கொரோனா ஊரடங்கால் கடந்த இரண்டு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் படங்களை வெளியிட முடியாமல் தவிக்கின்றனர் தயாரிப்பாளர்கள். இதனிடையே வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களை கருத்தில் கொண்டு OTT நிறுவனங்கள் புதிய படங்களை டிஜிட்டலில் வெளியிட ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் வரும் 29-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக உள்ளது.
OTT தளத்தில் படத்தை வெளியிட்டால் சூர்யா, ஜோதிகா நடிக்கும் திரைப்படங்களை திரையரங்கில் வெளியிடமாட்டோம் என திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த எதிர்ப்புகளையும் மீறி இத்திரைப்படத்தை அமேசான் பிரைமில் வெளியிட சூர்யா முடிவெடுத்தார்.
பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை OTT தளத்தில் வெளியிடுவது குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் நடிகர் சூர்யா, “திரையரங்குகளில் கிடைக்கும் ஆரவாரத்துக்கும் கொண்டாட்டத்துக்கும் ஈடே கிடையாது. அதேசமயம் தொழில்நுட்ப வளர்ச்சியை நம்மால் தள்ளி வைக்க முடியாது. ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளை பிடிப்பதில் கடும் போட்டி இருக்கும் சூழலில் மாற்று வழியை கண்டறிவது அவசியமாக உள்ளது. மேலும் வணிக எல்லைக்கு அப்பாற்பட்டு எடுக்கப்படும் மாற்று சினிமாக்களுக்கு OTT நல்ல தளமாக உள்ளது. இதனால் நாங்கள் திரையரங்குகளை புறக்கணிக்கிறோம் என்று அர்த்தமல்ல.
மீண்டும் படப்பிடிப்பு துவங்க இரண்டு மாதங்கள் வரை ஆகலாம். முதலில் உட்புற படப்பிடிப்பு பின்னர் வெளிப்புற படப்பிடிப்பை துவங்கலாம். ஆனால் அதிலும் கட்டுப்பாடு அவசியம். திரையரங்குகளின் சூழலை பொறுத்தவரை ஹாலிவுட்டில் கிறிஸ்டஃபர் நோலனின் ‘டெனெட்’படம் வெளியாகி அதற்கு கிடைக்கும் ஆதரவை கொண்டு முடிவெடுக்கலாம்” என்று கூறியுள்ளார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.