வீட்டை காலி செய்து தரும்படி நடிகர் விஜய் போலீசில் புகார்

வீட்டை காலி செய்து தரும்படி நடிகர் விஜய் போலீசில் புகார்

நடிகர் விஜய்

தனக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு இருந்து வரும் 2 பேரை காலி செய்து தரும்படி விஜய் தரப்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தில் அகில இந்திய செயலாளராக இருந்து வந்த ரவிராஜா, துணை செயலாளர் ஏ.சி.குமார் ஆகியோரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து இயக்க பொறுப்பாளர் ஆனந்த் கடந்த நவம்பர் மாதத்தில் நீக்கம் செய்து அறிவித்தார்.

இயக்கத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தல், தவறான செய்திகளைப் பரப்புதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இருவர் மீதும் வைக்கப்பட்டதோடு மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இருவரும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் ஆதரவாளர்களாக செயல்பட்டதாகவும் அவர் நடத்திய ஆலோசனை கூட்டங்களில் பங்கெடுத்ததாகவும் கூறப்படுகிறது.

ரவிராஜா, ஏ.சி.குமார் இருவரையும் நடிகர் விஜய் சாலிகிராமத்தில் உள்ள தனக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைத்துள்ளார். மக்கள் இயக்க பொறுப்பில் இருந்து அவர்கள் நீக்கப்பட்டிருப்பதால் வீட்டை காலி செய்யும் படி நடிகர் விஜய் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2 பேரும் காலி செய்யவில்லை.

இதையடுத்து நடிகர் விஜய் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ரவிராஜா, ஏ.சி.குமார் இருவரும் வீட்டை காலி செய்து தரும்படி புகார் மனு அளித்துள்ளார். விஜய் தரப்பில் அவரது வழக்கறிஞர்கள் புகார் மனுவை அளித்துள்ளனர்.

விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக தனது தந்தை பதிவு செய்த தகவல் வெளியான போதே அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிவித்த விஜய், தனது ரசிகர்கள் யாரும் அக்கட்சியில் சேர வேண்டாம் என்றும் அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து விஜய் மக்கள் இயக்கத்தில் இருக்கும் எஸ்.ஏ.சி ஆதரவாளர்களை களையெடுக்கும் பணி தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதேவேளையில் தனது பெயரில் எஸ்.ஏ.சந்திரசேகர் கட்சி தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது. பொங்கல் முடிந்து ஒரு நல்ல செய்தியை வெளியிடுவேன் என்று விஜயின் தந்தை சமீபத்தில் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: