வெள்ளித்திரை பிரபலங்களுக்கு ரசிகர் பட்டாளம் இருப்பது போல் சின்னத்திரை நடிகர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். வாரத்தில் 5 நாட்களில் வீட்டின் வரவேற்பரைக்கே வரும் சீரியல்களுக்கு பெரும்பாலும் பெண்களே அதிகமாக ரசிகர்களாக இருப்பார்கள். ஆனால் இப்போது ஆண்களும் சின்னத்திரை தொடர்களின் ரசிகர்களாகி விட்டார்கள் என்றே சொல்லலாம்.
இந்நிலையில் சீரியல் நடிகை ரச்சிதா தனது தீவிர ரசிகரான கார்த்திக் என்ற மாற்றுத்திறனாளியின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று அவரைச் சந்தித்துள்ளார். கார்த்திக்கும் ரச்சிதாவைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைகிறார். தனது ரசிகரை சந்தித்து பேசியது அவருக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தது உள்ளிட்டவற்றை தனது சமூகவலைதள பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார் ரச்சிதா. அந்த வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னட சீரியல்களில் நடித்திருப்பவர் நடிகை ரச்சிதா. பிரிவோம் சந்திப்போம் தொடரின் மூலம் அறிமுகமான ரச்சிதா, தன்னுடன் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரில் பிரபலமான ரச்சிதா, ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் தனது கணவர் உடன் இணந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான நாச்சியார்புரம் தொடரில் நடித்தார். ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் சமீபத்தில் முடிவடைந்தது.