உதயநிதியுடன் அரசியல் பயணத்துக்கு திட்டமிருக்கிறதா? சந்தானம் பளீச் பதில்

நடிகர் சந்தானம்

உதயநிதியுடன் அரசியலில் பயணிக்கும் திட்டமிருக்கிறதா என்ற கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்துள்ளார் நடிகர் சந்தானம்.

  • Share this:
இயக்குநர் ஜான்சன்.கே இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘A1’. இத்திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் ஜான்சன்.கே இயக்கத்தில் மீண்டும் இணைந்தார் நடிகர் சந்தானம். ‘பாரிஸ் ஜெயராஜ்’ என்ற டைட்டிலுடன் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக அனைகா சோடி, சஷ்டிகா ராஜேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு ஆர்தர் கே.வில்சன் ஒளிப்பதிவாளராகவும், பிரகாஷ் பாபு படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். படத்தின் ட்ரெயலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் பிப்ரவரி 12-ம் தேதி ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

இதையடுத்து படத்தின் புரமோஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது படக்குழு. இந்நிலையில் இன்று படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது. அப்போது உதயநிதி நடிக்க வந்த போது அவருடன் நடித்து வளர்ச்சிக்கு உதவியாக இருந்தீர்கள் இப்போது அரசியல் களத்தில் இருக்கும் அவருடன் இணைந்து பணியாற்றுவீர்களா? அப்படி ஏதாவது திட்டம் இருக்கிறதா என்று சந்தானத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த நடிகர் சந்தானம், “ராஜ்யசபா எம்.பி பதவி கொடுத்தால் ஏதாவது செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறேன். போன முறை இதுபோல் தான் நான் பாஜகவில் இணைய இருப்பதாக கேள்வி எழுப்பினீர்கள். எனது படத்தைப் பற்றிக் கேட்பதை விட அதைப்பற்றித்தான் பலரும் என்னிடம் போன் செய்து கேட்டார்கள். இப்போது செய்யும் வேலையை சரியாக செய்ய வேண்டும். அவருடன் இணைந்து நடித்த போது முழு முயற்சியாக படம் வெற்றி பெற வேண்டும் என்று உழைத்தோம். இப்போது படத்தில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்” என்றார்.
Published by:Sheik Hanifah
First published: