2014 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் திகில் திரைப்படமாக பிசாசு திரைப்படம் வெளியானது. படத்தின் நாயகனாக நாகா, நாயகியாக பிரியங்கா மார்ட்டின் நடிந்திருந்தனர். நாயகியின் தந்தையாக ராதாரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிந்திருந்தார்.திகில் திரைப்படமாக இருந்தாலும் தந்தை மகளுக்கு இடையேயான அன்பின் ஆழத்தை உணர்த்தும் படமாக அமைந்து பிசாசு திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் வெற்றிப்பெற்றது.
இதையடுத்து மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படத்தில் நடிக்க நடிகை ஆண்ட்ரியா ஒப்பந்தமாகியுள்ளார்.நேற்று ஆண்ட்ரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் படக்குழுவினரால் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் உருவான கதையை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அதில் ‘இடது புறத்தில் இருப்பது எனது பாட்டி, அவர் இளம் பெண்ணாக இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. அவரின் கூந்தல் மற்றும் கண்களை பார்க்கும் பொழுது அவர் இந்த இடத்தை சேர்ந்தவர் போல் எனக்கு தோன்றவில்லை. பிசாசு 2 படத்தின் கதையை முதன்முதலில் நான் கேட்ட போது எனது பரம்பரையை கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு பார்த்தேன். உடனே பழைய புகைப்படங்களை இயக்குநருக்கு அனுப்பினேன். இயக்குநருக்கும் இந்த புகைப்படம் மிகவும் பிடித்ததால் பாட்டியின் புகைப்படத்தை வைத்து ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தை ரீகிரியேட் செய்தோம்’ என பதிவிட்டுள்ளார்.