இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய லாஸ்லியா தமிழ் பிக்பாஸ் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டதைப் போல் இந்தமுறை தமிழகத்தைச் சேர்ந்த அனிதா சம்பத் பங்கேற்றார். இந்த சீசனில் போட்டியாளர்கள் குழுவாக விளையாடுவதாக விமர்சனங்கள் எழுந்த போது அதில் சேராமல் தனியாக தெரிந்த அனிதா சம்பத், வீட்டில் எழுந்த ஒவ்வொரு பிரச்னையையும் தனியாகவே சமாளித்தார்.
எதற்கெடுத்தாலும் அதிகம் பேசுகிறார், பிரச்னையை பெரிதாக்குகிறார் என்றெல்லாம் அனிதா மீது மற்ற போட்டியாளர்கள் குறை கூறினாலும், சுமங்கலிகள் முதலில் வர வேண்டும் என்ற அர்த்தத்தில் சுரேஷ் சக்ரவர்த்தி கூறியதற்கு சரியான பதிலடி கொடுத்து கமல்ஹாசனின் பாராட்டைப் பெற்றார். அதுமட்டுமின்றி ‘இரத்தக் கண்ணீர்’ எம்.ஆர்.ராதாவாக பிக்பாஸ் வீட்டில் அனிதா நடித்துக் காட்டியதும் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
கடந்த வாரம் ஆரி பேசும் போது, தனது குடும்பத்தைப் பற்றி பேச வேண்டாம் என பத்ரகாளியாக மாறிய அனிதாவைப் பார்த்த பார்வையாளர்கள் சிறிய விஷயத்துக்கு ஏன் இவ்வளவு கோப்படுகிறார் அனிதா என்று சமூகவலைதளங்களில் கமெண்ட் பதிவிட்டதையும் பார்க்க முடிந்தது. அதன் எதிரொலி தானோ என்னவோ வார இறுதியில் குறைந்தவாக்குகளைப் பெற்று நேற்று நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த போது அதிகம் தனது கணவரை மிஸ் செய்வதாக தெரிவித்த அனிதாவை முதலில் ஹனிமூனுக்கு திட்டமிடுங்கள் என்று போட்டியாளர்கள் அட்வைஸ் கொடுக்க நேற்று இறுதியாக பிக்பாஸ் வீட்டில் செய்தி வாசித்து முடித்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் சமூகவலைதளத்தில் என்ன பதிவிடப்போகிறார் அனிதா என்று பிக்பாஸ் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் அவரது கணவர் பிரபாகரன் தன்னுடைய தேவசேனா திரும்ப வந்துவிட்டதாக காதலுடன் பதிவிட்டிருக்கிறார். பின்னணியில் பாகுபலி பட பாடல் ஒலிக்கிறது.