ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Tamil Eelam: தமிழ் சினிமாவும் தமிழ் ஈழமும் ஒரு பார்வை!

Tamil Eelam: தமிழ் சினிமாவும் தமிழ் ஈழமும் ஒரு பார்வை!

சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு உலகிலும் இந்தியாவிலும் அங்கீகாரம் பெற்ற, ஈழம் குறித்த முக்கியமான திரைப்படமாக தன் பெயரை பதிவு செய்தது.

சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு உலகிலும் இந்தியாவிலும் அங்கீகாரம் பெற்ற, ஈழம் குறித்த முக்கியமான திரைப்படமாக தன் பெயரை பதிவு செய்தது.

சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு உலகிலும் இந்தியாவிலும் அங்கீகாரம் பெற்ற, ஈழம் குறித்த முக்கியமான திரைப்படமாக தன் பெயரை பதிவு செய்தது.

 • 6 minute read
 • Last Updated :

  தமிழ் சினிமா தன் ஒவ்வொரு கால கட்டங்களிலும் காமெடி, ஆக்சன், காதல் போன்று பல ட்ரெண்ட்செட்களை சந்தித்துள்ளது. இப்படியான காமெடி, ஆக்சன், காதல் போல ஈழத் தமிழர்களை மையப்படுத்திய திரைப்படங்களை எடுப்பதும் தமிழ் சினிமாவின் டிரெண்டாகிவிட்டிருந்ததை பார்க்கலாம்.

  ஈழப் போராட்டமும், அதனது உடன் விளைவுகளான இடப் பெயர்வும், வன்முறையும் உலக அளவிலான திரைப்படத்தில் பாதிப்புகளைச் செலுத்தியது போல் தமிழ் திரையிலும் தன் தடங்களை பதித்துள்ளதை பல தமிழ் படங்கள் சொல்லியது, அத்திரைப்படங்கள் இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் அவர்களின் போராட்டங்களை மையமாக கொண்டு பல கதைகளை சொன்னது. அதுபோலவே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் முதல் முன்னணி நடிகர்கள் வரை ஈழம் சம்பந்தமான திரைப்படங்களில் பங்குகொண்டிருப்பதை தமிழ் சினிமா வரலாறு சொல்லியது.

  மணிரத்ணத்தின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்', கமல்ஹாசன் நடித்த ‘தெனாலி', பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘ நந்தா', செல்வமணி இயக்கத்தில் ‘குற்றபத்திரிக்கை’….. என அடுக்கி கொண்டே போகலாம்.

  தமிழ் சினிமாவின் எலைட் இயக்குனர் என ரசிகர்களால் மெச்சப்படும் இயக்குனர் மணிரத்னம். இவரின் ஒவ்வொரு படைப்பும் தமிழ் சினிமாவின் அடையாளங்களாகின. அவற்றில் ஒன்று ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படம். தத்தெடுக்கப்பட்ட பெற்றோரிடம் வளரும் சிறுமி, தனது உண்மையான தாயை ஒரு முறையாவது பார்க்க வேண்டி இந்தியாவில் இருந்து ஈழத்திற்கு செல்லும் இந்த கதை தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி இயக்குனரால் விடுதலைபுலிகளை நேரடியாக பேசிய முதல் திரைப்படம் என்றானது.

  தன் மகள் கீர்த்தனா கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறுவதும், என்ன சொல்வது என்று தெரியாமல் விழிப்பதுமாக நந்திதா தாஸ் விடுதலைபுலியாக இருந்தாலும் ஒரு தாய்க்கு உள்ள உணர்வுகள் விருப்பங்கள்,  மனவருத்தங்கள், இயலாமை, வாழ்க்கை முறை சிரமங்கள் என்று ஒட்டுமொத்த உணர்வுகளையும் பிரதிபலித்திருப்பார். “மறுபடியும் எப்போது நான் உங்களைப் பார்ப்பது” என்று குழந்தை கேட்க “இந்த யுத்தம் ஒரு நாள் நிற்கும் அமைதி திரும்பும் அப்போது என்னைப் பார்க்கலாம்” என்று கூறி அழுதபடி செல்லும் காட்சி சொல்லியது விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகத்தை.

  ’கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படம் பல விருதுகளை வாரி குவித்தாலும் வெளியான அந்நாளில் பல எதிர் விமர்சனங்களையும் இத்திரைப்படம் சந்தித்தது. இயக்குநர் மணிரத்னம் தனது படத்துக்குரிய ஆய்வை திறம்பட முன்னெடுக்க முடியாமல் இருந்திருக்கிறார் என்பது பல காட்சிகளில் வெளிப்படையாகவே தெரிகின்றது’ என்ற வினர்சனமும் முன்வைக்கப்பட்டது.

