Home /News /entertainment /

Exclusive | வைரமுத்துவின் தமிழ் சிறந்தது; அதை பெரிதும் மதிக்கிறேன் - ஏ.ஆர்.ரஹ்மான் பிரத்யேக பேட்டி

Exclusive | வைரமுத்துவின் தமிழ் சிறந்தது; அதை பெரிதும் மதிக்கிறேன் - ஏ.ஆர்.ரஹ்மான் பிரத்யேக பேட்டி

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான்

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் நியூஸ்18தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு கொடுத்த பிரத்யக நேர்காணல்:

தமிழகத்தின் பாரம்பரிய இசையை உலகளவில் கொண்டு செல்லும் நோக்கத்துடன் ‘த ஃப்யூச்சர்ஸ்’ (Ta Futures) என்கிற ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளார் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். அவருடைய பிறந்தநாளான ஜனவரி 6-ம் தேதி இதன் தொடக்க விழா நடைபெற்றது.

அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.

கேள்வி: உங்கள் பிறந்தநாளில் ‘த ஃப்யூச்சர்ஸ்’ எதற்காக தொடங்கப்பட்டுள்ளது? இதன் நோக்கம் என்ன?

பதில்: அமெரிக்காவின் பாஸ்டனில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது குழந்தைகள் படித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அமெரிக்க இசை கலைஞர் டோன் மேகோவரை மீட் பண்ணினேன். அங்கு சிட்டி சிம்பனி இருந்தது. அதேபோல் சென்னையில் செய்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். பரத்பாலாவும் உடன் இணைந்தார்.

நம் மக்கள் மிகவும் கற்பனைத் திறன் மிக்கவர்கள். கற்பனைக்கு உருவம் கொடுத்தால் எப்படி இருக்கும் என்ற முயற்சி தான் இது. சென்னை நகரின் சிறப்புகளை, தமிழ் மொழியின் தொன்மையை, நம் கலாச்சாரத்தின் பாரம்பரியத்தை உலக அரங்கில் கொண்டு செல்லும் முயற்சி தான் இது. பொதுமக்கள், இளைஞர்கள் பங்களிப்புடன் தமிழின் கலை ஆவணப்படுத்தும் வகையில் இது மேற்கொள்ளப்படும்.கேள்வி: 53 வயதை கடந்திருக்கிறீர்கள். இந்த பிறந்த நாளில் யாரை நினைவு கூற விரும்புகிறீர்கள்?

பதில்: வயதை ஏன் நியாபகப்படுத்துக்கிறீர்கள் என்று சிரிப்புடன் தனது பதிலைத் துவங்கிய ஏ.ஆர்.ரஹ்மான், “நிச்சயமாக என் அம்மா. தற்போது உடம்பு சரியில்லாமல் இருக்கிறார்கள். அதேபோல் என் அப்பா. எனக்கு இசையை கற்றுக்கொடுத்தவர். என்னுடைய வழிகாட்டி, குரு, தமிழக மக்கள். அவர்கள் என் மேல் வைத்திருக்கும் அன்பு. அதனால் தான் எங்கு சென்றாலும் மீண்டும் சென்னை வருகிறேன். வெளியே இருந்து கற்றுக்கொண்டதை இங்கு கொடுக்க வேண்டும் என்பது தான்.

கேள்வி: திரையுலகில் 28 ஆண்டுகளை எட்டியிருக்கிறீர்கள். 28 ஆண்டுகளுக்குப் பின்னரும் இப்போதைய இளைஞர்களுக்கு பிடித்த இசையமைப்பாளராக இருக்கிறீர்கள். எப்படி இது சாத்தியமானது?

பதில் : எனக்கு அனைத்தும் இசை தான். என் அப்பா எனக்கு கற்றுக் கொடுத்தது. என் பாடல்கள் வரும் போதும், புதிதாக என்ன தருவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். புதிதாக எதையும் செய்யவில்லையென்றால் போர் அடிக்கும். மக்களுக்கு ஒரு தாகம், எதிர்பார்ப்பு இருக்கிறது. மக்களின் தேடலை பார்க்கும் போது புதிதாக ஏதாவது கொடுக்க வேண்டும் என ஆர்வம் வரும். இது ஒரு கண்ணாடி போல் தான். அவர்கள் என்னிடம் எவ்வளவு எதிர்பார்ப்புடன் இருக்கிறார்களோ, அந்த அளவிற்கு கொடுக்க வேண்டும் என முயற்சிக்கிறேன்.

கேள்வி: கடந்த ஓரிரு ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருகிறீர்கள். பெரும் இடைவெளிக்குப் பிறகு தொடர்ச்சியாக தமிழ் சினிமாவுக்கு இசையமைப்பது எப்படி இருக்கிறது?

பதில்: தமிழில் நிறைய படங்களுக்கு இசையமைப்பது நன்றாக இருக்கிறது. ஆனால், ஹாலிவுட், பாலிவுட்டில் படம் செய்வதில்லை என்ற புகாரும் வருகிறது. அதிகமான படங்கள் செய்ய முடியாமல் போனதற்கு காரணம் என்னுடைய படமான, 99 சாங்ஸ். ‘லீ மஸ்க்’ பட வேலைகளில் இருந்ததால் தான். போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் இரண்டரை ஆண்டுகளை எடுத்துக் கொண்டன. பல புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சினிமாட்டிக் சென்சரி ப்ராஜெக்ட்,  ஹாலிவுட்டுக்காக முதன்முதலாக தமிழ்நாட்டில் சென்னையில் உருவாகிறது. இந்த ஆண்டு இறுதியில் 99 சாங்ஸ் வரும் என நம்புகிறேன். விநியோகஸ்தர்கள் சரியான நாளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல், லீ மஸ்க்யில் 3 போர்சன் உள்ளது; இரண்டு போர்சன் முடிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது முடிக்க இன்னும் மூன்று நான்கு மாதங்கள் ஆகும்.

