நடிகர் ஆரி பிக்பாஸ் நான்காவது சீசனின் டைட்டிலை வென்றதை அடுத்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர் நடித்திருக்கும் பகவான், அலேகா, எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துக்குவான் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் ஆரி நடிக்க இருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் அபின் இயக்கத்தில் ஷவுரியா புரொடக்ஷன்ஸ் சுப்பையா மற்றும் அபின் ஃபிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாகவும், வித்யா பிரதீப் நாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் முனிஷ்காந்த் உட்பட பலரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இன்வெஸ்ட்டிகேசன் க்ரைம், கமர்சியல் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இத்திரைப்படத்தில் முதல்முறையாக ஆரி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவியாளராக பணியாற்றிய ஸ்டெர்லின் நித்யா இந்தப் படத்தின் இசையமைப்பாளராகவும்,
பிரபல ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் ஆயிரத்தில் ஒருவன், வேலைக்காரன், தனி ஒருவன் இரண்டாம் உலகம் ஆகிய படங்களுக்கு உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிவி கார்த்திக் ஒளிப்பதிவாளராகவும், நயன்தாரா நடித்த நெற்றிகண் படத்தில் கலை இயக்குனராக பணியாற்றிய கமலநாதன் இப்படத்தில் கலை இயக்குனராகவும் பணியாற்றுகின்றனர்.
விஜயின் மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் வரிகள் மூலம் உலக தமிழ் மக்களை திரும்பி பார்க்க வைத்த புகழ்பெற்ற பிரபல பாடலாசிரியர் விவேக் பாடலாசிராயராகவும் மற்றும் படத்தொகுப்பாளராக அருள் சித்தார்த், சண்டை பயிற்சி இயக்குனராக சக்தி சரவணன் ஆகியோரும் பணியாற்றுகின்றனர்.
அறிமுக இயக்குநர் அபின் மீது எல்லையில்லா அன்பும் கதையின் கருவில் உள்ள சுவாரசியத்திற்காகவும் பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகர் இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகங்களைக் கொண்டு தமிழில் பல வெள்ளி விழா சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஆர்.சுந்தரராஜன் ஆகிய இருவரும் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினர்.
மேலும் படிக்க: தயாரிப்பாளர்களை நஷ்டப்பட வைப்பதாக நயன்தாரா, ஆன்ட்ரியா மீது குற்றச்சாட்டு
இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி அடுத்தடுத்த கட்டங்களாக மதுரை, திண்டுக்கல், பழனி உள்ளிட்ட நகரங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.