  போருக்கு எதிரான கருத்தை வலியுறுத்தும் படம் என படக்குழுவினரால் சொல்லப்பட்டாலும் படத்தின் பெரும் பகுதியில் விடுதலைப்புலிகளின் போராட்டத்தை தவறாக இப்படம் சித்தரித்திருப்பதாகவும் குழந்தைகளுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

  அதேபோல் விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை தற்கொலை தாக்குதல் என்பதை ”உயிராயுதம்” என்ற அடை மொழிக்குள் தான் அழைத்துக் கொள்வார்கள். எனவும் அந்த உணர்வையும் அதற்குள் இருக்கும் தேவையையும் இயக்குனரால் எந்த ஒரு சூழ்நிலையிலும் உணர முடியவில்லை. எனவும் விமர்சனங்களை எதிர்கொண்டார் மணிரத்ணம்.

  பல விமர்சனங்களை எதிர்கொண்டாலும் இப்படத்தில் இடம்பெற்ற விடைகொடு எங்கள் நாடே எனும் பாடலும் அது படமாக்கப்பட்ட விதமும் பெரிதும் பேசப்பட்டது. புலம்பெயர்ந்து செல்லும் துயரத்தையும் தமிழ் ஈழத்தின் ரத்த வரலாற்றையும் இப்பாடல் தத்ரூபமாக பதிவு செய்திருப்பதாக பாராட்டுக்கள் எழுந்தது.

  2000 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் ‘தெனாலி. கே. எஸ். ரவிக்குமார் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். நகைச்சுவை படம் என்றாலும் இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் பாத்திரம் ஈழத் தமிழர்களின் துன்பங்கள் பற்றி பேசியது. தெனாலி சோமன் என்னும் ஈழ தமிழர் பாத்திரத்தில் நடித்திருந்த கமல்ஹாசன் இலங்கை உள்நாட்டுப் போரில் ஏற்பட்ட அதிர்ச்சியால் ஏற்பட்ட பல பயங்களால் மனநல சிகிச்சைக்காக சென்னைக்கு வருவதே இத்திரைப்படத்தின் கதையாக இருந்தது. எல்லாம் பயமயம் என சொல்லி சிரிக்க வைத்திருந்தாலும் ஈழத்தில் தான் எதிர்கொண்ட அவலத்தை கமல்ஹாசன் சொல்லும் போது ஈழ மக்களின் துயரத்தை உணர்ந்தனர் பார்வையாளர்கள்.

  அன்று வியட்நாம் போரின் கொடூரத்தை உலகுக்கு எடுத்துச் சொன்னது ஒரு சிறுமியின் படம். அதுபோல் தமிழீழ விடுதலைப் போரின் உச்ச கொடூரத்தை சர்வதேச சமூகம் முன்வைத்தது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் குறித்த புகைப்படங்கள். சிங்கள ராணுவத்தினரின் துப்பாக்கி குண்டுகளால் துளைத்த பாலச்சந்திரனின் புகைப்படக் காட்சிகள் கண்டு கதறியழுது கண்ணீர் விடாத இதயம் எதுவும் இல்லை என சொல்லலாம். இந்த புகைப்பட காட்சியை அப்படியே வைத்து தமிழில் ‘புலிப்பார்வை’ என்றொரு திரைப்படம் வெளியானது. பிரவீன் காந்த் இத்திரைப்படத்தை இயக்கி இருந்தார். இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல சிக்கல்களை சந்தித்தது. அனைத்து காட்சிகளிலும் துப்பாக்கியுடனும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சீருடையுடனுமே பாலச்சந்திரன் பாத்திரம் வலம் வருகிறது எனவும், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் பாலசந்திரனுக்கும் சிறார்களுக்கும் ஆயுத பயிற்றி கொடுப்பதாக காட்சிகள் வருகின்றன எனவும், பல அரசியல் தலைவர்களிடம் இருந்து எதிர்ப்பு வந்தது. பலதரப்பிலிருந்தும் எழுந்த கண்டனங்கள் ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து படத்தில் குறித்த பகுதிகளில் மாற்றங்களை செய்த பின்னரே ‘‘புலிப்பார்வை‘‘ திரைப்படம் திரைக்கு வந்தது.

  பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘ நந்தா’ திரைப்படமும் ஈழ மக்களின் அகதி வாழ்வினை படப்பிடித்து காட்டியது. பிரச்சனை வரும் என்று சிவாஜிகணேசன் நடிக்க மறுத்த கதாபாத்திரத்தில் ஈழ தமிழர்கள் மீது உள்ள பாசத்தால் தைரியமாக நடித்தார் ராஜ்கிரண். இப்படத்தில் கடலில் தத்தளிக்கும் ஈழத் தமிழர்களை கரைக்கு அழைத்து வரும் காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கும்.

