கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு ₹10 லட்சம் நிதி உதவி அளித்திருக்கும் நடிகர் சித்தார்த் 'கேரளா டொனேஷன் சேலஞ்ச்' என்ற ஹேஷ் டேக்கையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இது குறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2018 - ம் ஆண்டின் பருவமழை கேரளாவிற்கு மிக மோசமாக அமைந்துள்ளது. இந்த மழை வெள்ளம் மாநிலத்தை ஸ்தம்பிக்க செய்துள்ளதோடு பல உயிர்களை பலி வாங்கியுள்ளது. இந்த இயற்கை பேரழிவை சமாளிக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் உதவியையும், ஒத்துழைப்பையும் கோரியுள்ளார்.
அந்த உதவிகளை நிவாரண நிதியாகவும், நிவாரண பொருட்களாகவும் கொடுக்கலாம். ஆனால் இந்த விஷயம் கவனிக்கப்படாமல் இருப்பது மிகுந்த வேதனையையும், வலியையும் தருகிறது. தமிழகத்தில் கடந்த 2015 - ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது தேசிய ஊடகங்கள் எப்படி பொருட்படுத்தவில்லையோ அதே போல் கேரள வெள்ளத்தையும் கண்டும் காணாமலிருக்கின்றன.
கேரள மழை வெள்ளம் தமிழகத்தை விட மோசமான பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில் கேரள மக்களுக்கு உதவுவது ஒவ்வொரு இந்தியரின் கடமை. நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் அங்கு மாற்றத்தை ஏற்படுத்தும். சமூக வலைதளங்களின் மூலமாக இந்த செய்தியை பரப்புவது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். நான் ₹10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளேன். உங்களால் முடிந்த சிறிய உதவியையாவது செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். கேரளா டொனேஷன் சேலஞ்ச் என்ற ஹேஷ் டேக் மூலம் தங்களது பங்களிப்பை செலுத்தி மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருப்பதோடு இதை அனைவரின் கவனத்திற்கும் எடுத்துச் செல்லலாம்” என்று கூறப்பட்டுள்ளது.
கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்க விரும்புவோர் கவனத்திற்கு:
CHIEF Minister's Relief Fund
A/C No. - 67319948232
Branch : City Branch, Thiruvananthapuram
IFSC :SBIN0070028
Swift Code: SBININBBT08
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.