இந்திய இசை உலகின் முடிசூடா மன்னனாக வலம் வரும் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தனது 53-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.
90-களின் துவக்கத்தில் தமிழ் சினிமாவில் மையம் கொண்ட இசைப்புயல் ஒன்று 25 ஆண்டுகளை கடந்தும் உலக இசை வரலாற்றில் புது சகாப்தங்கள் எழுதிக் கொண்டே இருக்கின்றது. அந்த இசைப்புயலின் பெயர் ஏ.ஆர்.ரஹ்மான். ரோஜா படத்தில் அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மானின் இசை அதுவரை தமிழ் செவிகளுக்கு எட்டிராத புதிய டிஜிட்டல் இசையை தேனாக ஊற்றியது.
அந்த புதுமை ஏ.ஆர். ரஹ்மானுக்கு முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. முதல் திரைப்படத்திலேயே சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றவர் என்ற சாதனையை இன்றளவிலும் தன்வசம் வைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

ஏ.ஆர். ரஹ்மான்
இளையராஜா, டி ராஜேந்தர் என முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் இசை குழுவிலும் பணியாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான் டிஜிட்டல் கருவிகளில் கைதேர்ந்தவர் என்பதால், அன்றைய இசையமைப்பாளர்கள் பலரின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தார். விளம்பரப் படங்கள் உள்பட ஏ.ஆர்.ரஹ்மான் அன்றைய நாட்களில் இசைத்த ஜிங்கிள்ஸ் இன்றும் ரசிகர்களின் மனங்களில் நீங்காத நினைவுகளை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன.
கம்ப்யூட்டரில் இசையமைக்கும் ரஹ்மான் ஒருநாளும் கிராமியப் பாடல்களில் ஜொலிக்க முடியாது என எழுந்த விமர்சனங்களுக்கு உழவன், கிழக்கு சீமையிலே, கருத்தம்மா போன்ற படங்கள் மூலம் பதிலளித்தார்.
தமிழில் ரஹ்மான் இசையமைத்த பல பாடல்களும் பாலிவுட் ரசிகர்களின் கவனம் பெற்று வந்த நிலையில், ரங்கீலா திரைப்படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, இந்தியா முழுவதும் ரசிகர்கள் உருவாகினர்.
பாலிவுட்டில் லகான் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் உலக இசை ரசிகர்களின் செவிகளை தட்டிய ஏ.ஆர்.ரஹ்மான் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கிய மிகக் குறுகிய காலத்தில், ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று 100 கோடி இந்தியர்களுக்கும் பெருமை சேர்த்தார். ஹாலிவுட் அரங்கில் எல்லா புகழும் இறைவனுக்கே என ஏ.ஆர்.ரஹ்மான் தமிழில் பேசியதை இன்றளவும் அவரது ரசிகர்கள் மகிழ்வுடன் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
இனி எட்டித் தொட எல்லைகள் எதுவுமில்லை என்ற அளவில் சாதித்து விட்ட பின்னர் தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் "லீ மஸ்க்" என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். திரைத்துறையில் அறிமுகமாகி 28 ஆண்டுகளை கடந்துவிட்ட இவர், இன்று அறிமுகமாகும் இசையமைப்பாளருக்கு சவால் அளிக்கும் வண்ணம் தனது இசைப் பயணத்தை தொடர்ந்து வருகிறார்.
உலக இசை வரலாற்றில் நீங்காத இடம் பிடித்து தமிழர்களின் கௌரவமாக கொண்டாடப்படும் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாளில் வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.