  90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்தவர் இயக்குனர் செல்வமணி. சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து வித்தியாசமான ஒரு பாணியை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய முன்னோடி என இவரை சொல்லலாம். இவர் ராஜீவ் காந்தி கொலையை மையப்படுத்தி எடுத்த .’குற்றப்பத்திரிகை’ என்ற திரைப்படம் சென்சாரால் தடை செய்யப்பட்டு பல ஆண்டுகள் வெளியாகாமல் இருந்தது. இதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடினார் ஆர்.கே.செல்வமணி. தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக படம் இருப்பதால் படத்தை முழுமையாக தடை செய்யவேண்டும் என சென்சாரில் கூறப்பட்டது. பின் நீதிமன்றம் சென்று தடை நீக்கம் செய்யப்பட்டு 16 ஆண்டுகளுக்குப் பின்னர் 2007-ல் ’குற்றப்பத்திரிகை’ திரைப்படம் வெளியானது.

  தமிழ் சினிமாவின் பெயர் சொல்லும் இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’ வழக்கமாக தனது பாணியில் , இன்றைய இளம்வயதினரின் நவீன , காமம் கலந்த காதலை கொஞ்சம் வன்முறையான பூச்சில் சொல்லியிருந்தாலும் கடைசி பதினைந்து நிமிடத்தில் உணர்வுக்குவியலைக் கொட்டி ரசிகர்களை நெகிழ வைத்த திரைப்படம் என தமிழ் சினிமா கொண்டாடியது. அதையும் தாண்டி அத்திரைப்டத்தில் நுணுக்கமாக ஒளிந்திருக்கும் இன்னொரு கதையையும் கண்டுகொள்ள தவறவில்லை தமிழ் ஆர்வ ரசிகர்கள். ஆம்… தமிழ் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணத்தையும் ஈழ போராட்டததையும் வெள்ளித் திரையில் சுமார் 1000 ஆண்டு தமிழின வரலாற்றோடு சேர்த்து குறியீடாக சொல்லியிருப்பார் இயக்குனர் செல்வராகவன். படத்தின் மையக்கருத்தும், படத்தின் முடிவும் முள்ளிவாய்க்காலுடன் உறைந்து போயிருந்ததோடு ஈழப்போராட்டத்தைப் பற்றிய நுணுக்கமான ஒரு பதிவாகவும், அமைந்திருந்தது.

  ஈழத் தமிழினத்தின் குறியீடாக வரும் சோழ தேவனான பார்த்திபன், சிங்கள இனக் குறியீடாக வரும் பாண்டிய இளவரசியான பெண் அதிகாரி நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் காட்சி. இலங்கை ராணுவ அமைச்சரை அப்படியே ஒத்துபோகும் அழகம் பெருமாளின் போலீஸ் கதாபாத்திரம். தியாக உணர்வோடு போரிடும் சோழர்களை பாண்டிய ஆட்கள் துப்பாக்கி, பாராசூட், கனரக ஆயுதம் உள்ளிட்ட வகையில்  குழுக்களாக வந்து கொல்வது, கடைசியில் சோழர்களைத் தோற்கடிக்கும் நவீன கும்பல் அப்பாவி ஆண் பெண்களைக் கட்டிவைத்து கும்பல் கும்பலாக அடைத்து வைத்து கொடுமைப் படுத்துவது, நெல்லாடிய நிலமெங்கே…. சொல்லாடிய அவையெங்கே… வில்லாடிய களமெங்கே கல்லாடிய சிலையெங்கே… ‘’தாய் தின்ற மண்ணே’ என்ற பாடல் வரிகள் அத்தனையும் தமிழ் ஈழ போராட்ட வரலாற்றினை பதிவு செய்திருப்பதை பார்க்கலாம்.

