வித்தியாசமான நிகழ்ச்சிகளை விரும்பும் ரசிகர்கள் மத்தியில் விஜய் டிவிக்கு ஒரு தனி இடமே உள்ளது. சீரியல் ஆக இருந்தாலும் சரி சிங்கிங், டான்சிங் அல்லது ரியாலிட்டி ஷோவாக இருந்தாலும் சரி விஜய் டிவியையும், தான் எடுத்துக்கொண்ட கான்செப்ட்டிற்காக விஜய் டிவியின் குழுக்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளையும் அடித்துக்கொள்ள ஆளே இல்லை எனலாம்.
இதற்காகவே ஒவ்வொரு விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கும் ஒரு தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் ஒட்டுமொத்த விஜய் டிவி ரசிகர்களுக்குமே பிடித்த ஒரு ஷோ உள்ளதென்றால் - அது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். இது எளிமையான மக்களின் இசை திறமைகளை கண்டுபிடித்து, அவர்களுக்கு அங்கீகாரம் அளித்து, சினிமா வரை கொண்டு சேர்க்கும் ஒரு அற்புதமான நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் தற்போது சினிமா துறையில் பின்னணி பாடகர்களாகவும், சின்னத்திரை பிரபலங்களாகவும் உருமாறியுள்ளனர்.
அந்த பட்டியலில், தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்து இருக்கும் அஜய் கிருஷ்ணாவிற்கும் ஒரு இடம் உண்டு. பிரபல சினிமா பாடகர் உதித் நாராயணன் குரலில் பல பாடல்களை பாடி அசத்திய அஜய் கிருஷ்ணா தன் சொந்த குரலிலும் அற்புதமாக பாடும் திறன் கொண்டவர்.
Read More : 2 நாட்களில் 2 கோடி பார்வைகளைக் கடந்த விக்ரம் படத்தின் முதல் சிங்கிள்... ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்
பெரிய அளவில் சினிமாவில் பாடும் வாய்ப்புகளை பெறவில்லை என்றாலும் கூட, கோமாளி திரைப்படத்தில் ஒளியும் ஒலியும் பாடலை பாடி உள்ளார். சில மாதங்களுக்கு முன்னதாக இவருக்கும் ஜெஸ்ஸி என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. தற்போது இந்த காதல் ஜோடி திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.
ஆம்! அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி திருமணம், நேற்று இனிதே நடந்து முடிந்தது. இது குறித்த திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் விஜய் டிவி மற்றும் அஜய் கிருஷ்ணா ரசிகர்களுக்கு மத்தியில் வைரல் ஆகி வருகிறது. பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு தனது காதலி ஜெஸியை கரம் பிடித்துள்ள அஜய் கிருஷ்ணாவிற்கு சின்னத்திரை பிரபலங்கள், சூப்பர் சிங்கர் பிரபலங்கள், நண்பர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ அஜய் கிருஷ்ணாவிற்கும் ஜெஸிக்கும் திருமணம் நடந்து முடிந்து இருந்தாலும் கூட இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஆரம்பத்தில் இவ்விருவரின் காதலுக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் கிளம்பின. ஒருவழியாக சில ஆண்டுகளாக நீடித்த அஜய் கிருஷ்ணா மற்றும் ஜெஸ்ஸியின் காதல் கல்யாணத்தில் முடித்துள்ளது. மேலும் இவர்களின் திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைப்பெற்றுள்ளது. திருமணம் மட்டுமின்றி நேற்று மாலையே ஒரு பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்து முடிந்தது. அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி ரிசெப்ஷன் நிகழ்ச்சியில் பல்வேறு விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.