தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அரங்கிலும் இந்திய சினிமாவின் பெருமையை உலக அரங்கிற்கும் எடுத்து சென்றவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். மிக குறுகிய காலத்தில் இந்தியாவில் யாரும் செய்திராத பல சாதனைகளை நிகழ்த்த ரகுமானுக்கு பல காரணங்கள் இருந்த போதிலும் மிக முக்கிய காரணமாக அவர் எப்போதும் கைக்காட்டுவது தன்னுடைய தாயாரைத் தான்.
9 வயதில் ரகுமான் தன்னுடைய தந்தையை இழந்தபோது மூன்று பெண் குழந்தைகளுடன் இந்த சிறுவனையும் கரை சேர்க்கும் பொறுப்பு கரீமா பேகத்துக்கு வந்தது. இசைத்துறையில் இடைவிடாது பணியாற்றியதாலே ரகுமானின் தந்தை ஆர்.கே.சேகர் உயிர் இழந்ததாக கூறப்பட்ட நிலையில் தன்னுடைய மகனும் இசைத்துறையிலேயே சாதிக்க வேண்டும் என்று துணிச்சலுடன் முடிவெடுத்த கரீமா பேகம், 11 வயதிலேயே ரகுமானை பின்னணி இசை கலைஞராக மாற்றினார்.
காலையில் பள்ளி, மாலையில் ஸ்டுடியோக்கள் என மாறி மாறி வேலை பார்த்து வந்த ரகுமானுக்கு ஒருகட்டத்தில் வேலைப்பளு கழுத்தை நெருக்க தொடங்கியது. இரண்டிலும் தன்னால் ஒரேநேரத்தில் கவனம் செலுத்த முடியாது என்பதை உணர்ந்த ரகுமான், தனது பிரச்னையை தாயார் கரீமா பேகத்திடம் தெரிவித்தார். கொஞ்சமும் யோசிக்காத அவர், பள்ளியை விட்டுவிட்டு இசையை முழு நேரமாக தேர்வு செய் என அறிவுறுத்தினார்.
இப்படி தன் வாழ்நாளின் முக்கிய முடிவுகள் அனைத்தையும் தனது தாயார்தான் எடுத்ததாக பல மேடைகளில் ரகுமானே தெரிவித்திருக்கிறார். ஆரம்பம் முதலே அதிநவீன இசைக்கருவிகள் மீது ரகுமானுக்கு அலாதி பிரியம். இதை நன்கு உணர்ந்த கரீமா பேகம், தன் மகள்களின் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகளை விற்று ரகுமானுக்கு நவீன இசைக்கருவிகளை பெற்றுத்தந்தார்.
ரோஜா பட வாய்ப்பை தேர்வு செய்தது பாரதிராஜாவுடன் பணியாற்ற வேண்டும் என விருப்பம் தெரிவித்தது என ரகுமான் கேரியரில் பல முடிவுகளை கரீமா பேகமே தேர்வு செய்தார். அதேபோல் பாலிவுட்டில் இருந்து ஏராளமான வாய்ப்புகள் வந்தபோது ரங்கீலா படத்தின் மூலம்தான் ரகுமான் பாலிவுட் செல்ல வேண்டும் என கரீமா பேகம் விரும்பினார். இதற்கு நன்றி செலுத்தும் விதமாக அந்த படத்தின் ஒலி நாடாவை கரீமா பேகம் வாயிலாக வெளியிட்டது படக்குழு.
திரைப் பயணம் தொடர்பான முடிவுகள் மட்டுமல்லாது திருமணம் உள்ளிட்ட தனது வாழ்நாளின் மிக முக்கியமான முடிவுகள் பலவற்றையும் தன் தாயார் வசமே ஒப்படைத்தார் ரகுமான். இதன் காரணமாகவே ஆஸ்கர் விருதினை வென்ற அதே கையோடு, "தன்னுடன் தாய் இருக்கிறார்" என கூறி தன் ஒட்டுமொத்த வெற்றிக்கும் காரணமாக அவரை முன்னிறுத்தி நெகிழ வைத்தார் ரகுமான்.
75- வயதில் உடல்நலக் குறைவு காரணமாக கரீமா பேகம் இயற்கை எய்தியிருக்கும் நிலையில், இந்த பெருந்துயரத்தில் இருந்து ரகுமானும் அவருடைய குடும்பத்தாரும் விரைவில் மீண்டு வர வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது.
கரீமா பேகம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, “இசைத்துறையின் ஜாம்பவான் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் அன்புத்தாயார் கரீமாபேகம் உடல்நலக் குறைவால் காலமான செய்தி அறிந்து மனவேதனை அடைந்தேன். தாயாரின் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என்று கூறியுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: A.R.Rahman, Edappadi Palaniswami