ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

திமுகவில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்த போஸ் வெங்கட்

திமுகவில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்த போஸ் வெங்கட்

போஸ் வெங்கட்

போஸ் வெங்கட்

திரைத்துறை பிரபலமும் திமுக தலைமை கழக பேச்சாளருமான போஸ் வெங்கட் தனது விருப்பமனுவை தாக்கல் செய்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தங்களது உறுப்பினர்களிடம் விருப்ப மனுக்களை பெறத் தொடங்கி விட்டன. சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள திமுகவினர் பிப்ரவரி 17-ம் தேதி முதல் வருகின்ற 24 -ம் தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம் என்றும் ரூ.25,000 கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார்.

அதன்படி விருப்பமனு வினியோகம் சூடுபிடித்துள்ளது. 5-வது நாளான இன்று வரை 4,100 மனுக்கள் தற்போது வரை வினியோகம் செய்யப்பட்டுள்ளன. 500க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் கட்சித் தலைமையிடம் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு விருப்ப மனுவை தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போஸ் வெங்கட், “தொடர்ச்சியாக பல்வேறு காரணங்களால் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி கூட்டணி கட்சிகளுக்கு சென்ற நிலையில் இந்த முறை அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியை திமுகவிற்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

ஒருவேளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயமாக அறந்தாங்கி தொகுதியில் வெற்றி பெறுவேன். நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அந்த ஐந்து ஆண்டுகளும் சினிமாவில் நடிக்க மாட்டேன். சென்னைக்கு வரமாட்டேன், தொகுதிக்காக முழுமையாக பாடுபடுவேன்” என தெரிவித்தார்.

இதனிடையே சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசுக்கு மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரணி பொறியாளர் அணி உள்ளிட்ட ஆறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்கு விருப்ப மனுவை தாக்கல் செய்தனர்.

Published by:Sheik Hanifah
First published:

Tags: DMK, Kollywood, TN Assembly Election 2021