ஓவியர் சந்தோஷ் நாராயணனின் 'ட்யூன்' குறும்படம்...!

ஓவியர் சந்தோஷ் நாராயணன் மற்றும் அவரது குழந்தைகள்

சந்தோஷ் நாராயணன் இயக்கிய குறும்படத்தை, இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனோ ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருந்தபடி, தன் குழந்தைகளை நடிக்க வைத்து, 'ட்யூன்' என்ற  குறும்படத்தை இயக்கி இருக்கிறார் ஓவியர் சந்தோஷ் நாராயணன்.

வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி 'சயின்ஸ் பிக்சன்' படத்தை எடுத்துள்ளார். ஸ்பீக்கர், எமெர்ஜென்சி லைட், கொசு பேட் என அறிவியல் சாதனங்கள் இசையையும், அன்பையும் உணர்ந்து கொண்டாடும் 'சயின்ஸ் பிக்சன்' மியூசிக்கஸ் படம் தான் 'ட்யூன்'.

நாகர்கோவிலைச் சேர்ந்த சந்தோஷ் நாராயணன் ஓவியர், எழுத்தாளர், புத்தக அட்டை வடிவமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். திரைத்துறையில் பணியாற்றி வருகிறார்.

சந்தோஷ் நாராயணன் இயக்கிய குறும்படத்தை, இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த குறும்படம் தொடர்பாக இயக்குனர் சந்தோஷ் நாராயணனிடம் பேசினோம்.

ஊரடங்கு காலத்தில் இப்படி ஒரு குறும்படத்தை எடுக்க காரணம் என்ன?

கடந்த ஓராண்டாக பள்ளிகள் இல்லை. குழந்தைகளின் கற்றல்  குறைந்திருக்கிறது. கொரோனா காரணமாக குழந்தைகளை வீட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டிய சூழல்  இருக்கிறது. எனவே, வீட்டில் இருக்கக் கூடிய குழந்தைகளை உற்சாகமாக வைத்துக்கொள்ள நானும், என் மனைவுயும் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். குழந்தைகளை வைத்து புது முயற்சியாக மொபைலில் ஒரு குறும்படம் எடுக்கலாம் என்று முடிவு செய்தேன்.

பின்னர், ஒரு நண்பரிடம் கேமரா பயன்படுத்தி என் மகன் அபிநந்தன், மகள் காயம்பூ மற்றும் மனைவி சர்மிளாவை நடிக்க வைத்து இந்த படத்தை எடுத்தேன். மூன்று நாட்கள் படப்பிடிப்பு செய்தேன். எடிட்டிங், டப்பிங் உள்ளிட்ட பணிகள் நான்கு நாட்கள் செய்து ஒரு வாரத்தில் இந்த குறும்படத்தை உருவாக்கினோம். வீட்டை விட்டு வெளியே போகாமல், வீட்டில் இருக்க கூடிய பொருட்களை பயன்படுத்தி, வீட்டில் உள்ள நபர்களை நடிக்க வைத்து எடுக்கப்பட்ட இது ஒரு 'ஹோம் மேட்' படம் என்று சொல்லலாம்.

இதுபோல் செய்வதால் குழந்தைகள் உற்சாகம் அடைகிறார்கள்.  கிரியேட்டிவாக இருக்கிறார்கள். லைட்டிங், எடிட்டிங் என எதையாவது புதிதாகக் கற்றுக் கொள்கிறார்கள். அதன் அடிப்படையில் இந்த குறும்படத்தை இயக்கினேன்.

சயின்ஸ் ஃபிக்சன் படத்தை எடுக்க என்ன காரணம்?

இயல்பாகவே எனக்கு சயின்ஸ் ஃபிக்சனில் ஆர்வம் அதிகம். ஜாலியாக குழந்தைகளை வைத்து செய்ய வேண்டும் என்பதற்காக சயின்ஸ் பிக்‌ஷனை தேர்வு  செய்தேன். கடந்த ஆண்டு ஊரடங்கின் போது, என் மகள் காயம்பூ வரைந்து, Learn to live with corona என்ற அணிமேஷன் படத்தை உருவாக்கினோம். அது நல்ல வரவேற்பை பெற்றது. ஜெர்மன் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறக்கூடிய திரைப்பட விழாவில் திரையிடப்பட இந்தாண்டு எங்கள் படம் தேர்வாகி உள்ளது. இம்மாத இறுதியில் படத்திற்கு விருது கிடைக்கிறதா என்பது தெரியவரும்.

Also read... சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸ் எப்போ? தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

சயின்ஸ் பிக்சனில், இசை மற்றும் அன்பை பிரதானமாக கொண்டு கதை உருவாக்க என்ன காரணம்?

கொரோனா காலகட்டத்தில், யாரையும் சந்திக்காமல், வீட்டிலேயே இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் இசை தான் அருமருந்தாக இருக்கிறது. எனவே, இசையின் மேன்மையை சொல்ல வேண்டும், நான்கு தலைமுறை இசை கலைஞர்களுக்கும் சமர்பிக்கும் முயற்சியாக இப்படத்திற்கான 'ஸ்கிரிப்ட்' எழுதினேன். தற்போது படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து 5 நிமிட குறும்படங்களை எடுக்க திட்டமிட்டுள்ளேன்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: