பிகில் படத்தை பார்த்துக் கொண்டே சிகிச்சைப் பெற்ற சிறுவன்- நேரில் சந்திக்க நடிகர் விஜய் அழைப்பு

பிகில் படம் பார்த்து சிகிச்சை பெற்ற சிறுவன்

காயத்துக்கு கிசிச்சை பெற மறுத்த நிலையில், பிகில் படத்தை பார்த்து சிகிச்சைபெற்று குணமடைந்த சிறுவனை நேரில் சந்திக்க நடிகர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.

  • Share this:
    சென்னை மயிலாப்பூர் கணேசபுரத்தைச் சேர்ந்த இந்த 10 வயது சிறுவனின் பெயர் சசிவர்ஷன். தன்னுடைய மாமா அரவிந்த் என்பவருடன் கடந்த செவ்வாயன்று இரவில் மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்றுள்ளார். அண்ணாசாலை அருகே பட்டுலாஸ் சாலையில் இவர்கள் சென்றுகொண்டிருந்த போது பின்சீட்டில் அமர்ந்திருந்த சிறுவன் சசிவர்ஷன் தூக்கக்கலக்கத்தில் சாலையில் தவறி விழுந்துள்ளான்.

    கீழே விழுந்ததில் நெற்றி, முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்த சிறுவனை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நெற்றியில் பலத்த காயம் இருந்ததால் அவருக்கு தையல் போட மருத்துவர்கள் முடிவு செய்து முதலில் ஊசி போட முயன்றனர். ஆனால் பயத்தில் அலறிய சசிவர்ஷன் ஊசி செலுத்த ஒத்துழைக்காமல் மறுத்துள்ளான்.

    எவ்வளவு முயன்றும் மருத்துவர்களின் சிகிச்சைக்கு அவன் ஒத்துவராததால் மருத்துவர்கள் என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கினர். அப்போது அங்கு இரவுப் பணியில் இருந்த தன்னார்வலர் ஜின்னா என்பவர் சிறுவனை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

    உனக்கு என்ன பிடிக்கும் என தன்னார்வலர் ஜின்னா கேட்டதற்கு எனக்கு நடிகர் விஜயைப் ரொம்பப் பிடிக்கும் எனவும் அவருடைய தீவிர ரசிகர் என்று சிறுவன் சசிவர்ஷன் கூறியுள்ளான். இதனையடுத்து, செல்போனில் வைத்திருந்த நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தை போட்டு சிறுவனிடம் கொடுத்திருக்கிறார் ஜின்னா.

    வலியை மறந்த சிறுவன் மெய் மறந்து பிகில் படம் பார்த்துக் கொண்டிருந்த போது ஊசி போட்டு அதன் பின்னர் தையல் போட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.

    விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கு வலி தெரியாமல் இருக்க நடிகர் விஜய்யின் பிகில் படத்தை போட்டுக் காண்பித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்த சம்பவத்தை விஜய் ரசிகர்கள் சமூக வலைதங்களில் கொண்டாடி தீர்த்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த நிலையில், காயம்பட்ட சிறுவன் சசிவர்ஷனை நேரில் அழைத்து பேச நேரம் ஒதுக்கியுள்ளார் விஜய். உடல்நிலை சரியானதும் சிறுவனை நடிகர் விஜய் சந்திப்பார் என விஜய் மக்கள் இயக்கத்தினர் கூறியுள்ளனர்.
    Published by:Karthick S
    First published: