• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஆண்களுக்கு நிகராக திரைத்துறையில் உச்சம் பெற்ற நடிப்புப் பேரருவி ஸ்ரீதேவியின் பிறந்தநாள்!

ஆண்களுக்கு நிகராக திரைத்துறையில் உச்சம் பெற்ற நடிப்புப் பேரருவி ஸ்ரீதேவியின் பிறந்தநாள்!

  • News18
  • Last Updated :
  • Share this:
நடிப்புப் பேரருவி என்று இயக்குனர் பாலுமகேந்திராவால் போற்றப்பட்ட ஸ்ரீதேவியின் 57-வது பிறந்தநாள் இன்று. 100 ஆண்டுகால இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகிகளை எப்போது பட்டியலிட்டாலும் அதில் முதன்மை இடத்தில் இருக்கக்கூடியவர் ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என கிட்டத்தட்ட 57 ஆண்டுகாலம் இந்திய சினிமாவை தன்னுடைய நடிப்புத் திறமையால் ஆட்சி செய்தவர்.

1963-ம் ஆண்டு சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி என்ற கிராமத்தில் ஐயப்பன் – ராஜேஸ்வரி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார் ஸ்ரீதேவி. அவர் நான்கு வயதில் துணைவன் படத்தின் மூலம் திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். ஸ்ரீதேவி பிறவிக் கலைஞர் அல்ல. ஆனால், ஸ்ரீதேவியின் அம்மா நடிப்பை வாழ்வாக்கும் விதமாக அவரை வளர்த்தார். சிறுவயதிலேயே ஒவ்வொரு மொழிக்கும் ஒரு ஆசிரியரைப் பணியமர்த்தி மொழிகளைச் கற்றுக் கொடுத்தார் அவரது அம்மா. சினிமாவின் ஒளி வெள்ளம் ஸ்ரீதேவியின் பால்யகாலத்தை அடித்துச்சென்றது.

பெற்றோருடன் ஸ்ரீதேவி


முதல் படத்திலேயே தமிழ்க் கடவுள் முருகன் வேடத்தில் நடித்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அந்தப் படத்தில் நாகேஷ், சௌகார் ஜானகி, மேஜர் சுந்தர்ராஜன், வி.எஸ்.ராகவன் போன்ற ஜாம்பவான்களுடன் திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

முருகன் வேடத்தில் ஸ்ரீதேவியின் மழலை முகம் கச்சிதமாக பொருந்திப் போனதால, அடுத்தடுத்து முருகன் வேடங்களே அமைந்தன. பின்னர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் விதவிதமான குழந்தை கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற ஸ்ரீதேவிக்கு, 1971-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ’பூம்பட்டா’ எனும் படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

இப்படத்தில் சித்தியின் கொடுமைக்கு ஆளாகி மீளும் சாரதா எனும் முதன்மையான சிறுமி கதாபாத்திரத்தில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தினார் ஸ்ரீதேவி. இந்தப் படத்துக்காக 8 வயதில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள அரசின் விருதையும் பெற்றார்.

முருகன் வேடத்தில் ஸ்ரீதேவி


தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த ஸ்ரீதேவியை ‘மூன்று முடிச்சு’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் செய்தார் கே.பாலசந்தர். மூன்று முடிச்சு படத்தில் தொடங்கிய கமல் – ரஜினி – ஸ்ரீதேவி எனும் மூவர் கூட்டணி அடுத்த ஆண்டு வெளியான 16 வயதினிலே படத்தில் உச்சம் பெற்றது.

16 வயதினிலே படத்தை முதலில் ’மயில்’ எனும் தலைப்பில் எடுக்கத்தான் இயக்குநர் பாரதிராஜா திட்டமிட்டிருந்தார். ஏனென்றால், இப்படத்தின் கதை, ஸ்ரீதேவி ஏற்று நடித்திருந்த மயில் கதாபாத்திரத்தைச் சுற்றியே அமைந்திருக்கும். இதை நன்கு உணர்ந்த ஸ்ரீதேவி, பாரதிராஜாவின் கற்பனைக் கதாபாத்திரத்திற்கு தன்னுடைய அசாத்திய நடிப்புத் திறமையால் உயிர் கொடுத்தார்.

கண்கள் முழுவதும் கனவுகளுடன் சுற்றித்திரியும் பதின்பருவ மயில், டாக்டர் மேல் காதல் கொள்ளும் மயில், பின்னர் அவரால் ஏமாற்றப்பட்டு கமலுக்கு ஆதரவாக நிற்கும் மயில் என ஒரே படத்தில் பலவிதமான நடிப்பை வெளிப்படுத்தி முத்திரை பதித்ததார் ஸ்ரீதேவி. இதன்மூலம் காலம் கடந்தும் தமிழ் ரசிகர்களின் மனங்களை ஆட்சி செய்து வருகிறார்.

16 வயதினிலே மயிலாக ஸ்ரீதேவி


16 வயதினிலே படத்தில் ரசிக்க வைத்த கமல் – ஸ்ரீதேவி ஜோடி, அடுத்தடுத்து பல படங்களில் ஒன்றாக இணைந்தனர். ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘மீண்டும் கோகிலா’, ‘வாழ்வே மாயம்’, ‘குரு’  என இந்த ஜோடி ஒவ்வொரு முறையும் திரையில் இணைந்தபோதெல்லாம் இளைஞர்களின் படையெடுப்பால் திரையரங்குகள் திருவிழா கோலம் பூண்டன. ஒருவகையில் 80-களில் கமல் ஹாசன், காதல் மன்னனாக வலம் வந்ததற்கு ஸ்ரீதேவியும் மறைமுக காரணமாக இருந்தார்.

குறிப்பாக இந்த ஜோடி இணைந்த மூன்றாம் பிறை திரைப்படம் இந்திய சினிமாவின் மைல்கல் என கொண்டாடப்படுகிறது. பாரதிராஜாவுக்கு அடுத்தப்படியாக ஸ்ரீதேவியின் நடிப்புத் திறனை முழுமையாக பயன்படுத்தியவர் பாலு மகேந்திரா.விஜி எனும்  18 வயதுப் பெண் 8 வயதுக்குரிய வளர்ச்சியுடன் குழந்தை தன்மையுடன் நடித்திருப்பார். ஸ்ரீதேவி இப்படத்தில் வெளிப்படுத்திய அபார நடிப்புக்கு அவருக்கு கட்டாயம் தேசிய விருது கிடைக்கும் என்றே எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் இவருக்கு பதில் கமல்ஹாசன் அந்தாண்டிற்கான தேசிய விருதை தட்டிச்சென்றார். தன்னைவிட ஸ்ரீதேவியே இப்படத்தில் சிறப்பாக நடித்ததாக கமல்ஹாசன் பாராட்டினார்.

பாலுமகேந்திரா ஸ்ரீதேவியின் நடிப்பைப் பற்றி ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார் “ஸ்ரீதேவி போன்ற காட்டருவிகளைத் தாங்க கமலஹாசன் போன்ற கற்பாறைகள்தான் வேண்டியிருந்தது” எனக் கூறியிருந்தார். நடிப்பில் காட்டருவியாக இருந்தவர் ஸ்ரீதேவி.

தொடர்ந்து குழந்தைத்தனமான கதாபாத்திரங்களில் மட்டுமே இவரால் நடிக்க முடியும் என்று தன்மீது விழுந்த இமேஜை, ஜானி படத்தின் மூலம் சுக்குநூறாக அடித்து நொறுக்கினார் ஸ்ரீதேவி. எதிலும் யதார்த்தத்தை விரும்பும் மகேந்திரன், ஜானி படத்தில் ஸ்ரீதேவியின் வேறொரு பரிணாமத்தைத் திரையில் கொண்டுவந்தார்.இறுக்கமான முகத்துடனும், ரகசியம் நிறைந்த கண்களுடனும் பாடகியாக ஜானியில் ஸ்ரீதேவியை பார்த்தபோது ஒட்டுமொத்த தமிழ் முகமும் திகைத்துப்போனது. இதன்மூலம் மிகையில்லாத நடிப்பிலும் தன்னால் சோபிக்க முடியும் என்பதை ஆழமாக உணர்த்தியிருப்பார். குறிப்பாக ரஜினியிடம் இவர் தன் காதலை வெட்கத்துடன் வெளிப்படுத்தும் அந்தவொரு காட்சியே, இவருடைய நடிப்பை சிலாகிக்க போதுமானதாக இருக்கும்.

