தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் அண்மையில் இசை அமைத்து, சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும் பாடல்களும் வெகுவாக பாராட்டுகளைப் பெற்றது.
இதற்கு முன்னதாக வெளியான அசுரன் திரைப்படத்திலும் ஜி.வி.பிரகாஷின் இசை பெரிதும் பாராட்டப்பட்ட நிலையில் நடிகராகவும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் நடித்துள்ள ‘பேச்சுலர்’ திரைப்படத்தின் டீசர் கடந்த 13-ம் தேதி வெளியிடப்பட்டது. 20 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றிருக்கும் டீசர் வீடியோ யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்திருக்கிறது.
சதீஷ் செல்வகுமார் என்று புதுமுக இயக்குநர் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி உருவாகியுள்ளதோடு காதலினால் ஏற்படும் பிரச்னைகளையும் பிரதானப்படுத்தி உருவாகியுள்ளது. கோவையைச் சேர்ந்த மாடல் நடிகையான திவ்யபாரதி ஜி.வி.க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்த முன்னோட்டத்தில் நாயகிக்கு அழுத்தமான வசனங்களைக் கொடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் இயக்குநர் சதீஷ் செல்வகுமார். மேலும் இளசுகளைக் கவரும் விதமாக டீசர் அமைந்திருக்கிறது.
பேச்சுலர் படம் தவிர்த்து அடங்காதே, ஜெயில், காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட பல படங்கள் ஜி.வி.பிரகாஷ் படங்கள் நடிப்பில் திரைக்கு வர தயாராகி வருவதும் குறிப்பிடத்தக்கது.