நேர்கொண்ட பார்வை திரைப்படத்தைத் தொடர்ந்து, எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படத்தின் பணிகள் 2019ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கின. எதிர்பாராத கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்றதால், படம் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனால், வலிமை திரைப்படத்தின் அப்டேட் வேண்டுமென டிவிட்டரில் குரல் கொடுத்த அஜித் ரசிகர்கள், கோயிலில் பூஜை செய்வது, என அலப்பறையைக் கூட்ட இங்கிலாந்து கிரிக்கெட் மைதானம் வரை வலிமை அப்டேட் என்ற வார்த்தை வைரலாக பரவியது.
இதையடுத்து, அஜித் ரசிகர்களின் ஆர்வத்தை உணர்ந்த படக்குழுவினர் வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக், முதல் பாடலை வெளியிட்டு அவர்களை சமாளித்தனர். படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் பணிகளும் நிறைவடைந்து, ஒரே ஒரு சண்டைக் காட்சி மட்டும் மீதம் இருந்த நிலையில், சமீபத்தில் ரஷ்யாவில் இந்த காட்சிகள் படமாக்கப்பட்டது.
தொடர்ந்து, ரஷ்யாவில் படப்பிடிப்பை நிறைவு செய்த நடிகர் அஜித், அங்கு தனக்கு பிரியமான பைக்கில் தனியாக 5,000 கி.மீ சுற்றி வந்ததாக தகவல்கள் வெளியானது. தொடர்ந்து, ரஷ்யாவில் அஜித் பைக்கில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், தற்போது டெல்லி சென்றுள்ள நடிகர் அஜித், அங்கு தாஜ்மஹாலில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. தொடர்ந்து, டெல்லியில் உலகம் முழுக்க பைக்கிலேயே சுற்றி வந்த சாகசப் பெண்மணியான மாரல் யாசர்லூவை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் பைக்கில் உலக பயணம் மேற்கொள்ள தேவையான ஆலோசனையும் கேட்டறிந்துள்ளார்.
இதுவரை 7 கண்டங்களையும், 64 நாடுகளையும் பைக்கிலேயே சுற்றிய மாரல் யாசர்லூ, 1 லட்சத்திற்கும் அதிகமான கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளார். மாரல் யாசர்லூ உடனான இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தையும், தகவலையும் நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.