தொடர்ந்து, தனிக்காட்டு ராஜா, போக்கிரி ராஜா, அடுத்த வாரிசு, நான் அடிமை இல்லை என கமலை போலவே ரஜினியுடன் இவர் இணைந்து நடித்த படங்களும் மாபெரும் வரவேற்பைப் பெற்றன.தன்னுடைய அசாத்திய திறமையால் மெல்ல மெல்ல கதாநாயகர்களுக்கு இணையாக கொடிக்கட்டி பறக்கத் தொடங்கிய ஸ்ரீதேவி, அதன்மூலம் ஆண் நடிகர்களின் ஆதிக்கம் நிறைந்த தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் படையையும், பாக்ஸ் ஆபீஸில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தையும் உருவாக்கினார்.

ஒருகட்டத்தில் இவருடைய நடிப்புக்காகவும் வசீகர தோற்றத்திற்காகவும் மட்டுமே வெள்ளிவிழா கண்ட படங்களும் இருக்கின்றன. ரஜினி, கமல் என ஸ்டார் நடிகர்களுடன் ஸ்ரீதேவி நடித்த படங்கள் வெளியானபோது அவர்கள் முகம் பொருந்திய பேனர்களுக்கு இணையாக ஸ்ரீதேவியின் பேனர்களும் கட் அவுட்களும் திரையரங்குகளை அலங்கரித்த காட்சிகளும் அந்நாளில் அரங்கேறின.

80-களில் அதுவரை வேறெந்த தமிழ் நடிகையும் அடைந்திராத ஸ்டார் அந்தஸ்தைத் தன்வசப்படுத்தி இருந்தாலும், கதைக்குத் தேவைப்பட்டால் அந்த ஸ்டார் இமேஜை தூக்கி எறியவும் அவர் தயங்கியதில்லை. அந்தவகையில் ரஜினி, கமல் என உச்ச நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த அதே வேளையில் சிவகுமார், விஜயகுமார் என மற்ற நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து பிரமிக்க வைத்தார்.சிறு வயதிலேயே ஹீரோயினாக நடிக்கத் தொடங்கியதால் தலைமுறைகள் கடந்தும் ஹீரோயினாக நடித்த ஒரே நாயகி எனும் அபூர்வ சாதனையையும் படைத்தார். உதாரணத்திற்கு 80-களில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகேஸ்வர ராவுக்கு ஜோடியாக நடித்த இவர், 90-களில் அவருடைய மகன் நாகர்ஜுனாவுக்கும் ஜோடியாக நடித்து ஆச்சரியப்படுத்தினார்.

80-களின் தொடக்கத்தில் தென்னக மொழிகளில் கொடிக்கட்டிப் பறந்த ஸ்ரீதேவி, அதன்வழியாக இந்தி திரையுலகிலும் கால் பதித்தார். அன்றைய காலக்கட்டத்தி தமிழ் நாயகிகள் இந்தியில் நடிப்பதே அபூர்வம். ஆனால், இதை தன்னுடைய திரை ஆளுமையின் மூலம் முறியடித்த ஸ்ரீதேவி, பாலிவுட்டிலும் அசைக்க முடியாத முன்னணி நாயகியாக உருவெடுத்து வரலாறு படைத்தார்.தமிழைப் போல இந்தியில் ஸ்ரீதேவிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு உடனடியாக கிடைத்துவிடவில்லை. அங்கு அவர் அறிமுகமான ’சோல்வா சாவண்’ படம் படுதோல்வியடைந்தது. எனினும் துவண்டுவிடாமல் அடுத்தடுத்து வந்த வாய்ப்புகளைக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்ட அவர், இந்தி திரையுலகில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாதனை நாயகியாக வலம்வந்தார்.

திரைத்துறையில் உச்சத்தில் இருந்தபோது தன்னைவிட 8 வயது மூத்தவரான பிரபல இந்திப்பட தயாரிப்பாளர் போனி கபூரை மணந்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். பல சர்ச்சைகளுக்கு மத்தியில் போனி கபூரை கரம்பிடித்த ஸ்ரீதேவி, தன்னுடைய திரை வாழ்க்கையைப் போலவே இல்லற வாழ்க்கையிலும் வெற்றிகரமாக பயணித்து வந்தார்.தன்னுடைய மகள்களுக்காக நடிப்பில் இருந்து ஒதுங்கியதாக அறிவித்த ஸ்ரீதேவி, மகள்கள் வளர்ந்ததும் மீண்டும் நடிக்கத் திரும்பினார். அந்தவகையில் 14 ஆண்டுகாலம் பெரிய இடைவெளி விட்டு மீண்டும் வெள்ளித்திரைக்கு ஸ்ரீதேவி எண்ட்ரி கொடுத்தபோது, அவரை வழியனுப்பி வைத்த கைகள் அதே உற்சாகத்தோடு அவரை மீண்டும் அரவணைத்துக் கொண்டன.

