மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகன் ஆகாஷ். இவருக்கும் மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகளுமான சினேகா பிரிட்டோவுக்கும் சிங்கப்பூரில் படித்துக் கொண்டிருந்த போது காதல் மலர்ந்ததாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து 2019-ம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து ஆகாஷை ஹீரோவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் பல முன்னணி இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்நிலையில் இயக்குநர் விஷ்ணுவர்தனின் கதை மிகவும் பிடித்திருப்பதால் அதில் ஆகாஷை ஹீரோவாக நடிக்க வைக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது விஷ்ணுவர்தன் இந்தியில் சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடிக்கும் ‘ஷெர்ஷா’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இத்திரைப்படம் ஜூலை மாதம் திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தை அடுத்து ஆகாஷ் நடிக்கும் படத்தின் முதற்கட்ட வேலைகளை விஷ்ணுவர்தன் கவனிப்பார் என தெரிகிறது.
ஆகாஷ் விரைவில் திரையுலகில் ஹீரோவாக கால்பதிக்க இருக்கும் நிலையில் அவரது அண்ணன் அதர்வா நடிப்பில் குருதி ஆட்டம், தள்ளிப்போகாதே உள்ளிட்ட ஒரு சில படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.