கேள்வி: பொன்னியின் செல்வன் படத்துக்கு இசையமைத்து வருகிறீர்கள். சரித்திர படத்துக்கு இசையமைப்பது சவாலாக இருக்கிறதா? என்ன புதுமையை எதிர்பார்க்கலாம்?

பதில்: இயக்குனர் மனிரத்னத்துடன் பணியாற்றுவதே பெரிய விஷயம். ஒரு இசையை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மிகவும் ஆற்றல் மிக்கவர். அவருடன் பணியாற்றுவது என்பது சவாலானது. அவருக்கு நான் கொடுக்கும் டியூன்கள் பிடிக்குமா என்ற பயம் இருக்கும். சில நேரங்களில் ஒரு பாட்டுக்கு 15 டியூன் போடுவேன். அவருடன் பணியாற்றுவது ஒரு பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவதை போன்றதுதான். இந்த படத்தில் நிறைய பாடல்கள் உள்ளன. அதை எவ்வாறு காட்சிப்படுத்த உள்ளார் என்பதை எதிர்பார்த்திருக்கிறேன். தற்போது இரண்டு பாடல்களை அவரிடம் கொடுத்திருக்கிறேன். பார்ப்போம்.கேள்வி: மீ டு இயக்கத்துக்கு வெளிப்படையான ஆதரவை தெரிவித்திருந்தீர்கள். பெண்களை மதிக்கும் துறையாக சினிமா இருக்க வேண்டும் என தெரிவித்திருந்தீர்கள். அந்த மாற்றம் நிகழத் தொடங்கியிருக்கிறதா?

பதில்: ஏதாவது தப்பு செய்தால் மாட்டிக் கொள்வோம் என்ற சூழல் உருவாகி இருக்கிறது. இது இரண்டு புறமும் இருக்க வேண்டும். என்னுடைய வாழ்க்கையில் ஸ்டுடியோ அமைத்து தொடங்கும்போது முக்கியமான விஷயம் என்றால், நான் எத்தனை மணிக்கு பாட அழைத்தாலும் வருவார்கள். சுஜாதா 2 மணி 3 மணிக்கு அழைத்தாலும் பாட வருவார்கள். அதுபோல்தான் கடந்த 27 ஆண்டுகளாக இருக்கிறேன். வேலைபார்க்கும் இடம் கோவிலை போல் தான் நினைக்கிறேன். வரும் தலைமுறையினர் இதை பின்பற்றுவார்கள் என நினைக்கிறேன்.

Musician AR Rahman

சினிமா தொழில் என்றாலே ஒரு விதமான கண்னோட்டம் இருக்கிறது. இங்கு கடினமாக உழைத்தால் முன்னுக்கு வரலாம். ஒரு அங்கீகாரம் கிடைக்கும். இந்த துறையில் நிறைய காசு சம்பாதிக்கலாம் . மரியாதை இருக்கிறது. எனவே இந்த துறையில் நம்பகத்தன்மையை அதிகப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

கேள்வி: ஏ.ஆர்.ரஹ்மான் - மணிரத்னம் - வைரமுத்து கூட்டணி என்றாலே எதிர்பார்ப்பு அதிகரிக்கும். ஆனால், பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து இடம்பெறவில்லை என சொல்லப்படுகிறதே?

பதில்: மணிரத்னம் அதை அறிவிப்பார். அவரது அலுவலகத்திலிருந்து அதற்கான அறிவிப்பு வெளிவரும் . நான் அவருக்கு கீழ் பணியாற்ற கூடியவர். கண்டிப்பாக என்னுடைய பாடல்களில் 50% வைரமுத்துவின் பங்கு இருக்கும். தமிழுக்கு அவர் செய்த தொண்டு முக்கியமானது. அவரிடம் இருக்கும் தமிழை பெரிதும் மதிக்கிறேன்.  அவருக்கு வாழ்க்கை முழுவதும் மரியாதை கொடுப்பேன்

கேள்வி: ஒரு புறம் திரைப்படங்களுக்கு இசையமைப்பதோடு, இசை நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வருகிறீர்கள். இரண்டையும் பேலன்ஸ் செய்வதில் சிரமம் இல்லையா?

பதில்: பழகிவிட்டது. மனிதர்கள் செய்ய முடியாது என்று நினைத்தால் செய்ய முடியாது. முடியும் என நினைத்தால் செய்து விடுவோம். என்னுடைய குழுவினர் அனைவருமே சகோதரர்கள், சகோதரிகள் போல் தான் நினைக்கிறேன். அவர்களுடைய நன்மையை நான் விரும்புகிறேன். என்னுடைய நன்மையை அவர்கள் விரும்புகிறார்கள். எனவே அனைத்தையும் செய்ய முடிகிறது.

கேள்வி: இந்த பிறந்தநாளில் உங்கள் ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்ததற்கு நன்றி. உங்களுடைய அன்பிற்கும், என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி. உங்களுடைய வேண்டுதலுக்கு நன்றி. எல்லா புகழும் இறைவனுக்கே.

Exclusive : “நான் தலைமறைவாகவில்லை“ தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் நடிகர் வடிவேலு பதில்
Published by:Sheik Hanifah
First published:

Tags: A.R.Rahman

அடுத்த செய்தி