  தமிழ் சினிமாவை போல் கேரள சினிமாவும் ஈழப் பிரச்சினை பற்றி இதுவரையிலும் ஆறு படங்களை உருவாக்கி இருப்பதை பார்க்கலாம். ராஜிவ்காந்தி படுகொலை நிகழ்வை முன்வைத்து மேஜர் ரவி எடுத்த மிசன் 'நைன்டி டேஸ்', நடிகரும் தயாரிப்பாளருமான ஜான் ஆப்ரஹாம் எடுத்த 'மெட்ராஸ் கபே', சந்தோஷ் சிவன் எடுத்த 'டெரரிஸ்ட்', நடிகர் சுரேஷ்கோபி எடுத்த ஈழப்போராளி பற்றிய கதையான 'ராம ராவணன்', சந்தோஷ் சிவன் எடுத்த 'இனம்', ராஜேஷ் தொடுபுழா இயக்கிய 'இன் த நேம் ஆப் புத்தா' என ஈழம் பற்றி பேசிய திரைப்படங்களை சொல்லலாம். இவற்றில் சந்தோஷ் சிவன் எடுத்த ‘இனம்’ திரைப்படம் தமிழகத்தில் பெரும் எதிர்ப்பை சந்தித்தது. விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ‘இனம்’ திரைப்படம் தவறாகச் சித்தரிக்கிறது என்றும், சிறுவர்களும் இப்படம் பார்க்கலாம் என்ற ‘யு' சான்றிதழ் பெற்றுள்ள இத்திரைப்படத்தில், சின்னஞ் சிறுவர்களும், சிறுமிகளும் கட்டாயமாக புலிப்படையில் சேர்க்கப்படுவதாகவும், தங்க வைக்கப்படும் இடங்களில் அவர்கள் அச்சிறு வயதிலேயே பாலியல் இச்சைக்கு ஆட்பட்டு, சேட்டைகள் செய்வது போன்ற காட்சிகள் உள்ளதாகவும், கதைக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத ஒரு காட்சியை அமைத்து, நந்திக் கடல் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்து கிடந்ததாக படம் தெரிவிப்பதாகவும் சொல்லி இத்திரைப்படம் பெரும் எதிர்ப்பினை தமிழகத்திலேயே சந்தித்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனது இயக்கத்தில், தமிழகத் திரைப்படக் கலைஞர்களும், தமிழ் தொழில்நுட்பக் கலைஞர்களும் பங்கேற்று, ஈழத்தில் படம்பிடிக்கப்பட்டு, வெளிவந்த ’ஆணிவேர், திரைப் படத்தினை ஈழம் பற்றி பேசிய முக்கியமான திரைப்படம் என சொல்லலாம். இத்திரைப்படம் ஹைதராபாத் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு உலகிலும் இந்தியாவிலும் அங்கீகாரம் பெற்ற, ஈழம் குறித்த முக்கியமான திரைப்படமாக தன் பெயரை பதிவு செய்தது.

  ஈழ போராட்டத்தில் கடைசிகட்டத்தில் அறியப்பட்டவரான இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாறு 'போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற பெயரில் படமாகி, வெளியாக இருந்த நிலையில் தடையை சந்தித்தது. இளையராஜாவின் இசையில் முளைத்துள்ள இந்த 'போர்க்களத்தில் ஒரு பூ’ ஒரு நாள் பூக்கும் எனவும் அத்திரைப்படத்தின் இயக்குனர் கணேஷ் சொல்லியுள்ளதை பார்க்கலாம்.

  இப்படி பல படங்களில் இலங்கை தமிழர்களின் பிரச்னையை அங்கும் இங்குமாய் பேசியிருந்த நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஆண்டவன் கட்டளை படமும் இதில் முக்கிய இடத்தை அடைகிறது. யுத்த காலத்தில் அங்கிருந்து தப்பி தமிழகம் வந்த இலங்கை தமிழராக இப்படத்தில் ஒரு கதாபாத்திரம் இடம்பெற்று அகதிகளின் உள்மன போராட்டங்களை திரையில் பதிவு செய்தது.

  விஜய் சேதுபதி அடுத்து இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் பயோ பிக்கில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளிவந்து அவரது ரசிகர்களிடம் உற்சாகத்தை அளித்தாலும் இச்செய்தியும், முதல்கட்ட போஸ்டரும் தமிழ் ஆர்வலர்களிடம் பலத்த எதிர்ப்புகளை சந்தித்தது. இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியான போதே இதில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, முத்தையா முரளிதரன், ராஜ பக்சேவின் ஆதரவாளர் என்பதால் ஈழத் தமிழர்கள் பலரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திரைப்படத்தில் இருந்து விலகி கொண்டார் விஜய்சேதுபதி.

  திரைப்படங்களை விட வெப்சீரிஸ் என அழைக்கப்படும் வலைதொடர்கள் தற்போது மக்களிடம் பிரபலம் அடைந்திருப்பதை பார்க்கலாம். அப்படி மக்களிடம் பிரபலமான வலைதொடர் ஃபேமிலி மேன். மனோஜ் பாஜ்பாய் நடித்திருக்கும் இந்த வலைதொடரின் இரண்டாம் பாகம் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களை தீவிரவாதிகாளாக சித்தரித்துள்ளதாகவும், சமந்தா நடித்திருக்கும் விடுதலைப்புலி கதாபாத்திரம் ஒரு போராட்ட வரலாற்றினை தீவிரவாதியாக சித்தரிக்க முயல்வதாகவும் பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  First published: