மத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த சரியான நேரமல்ல என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.
வேகமாக பரவி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், திரைத்துறை பிரபலங்கள் பலரும் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவி வருவதைக் கட்டுப்படுத்த இரவு பகல் பாராமல் உழைத்து வரும் மருத்துவர்கள், காவல் துறையினர், செவிலியர்களைப் பாராட்டி அவர்களுக்கு நன்றி தெரிவித்து, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “தன்னலமின்றி, தைரியமாக மருத்துவமனைகளில் வேலை செய்து கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இந்தியா முழுக்க பணியாற்றும் அனைவருக்கும் நன்றி சொல்லவே இந்த செய்தி. இந்த மோசமான தொற்று பரவிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர்கள் இதைக் கையாள எவ்வளவு தயாராக இருக்கிறாரகள் என்று நினைக்கையில் நெஞ்சம் நிறைந்துவிட்டது. நமது உயிரைக் காப்பாற்ற அவர்கள் உயிரைப் பணயம் வைக்கின்றனர்.
இப்படியான தருணத்தில் வேற்றுமையை மறந்து ஒற்றுமையாக இருந்து கண்ணுக்கு தெரியாத கிருமியை எதிர்த்து போராடுவதே நம் நோக்கமாக இருக்கவேண்டும். மனிதம், ஆன்மீகம் ஆகியவற்றின் அழகைச் செயலில் கொண்டு வரும் நேரம். அண்டை வீட்டாருக்கு, மூத்த குடிமக்களுக்கு, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, ஏழைகளுக்கு உதவி செய்வோம்.
கடவுள் உங்கள் மனதில் இருக்கிறார். அதுதான் பரிசுத்தமான கோயில். இப்போது மத வழிபாட்டு தலங்களில் ஒன்றுகூடி குழப்பத்தை ஏற்படுத்த சரியான நேரமல்ல. அரசு சொல்லும் அறிவுரையைக் கேளுங்கள். சுய தனிமையில் சில வாரங்கள் இருந்தால் நமக்கு பல வருடங்கள் ஆயுள் கிடைக்கும். இந்தத் தொற்றைப் பரவி சக மனிதருக்கு தீங்கு விளைவிக்காதீர்கள்.
கொரோனா உங்களிடம் இருக்கிறது என்பதைக் கூட உங்களுக்கு எச்சரிக்காது. எனவே உங்களுக்கு தொற்று இல்லை என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். புரளிகளைப் பரப்பி இன்னும் பதட்டத்தையும், கவலையையும் பரப்பும் நேரமல்ல” இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: கொரோனா பாதிப்பு: மத ரீதியாக சித்தரிப்பவர்களுக்கு குஷ்பு பதிலடி!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.