’தமிழில் நடிப்பது மகிழ்ச்சி ஆனால் ஒரு வருத்தம்' - சன் டிவி சீரியல் நடிகை அக்ஷிதா

சீரியல் நடிகை அக்ஷிதா

வேறு மொழியில் இருந்து வந்தாலும் தமிழில் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியை கொடுப்பதாக கண்ணான கண்ணே சீரியலில் நடிக்கும் நடிகை அக்ஷிதா தெரிவித்துள்ளார்.

  • Share this:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கன்னட பதிப்பான ’வரலட்சுமி ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்து பிரபலமான அக்ஷிதா, ’அழகு’ சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தன. ‘தாழம்பூ, ரெறக்க கட்டி பறக்குது மனசு’ சீரியலில்களில் தனது தனித்துவமான நடிப்புகள் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது ‘கண்ணாண கண்ணே’ சீரியலில் நடித்து வரும் அவர், தன்னுடைய சீரியல் அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியல் 200 எபிசோடுகளை கடந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும், அதில் எனக்கும் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் கூடுதல் மகிழ்ச்சி என அக்ஷிதா தெரிவித்துள்ளார். வேறு மொழியில் இருந்து தமிழ் சீரியலுக்குள் நுழைந்த தனக்கு முதலில் தமிழ் சுத்தமாக தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.



தன் மீது நம்பிக்கை வைத்து இயக்குநர்கள் கொடுத்த வாய்ப்புகளின் காரணமாக அடுத்தடுத்த சீரியல்களில் நடித்ததாக தெரிவித்துள்ள அவர், தமிழ் சீரியல் உலகின் போற்றத்தகுந்த விஷயமே திறமையானவர்கள் எங்கிருந்து வந்தாலும், அவர்கள் மீது அன்பையும், மரியாதையையும் பொழிகிறார்கள் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.



கண்ணாண கண்ணே சீரியல் தனக்கு 4வது சீரியல் எனத் தெரிவித்துள்ள அக்ஷிதா, அந்த சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் நடிப்புக்கு தேவையான தமிழை ஒரே மாதத்தில் கற்றுக்கொண்டதாகவும் அக்ஷிதா கூறியுள்ளார். தற்போது சரளமாக தமிழில் பேச முடியும் என அவர் தெரிவித்துள்ளார். டப்பிங்குடன் படமாக்கப்படாததால் முதலில் டப்பிங் கலைஞர்கள் தனக்கு தொடக்கத்தில் குரல் கொடுத்ததாகவும் அக்ஷிதா தெரிவித்துள்ளார்.



கொரோனா காரணமாக பாதுகாப்பு வழிமுறைகளுடன் ’கண்ணான கண்ணே ’ சீரியல் படமாக்கப்படுவதாகவும், கலைஞர்கள் பலருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் அக்ஷிதா தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் கோனிகோப்பாவில் இருப்பதாகவும், கொரோனா காரணமாக அவர்களை பார்க்க செல்ல முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். கட்டுப்பாடு தளர்வுகள் கிடைத்தவுடன் விரைவில் பெற்றோரை சென்று சந்திப்பேன் எனத் தெரிவித்துள்ள அக்ஷிதா, கன்னட சினிமாவிற்கு செல்வீர்களா? என்ற கேள்விக்கு சாண்டில்வுட் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக மாற வேண்டும் என விரும்புவதாக அக்ஷிதா தெரிவித்துள்ளார்.



படங்களில் நடித்துள்ளதாகவும், பி5, திரிவிக்கிரமா படங்கள் வெளியீட்டிற்கு தயாராக இருப்பதாக அக்ஷிதா கூறினார். கன்னட சீரியலில் நடிக்க விருப்பம் இருந்ததாகவும் கண்ணான கண்ணே சீரியலுக்கு சென்னையில் இருக்க வேண்டியிருந்ததால், அந்த வாய்ப்பை இழந்தது வருத்தம் என கூறியுள்ளார். இவர் ஏற்கனவே ரியல் போலீஸ், பிரம்மச்சாரி, ஐ லவ் யூ போன்ற கன்னட படங்களில் நடித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: