.

பாரதி கண்ணம்மா சீரியல் 'கருத்தமுத்து' என்ற மலையாள சீரியலின் தமிழ் ரீமேக்காகும். இந்த சீரியலில் ரோஷினி, அருண் பிரசாத் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மாநிற பெண் ஒருவர் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சனைகளே இந்த சீரியலின் கதை. இந்த சீரியலில் கண்ணம்மா கதாப்பாத்திரம் பல பெண்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது.

இந்த சீரியல் தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மராத்தி, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தமிழை போலவே மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த வருடம் கலாய்க்கப்பட்ட இந்த சீரியல் தற்போது முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. அடுத்து 1,000-வது எபிசோடை விரைவில் எட்டும் என்பது ரசிகர்களின் கணிப்பாக இருக்கிறது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Tamilmalar Natarajan
First published: