தமிழ் சினிமாவில் ஹீரோயின், குணசித்திர வேடம், காமெடி என பல வெரைட்டிகளில் திறம்பட நடித்து ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்து உள்ளவர் நடிகை ஊர்வசி. 1980-கள் மற்றும் 1990-களில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் பிரபல மற்றும் முன்னணி நடிகையாக இருந்தார்.
மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞர், தொலைக்காட்சி தொகுப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் உள்ளிட்ட பணிகளையும் சிறப்பாக செய்து வருகிறார். சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதை பல முறை வென்றுள்ளார். மேலும் இவர் 2 முறை தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார்.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் ஜனவரி 25, 1967-ல் பிறந்த இவரது இயற்பெயர் கவிதா ரஞ்சினி என்பதாகும். சிறு வயது முதலே சினிமா மீது ஆர்வம் கொண்டிருந்தார். எனவே இயல்பாகவே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இவருள் ஏற்பட்டது. பாக்யராஜுடன் சேர்ந்து 'முந்தானை முடிச்சு' திரைபடத்தில் நடித்து தமிழ் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனார். உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'மைக்கேல் மதன காமராஜன்' திரைப்படத்தில் கமலுடன் சேர்ந்து இவர் செய்திருக்கும் காமெடி இன்றளவும் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும். நடிகை ஊர்வசி கடந்த 2000-மாவது ஆண்டில் பிரபல மலையாள நடிகர் மனோஜ் கே. ஜெயனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நடிகர் மனோஜ் கே. ஜெயன் தமிழில் தளபதி, தூள், திருமலை, ஜனா, திருப்பாச்சி, திருட்டுப்பயலே, வில்லு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களது வாழ்க்கை சில மாதங்கள் மட்டுமே நல்லபடியாக சென்றது. இருவருக்கும் ஒரு மகள் பிறந்த நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில ஆண்டுகள் பிரிந்தே வாழ்ந்தனர். 2008-ல் விவாகரத்து பெற்றனர். 2011-ல் மனோஜ் கே. ஜெயன் ஆஷா என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
Also Read : போலீஸுக்கு சொல்ல முடியுமா? உதவி கோரிய நடிகை மும்தாஜ் வீட்டிலிருந்த பணிப்பெண் - சென்னையில் பரபரப்பு
இந்நிலையில் 2013-ஆம் ஆண்டு நடிகை ஊர்வசி சென்னையை சேர்ந்த பில்டரான சிவபிரசாத் என்பவரை தனது 45-ஆவது வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து
2014-ஆம் ஆண்டு தனது 46-ஆவது வயதில் இரண்டாவது கணவர் மூலமாக மீண்டும் கர்ப்பமானார். 2014-ஆம் ஆண்டு இறுதிக்குள் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் நடிகை ஊர்வசி. 46 வயதில் இரண்டாவது கணவர் மூலம் ஊர்வசி குழந்தை பெற்றெடுத்த செய்தி அப்போது தமிழ் ரசிகர்களால் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் தனது கணவர் சிவபிரசாத் மற்றும் மகனுடன் ஊர்வசி எடுத்து கொண்டுள்ள ஃபேமிலி போட்டோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இப்போது தான் ஊர்வசி குழந்தை பெற்றெடுத்த செய்தியை கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறது. அதற்குள் இவ்வளவு பெரியவனாக வளர்ந்து விட்டானே என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.