2012-ம் ஆண்டு வெளியான இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்டு சாதிக்கும் சசி எனும் கதாபாத்திரத்தில் வசீகரம் குறையாத தோற்றத்துடன் நடித்த ஸ்ரீதேவி, இப்படத்தின் மூலம் இன்றைய தலைமுறை அம்மாக்களின் மனதில் தன்னம்பிக்கையை விதைத்தார்.

இன்று ஹீரோயின்களை முன்னிலைப்படுத்தி பாலிவுட்டில் அடுத்தடுத்து பல படங்கள் வருவதற்கு முன்னோடியாக இருந்தது ஸ்ரீதேவியின் ’இங்கிலீஷ் விங்கிலீஷ்’. தன்னுடைய ரீ என்ட்ரி படம் மூலம் மீண்டும் டிரென்ட் செட்டராக உருவெடுத்தார் ஸ்ரீதேவி.கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கழித்து புலி படத்தின் மூலம் மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்த ஸ்ரீதேவி, இதில் வில்லி கதாபாத்திரத்தில் தோன்றினார். ஒருகாலத்தில் ரஜினி, கமல் என தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களுடன் டூயட் பாடிய ஸ்ரீதேவிக்கு விஜய், அஜித் என இன்றைய தலைமுறை ஸ்டார்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் காலம் பெற்றுத்தந்தது.

ஸ்ரீதேவி கேட்டதற்காக ஒரு கணம் கூட யோசிக்காமல் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுத்தார் அஜித். ஸ்ரீதேவியின் மீது அடுத்த தலைமுறை நடிகர்கள் வைத்திருக்கும் மரியாதைக்கு இதுவே சான்று.

மிகச்சிறப்பான நடன அசைவுகளை வெளிப்படுத்திய இந்திய நடிகைகளில் ஸ்ரீதேவிக்கு எப்போதும் தனி இடம் இருக்கும். தன்னுடைய 50தாவது வயதிலும் பிரபுதேவாவுடன் இணைந்து ஒரு மேடையில் இவர் ஆடிய நடனம் ரசிகர்களிடையே பிரமிப்பை ஏற்படுத்தியது.இந்திய சினிமாவில் ஸ்ரீதேவி காலடி எடுத்து வைத்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் கடந்த ஆண்டு அவர் நடிப்பில் மாம் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி இருந்தது. தன் மகளின் நிலையைக் கண்டு கலங்கி போகும் தாய், அதற்குப் பழிதீர்க்கும் தாய் என இரண்டு மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்திய ஸ்ரீதேவிக்கு அந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2018-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி தேசிய விருதைப் பெறாமலேயே அவர் மறைந்தார். அவர் மறைந்த செய்தி ஒட்டுமொத்த இந்திய திரை ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது.

ஒரு நடிகையாக தான் அடைந்த உயரங்களை எல்லாம் பொருட்படுத்தாமல், தான் ஒரு சிறந்த தாய் என்பதையே தனக்கான கௌரவமாக கருதும் ஸ்ரீதேவி, தன்னுடைய மகள் ஜான்வி கபூரை நாயகியாக்கி அழகுபார்க்க வேண்டும் என்பதையே பெரிதும் விரும்பினார். அவர் விரும்பியபடியே முதல் படத்தில் ஜான்வி கபூரின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டு, தாயை போலவே சிறந்த நடிகை என்ற பெயரையும் அவருக்குப் பெற்றுத்தந்தது. எனினும் ஜான்வி கபூரின் முதல் படம் வெளியாவதற்குள்ளாகவே ஸ்ரீதேவியின் மரணம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தி சென்றது.எந்தவொரு பின்னணியும் இல்லாமல் தன்னுடைய விடாமுயற்சியால் தனக்கான பாதையை தானே வடிவமைத்து, அடுத்த தலைமுறை நாயகிகள் பயணிக்கவும் ஒரு புது பாதையை வகுத்தவர். தன்னிகரில்லா நட்சத்திரமாக கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலம் இந்திய திரையுலகை அலங்கரித்தார் நடிப்புப் பேரருவி ஸ்ரீதேவி. இவர் மறைந்தும் ஒளிவீசும் நட்சத்திரம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: