Home /News /entertainment /

மகள் மீதான புர்கா குறித்த சர்ச்சை - முதல்முறையாக வாய்திறந்த ஏ.ஆர்.ரஹ்மான்!

மகள் மீதான புர்கா குறித்த சர்ச்சை - முதல்முறையாக வாய்திறந்த ஏ.ஆர்.ரஹ்மான்!

தனது மகள்களுடன் ஏ.ஆர்.ரஹ்மான்

தனது மகள்களுடன் ஏ.ஆர்.ரஹ்மான்

புர்கா சர்ச்சை குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளித்துள்ளார்.

சமீபத்தில் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதிஜா புர்கா அணிந்திருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு ட்வீட் செய்திருந்தார். அவரது பதிவில், “எனக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவரது மகளைப் பார்க்குப் போது எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவது போல் உள்ளது. பாரம்பரியமிக்க குடும்பத்தில் உள்ள படித்த பெண்கள் கூட எளிதாக மூளைச்சலவை செய்யப்படுவது வேதனையாக இருக்கிறது” என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா, ஒரு வருடமாக இந்த விவகாரம் சுற்றி வருகிறது. நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் மக்கள் ஒரு பெண் என்ன ஆடையை அணிய வேண்டும் என்பதில் கவனத்தைச் செலுத்துகின்றனர்.

ஒவ்வொரு முறையும் இந்த விவகாரம் விஸ்வரூபமெடுக்கும் போது என்னுள் எரியும் தீ பல்வேறு விஷயங்களைச் சொல்வதற்கு என்னைத் தூண்டுகிறது. பல ஆண்டுகளாகப் பல்வேறு குணாதிசயங்களை  கடந்த ஒரு வருடமாக நான் கண்டுவிட்டேன். என்னுடைய வாழ்க்கையில் நான் எடுத்த முடிவுகளை எண்ணி பலவீனமடையவோ வருத்தப்படவோ மாட்டேன்.

நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக் கொள்பவர்களுக்கு நன்றி. என்னுடைய பணிகள் மட்டுமே பேசும். மேற்படி நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. இதற்கு நான் ஏன் விளக்கமளிக்கிறேன் என்று நினைத்தால், தனக்காக ஒருவர் பேசியாக வேண்டியிருக்கிறது. அதனால் தான் இதைச் செய்கிறேன்.

அன்புள்ள தஸ்லிமா நஸ்ரின், என்னுடைய ஆடையால் உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். எனது உடையால் எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதில்லை. அதற்குப் பதிலாக எனக்குப் பெருமையாகவும் நான் ஏற்றுக் கொண்ட விஷயத்தில் உறுதியாகவும் உணர்கிறேன்.

உண்மையான பெண்ணியம் என்றால் என்னவென்று கூகுள் செய்து பார்க்கவும். அது மற்ற பெண்களைத் தரக்குறைவாக பேசுவதும், அவரது தந்தை பெயரை இணைத்துப் பேசுவதும் அல்ல. உங்களுடைய ஆய்வுக்காக நான் எனது புகைப்படத்தை உங்களுக்கு அனுப்பியதாக நினைவில் இல்லை” இவ்வாறு தஸ்லிமா நஸ்ரினுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா பதிலளித்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், “நமது பிரச்னைகளையும், சங்கடங்களையும் புரிந்துகொள்வது மாதிரி பிள்ளைகளை வளர்ப்பதுதான் சரியான ஒன்றாக நான் பார்க்கிறேன். நம்மிடம் உள்ள நல்லது, கெட்டதை அவர்களும் எடுத்துக் கொள்வார்கள். பிள்ளைகளுக்கான சுதந்திரத்தை நான் கொடுத்திருக்கிறேன். அதில் கதிஜா தேவையானதை செய்து கொள்கிறார்.

இப்பதிவை கதிஜா சமூகவலைதளத்தில் பதிவிடுவதற்கு முன் என்னைக் கேட்கவில்லை. அதன் பின்னரே நான் பதிவிட்டேன். இது அவரது விருப்பம். மத ரீதியிலான காரணங்களைக் கடந்து ஒவ்வொருவரின் உளவியல் ரீதியான பிரச்னை என நான் இதை நினைக்கிறேன். கதிஜா அஹிம்சா என்ற ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். அதை 10 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்களது காலர் டியூனாக வைத்திருக்கிறார்கள்.

ஆண்கள் புர்கா அணியலாம் என்றிருந்தால் நான் கூட புர்கா அணிவேன். ஏனெனில் மிக எளிதாக வெளியில் செல்லலாம். ஷாப்பிங் செய்யலாம். நான் நினைக்கிறேன் கதிஜா தனது சுதந்திரத்திற்காக புர்கா அணிந்திருக்கலாம்” என்றார்.

மேலும் படிக்க: 'நான் சொல்லியும் கேட்கவில்லை...' இந்தியன்2 விபத்து குறித்து கிரேன் ஆபரேட்டர் பரபரப்பு வாக்குமூலம்
Published by:Sheik Hanifah
First published:

Tags: AR Rahman

அடுத்த செய்தி