நாணயம், மிருதன், டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டெடி’.ஆர்யா, சாயிஷாவுடன், கருணாகரன், சதீஷ், மகிழ் திருமேனி, சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திருமணத்துக்கு பின்னர் ஆர்யா - சாயிஷா இணைந்து நடித்திருக்கும் படமாகவும் டெடி அமைந்துள்ளது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் பணிகள் முடிவடைந்து கொரோனா அச்சுறுத்தலினால் திரைக்கு வராமல் இருந்தது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆர்யா - சாயிஷாவின் முதல் திருமண நாளன்று இத்திரைப்படத்தின் டீசர் வெளியானது. அப்போதுதான் ஆர்யாவுடன் இந்தப் படத்தில் ‘பொம்மை’ ஒன்று நடித்திருப்பது தெரிய வந்தது. அதனால் குழந்தைகள் மத்தியில் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் மார்ச் 12-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் இத்திரைப்படம் வெளியாகும் என்று அறிவித்த படக்குழு இன்று மாலை 4.30 மணிக்கு ட்ரெய்லர் வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
ஆனால் மாலை 6.20 மணி வரை ட்ரெய்லர் வெளியாகாததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ட்விட்டர் பக்கத்தை குறிப்பிட்டும் தயாரிப்பு நிறுவனத்தின் அக்கவுண்டை டேக் செய்தும் எப்போது ட்ரெய்லர் வெளியாகும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்துக்காக பெரும் தொகை கொடுத்து ‘டெடி’ படம் வாங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அடுத்ததாக ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா, அரண்மனை 3 ஆகிய படங்களின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் அத்திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாக உள்ளன.