Home /News /entertainment /

குறுகிய வட்டத்துக்குள் இருக்கிறீர்கள்... மகளிர் தின விழாவில் இருந்து வெளியேறிய அமீர்..!

குறுகிய வட்டத்துக்குள் இருக்கிறீர்கள்... மகளிர் தின விழாவில் இருந்து வெளியேறிய அமீர்..!

இயக்குநர் அமீர்

இயக்குநர் அமீர்

பெண்கள் எந்த ஆடை அணிய வேண்டும் என்பது குறித்த பேச்சால் அமீர் சர்ச்சை

  • News18
  • Last Updated :
பெண்கள் எவ்வாறு உடை உடுத்த வேண்டும், செக்ஸ் கல்வி எப்படி இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்து மோதல்களால் மகளிர் தின விழாவில் இருந்து இயக்குனர் அமீர் பாதியிலேயே வெளியேறினார்.

மகளிர் தினத்தையொட்டி சென்னை வடபழனியில் பெண்கள் இயக்கும் குறும்படம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர்கள் அமீர், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அமீர் பேசும்போது, ஆண்களைப் போல பெண்கள் உடை அணிந்துகொள்வதும், முடி வெட்டிக் கொள்வதும் மட்டும் அவர்களுக்கு சுதந்திரத்தை பெற்று தராது. அதைத்தாண்டி அறிவு சுதந்திரமும், ஆளுமை சுதந்திரமும் அவசியம் என்று குறிப்பிட்டார். டிக் டாக் மூலம் பெண்கள் தங்கள் ஆடைகளை குறைத்துக் கொண்டு தங்களை ஒரு போகப் பொருளாக காட்டி வருவது அதிகரித்து வருவதாகவும் பெண்ணுக்கு பெண்ணே இங்கு எதிரியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அப்போது கூட்டத்தில் சிறு சலசலப்பு தோன்றியது. அதன் பின்னர் பெண்களின் செக்ஸ் உணர்வு குறித்த முதல்மழை என்ற குறும்படம் வெளியிடப்பட்டது. அது முடிந்தவுடன் இப்படித்தான் ஒரு குறுகிய வட்டத்திற்குள் நீங்கள் இருக்கிறீர்கள் இதைத்தாண்டி நீங்கள் வெளியே வர விருப்பவில்லை. எனவே இந்தக் கூட்டத்திலிருந்து நான் விடை பெறுகிறேன் என்று சொல்லி அமீர் வெளியேறினார்.
இதையடுத்து நிர்வாகிகள் அவரை சமாதானப்படுத்தி உள்ளே அழைத்து வந்தனர். இதையடுத்து அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த எழுத்தாளர் கொற்றவை மேடையில் பேசினார்.

பெண்களின் அந்தரங்கம் குறித்து இந்த குறும்படம் தெளிவாக விளக்கி இருக்கிறது; இதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பினார். என்ன உடை உடுத்த வேண்டும் என்று ஆண்கள் பெண்களுக்கு கட்டுப்பாடு விதிக்க தேவையில்லை என்றார் அவர். ஆடைதான் சமூகத்தில் பெண்கள் மீதான வன்முறைக்கு காரணம் என்றால் 2 வயது குழந்தை என்ன ஆடை உடுத்தியதால் வன்புணர்வுக்கு ஆளாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். ஆணாதிக்க சிந்தனை மிகுந்த சமூகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த சூழ்நிலையில்  இந்த உடைதான் உடுத்த வேண்டும் என்றால் அதை எப்படி ஏற்றுக் கொள்வது என்றும் அவர் குறிப்பிட்டார்.

செக்ஸ் கல்வி அவசியம்தான். ஆனால் அதை குழந்தைகளின் விளையாட்டு மைதானத்தில் எப்படி வெளிப்படையாக பேச முடியும் என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து அமீருக்கு ஆதரவாகவும், கொற்றவைக்கு ஆதரவாகவும், கைதட்டல்கள் எழுந்தன. கடைசியில் அமீரின் கருத்துக்களுக்கு கொற்றவை ஒத்துப்போகவில்லை. கொற்றவையின் கருத்துக்களுக்கு அமீர் ஒத்துப்போகவில்லை.மொத்தத்தில் பல்வேறு விவாதங்களை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் ஒரு நிகழ்ச்சியாகவே மகளிர் தின கருத்தரங்கம் அமைந்திருந்தது.

Also See...
Published by:Gunavathy
First published:

அடுத்த செய்தி