Home /News /entertainment /

ஹாப்பி பர்த்டே வடிவேலு!

ஹாப்பி பர்த்டே வடிவேலு!

நடிகர் வடிவேலு

நடிகர் வடிவேலு

  • News18
  • 2 minute read
  • Last Updated :
    தமிழ் சினிமா அகராதியில் இருந்து தவிர்க்கவே முடியாத ஒரு மாபெரும் காமெடி கலைஞன் வடிவேலு. தமிழர்களின் வாழ்வோடு கலந்துவிட்ட நடிகர் வடிவேலுவின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது

    ராஜ்கிரண் நடிப்பில் 1991-ம் ஆண்டில் வெளியான 'என் ராசாவின் மனசினிலே' படம்தான் வடிவேலு திரையில் அறிமுகமான படம். இப்படத்தில் இளையராஜா இசையில் போடா போடா புண்ணாக்கு எனும் பாடலை பாடி முதல் படத்திலேயே ஒரு நடிகராகவும் பாடகராகவும் தன் பெயரை தமிழ் சினிமாவில் வடிவேலு பதிவு செய்தார்.

    தொடர்ந்து என் தங்கை கல்யாணி, சின்ன கவுண்டர் திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்த வடிவேலு, காதலன் திரைப்படம் மூலம் பிரபலமானார். காமெடியனாக மட்டுமல்லாமல் சிவாஜி, கமல் ஹாசன் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் இணைந்த தேவர் மகன் படத்தில் தனது குணச்சித்திர நடிப்பாலும் எல்லாரையும் கலங்க வைத்தார்.

    நடிகர் - வடிவேலு


    அந்த காலகட்டத்தில் அசைக்க முடியாத நகைச்சுவை அரசர்களாக வலம்வந்து கொண்டிருந்த கவுண்டமணி மற்றும் செந்தில் இணையுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றி தனக்கான தனித்துவத்தையும் அதில் பதித்தார். பின்னாளில் யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனியாகவே காமெடிக் காட்சிகளில் அசத்தும் அளவுக்கு வடிவேலு வளர்ச்சி அடைந்தார். இவர் எழுதி நடித்த காமெடி காட்சிகளுக்காகவே ஓடிய திரைப்படங்கள் ஏராளம்.

    மேலும் திரையில் இவர் ஏற்று நடிக்காத வேடங்களே இல்லை எனலாம். அதோடு கைப்புள்ள, நாய் சேகர், அலார்ட் ஆறுமுகம், ஸ்நேக் பாபு என வடிவேலு நடித்த கதாபாத்திரங்களின் பெயரும் அவர் பேசிய பல வசனங்களும் இன்று தமிழர்களின் பேச்சு மொழியாகவே மாறிவிட்டது. காமெடியனாக மட்டுமல்லாமல் சில படங்களில் நாயகனாகவும் வடிவேலு நடித்துள்ளார். இதில் இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் வெளியான ஆண்டில் அதிகம் வசூல் செய்த படங்களில் ஒன்றாக வெற்றி வாகை சூடியது.

    வடிவேலு - பார்த்திபன்


    கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டாலும் மீம்ஸ் வாயிலாக சமூக வலைதளங்களிலும் வடிவேலுவின் ராஜ்ஜியம்தான் தொடர்கிறது. எந்த படத்தின் போஸ்டர், டிரைலர் வெளியானாலும் அரசியல் களத்தில் எந்த மாற்றங்கள் நிகழ்ந்தாலும் வடிவேலு வெர்ஷன் எனும் பெயரில் அதை நகையாடும் அளவு தமிழர்களின் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகவே  வடிவேலு கலந்துவிட்டார்.

    தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டின் குடும்ப அட்டையிலும் பெயர் பதிக்காமல் வாழ்ந்து வரும் ஒரு தவிர்க்க முடியாத கலைஞன் வடிவேலு. 59-வது பிறந்த நாளை இன்று கொண்டாடிவரும் வடிவேலுவை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது நியூஸ் 18 தமிழ்நாடு.

    ALSO READ...

    படங்களில் நடிக்க நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு திடீர் தடை!

    ALSO WATCH...



    மீம்ஸ்களின் மாம்ஸ்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Vadivelu

    அடுத்த செய்தி