Home /News /entertainment /

கஜா பாதிப்பு: ரசிகர்களை களத்தில் இறக்கிய விஜய் சேதுபதி!

கஜா பாதிப்பு: ரசிகர்களை களத்தில் இறக்கிய விஜய் சேதுபதி!

நடிகர் விஜய்சேதுபதி

நடிகர் விஜய்சேதுபதி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை நடிகர் விஜய் சேதுபதி வழங்கியுள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை நடிகர் விஜய் சேதுபதி வழங்கியுள்ளார்.

    தமிழகத்தை தாக்கியுள்ள கஜா புயலால் இதுவரை இல்லாத அளவில் கிராமப்புற மக்கள், விவசாயிகள், மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் நாகை மாவட்டம், நாகப்பட்டினம், வேதாரண்யம், தலைஞாயிறு, கீழையூர், கீழ்வேளூர் வட்டாரப்பகுதிகள் கடுமையான சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதுடன் விவசாயிகளின் 20 ஆண்டுகால உழைப்பையும் நாசம் செய்துள்ளது இந்தப் புயல் சீற்றம்.

    இதனால் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பலரும் நிவாரணப் பொருட்களையும், நிதியுதவியையும் அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருக்கும் மக்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருள்களை ( சார்ஜிங் டார்ச்லைட், தென்னை - பலா மரக்கன்றுகள்) நிவாரண உதவியாக வழங்கியுள்ளார்.

    இதுகுறித்து விஜய் சேதுபதி தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ”கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார வசதி முழுமையாக திரும்பவதற்கு பத்து தினங்கள் ஆகும் என்பதால், அவர்களுக்கு உடனடியாக தேவைப்படும் சார்ஜிங் டார்ச்லைட் ஆயிரக்கணக்கில் வழங்கப்படும். லட்சக்கணக்கான மரங்கள் அழிந்து நாசமாகிவிட்டதால், அதற்கு முன்னுரிமை கொடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் தோப்புகளை முழுவதுமாக புனரமைத்து தரப்படும். அவர்கள் தங்களின் பிள்ளைகள் போல் வளர்த்து வந்த தென்னை, பலா போன்ற மரங்களின் கன்றுகளை, மீண்டும் அவ்விடத்தில் புதிதாக நட்டு வைக்கப்படும். இதற்கான களப்பணிகளில் என்னுடைய ரசிகர்களும் ஈடுபடுவார்கள். நிவாரண நிதி தேவைப்படுபவர்களை ரசிகர் மன்றத்தின் மூலம் கண்டறிந்து அவர்களுக்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் நிவாரண நிதி வழங்கப்படும்“ என்றார்.

    இதனிடையே கஜா புயல் மற்றும் கனமழையின் காரணமாக உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ள விஜய் சேதுபதி, அந்த குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யவிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

    வீடியோ பார்க்க: டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Actor vijay sethupathi, Cyclone Gaja

    அடுத்த செய்தி