சித்ராவை சந்தேகப்படவில்லை... போலீஸ் கூறுவது அனைத்தும் பொய் - ஜாமின் கோரி ஹேம்நாத் மனு

சித்ராவை சந்தேகப்படவில்லை... போலீஸ் கூறுவது அனைத்தும் பொய் - ஜாமின் கோரி ஹேம்நாத் மனு

கணவர் உடன் மறைந்த நடிகை சித்ரா

தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கக் கூடாது எனக் கூறி சந்தேகப்பட்டதால் தான் சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் கூறும் குற்றச்சாட்டு பொய்யானது என்று ஹேம்நாத் ஜாமின் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

  • Share this:
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த டிசம்பர் 9-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தற்கொலை என வழக்கு பதிவு செய்த நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சித்ராவின் கணவர் ஹேம்நாத் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் ஹேம்நாத் தான் சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

டிசம்பர் 14- ம் தேதி கைது செய்யப்பட்ட ஹேம்நாத், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கக் கூடாது எனக் கூறி, சித்ரா மீது சந்தேகம் கொண்டதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தனக்கு எதிராக காவல் துறையினர் கூறும் குற்றச்சாட்டு பொய்யானது என ஹேம்நாத் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தாங்கள் திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடனும், தனது குடும்பத்தினருடனும் சித்ரா அன்போடு பழகியதை அவரது தாய் விரும்பவில்லை எனவும் மனுவில் தெரிவித்திருக்கும் ஹேம்நாத், தனக்கும், சித்ராவுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும் எந்த குற்றமும் செய்யாததால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தபோது, ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதால், பதிலளிக்க இரு வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விசாரணைக்கு சென்ற நடிகை சித்ரா கணவர் ஹேம்நாத்


ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக சித்ராவின் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவினரை எதிர்மனுதாரராக சேர்க்க மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய காவல் துறைக்கும் உத்தரவிட்டார். பின், ஜாமின் மனுவுக்கு ஜனவரி 18-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டார்.



உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: