ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

திரைப்படங்களில் லாஜிக் - மிஷ்கின் படத்தை முன்வைத்து ஒரு பார்வை...!

திரைப்படங்களில் லாஜிக் - மிஷ்கின் படத்தை முன்வைத்து ஒரு பார்வை...!

மிஸ்கின்

மிஸ்கின்

வணிக சினிமாவில் புழங்கும் தர்க்கம் குறித்த பருந்துப் பார்வையிது. இதனைஆரம்பமாகக் கொண்டு இன்னும் ஆழமாக தர்க்கம் குறித்து ஆராய முடியும்.

  • News18
  • 6 minute read
  • Last Updated :

திரைப்படங்களில் தர்க்கம் (Logic) குறித்து தமிழில் அவ்வப்போது பேச்சு எழும். ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள் பறப்பதை கேள்வி கேட்காதவர்கள், நம்மூர் நாயகர்கள் பத்தடி தாவினாலே கேலி செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டாகவோ, வணிகப் படங்களில் லாஜிக் பார்க்காதவர்கள் யதார்த்தமாக ஒரு படம் எடுத்தால் பூதக்கண்ணாடியுடன் வந்துவிடுகிறார்கள் என்ற ஆதங்கமாகவோ இந்த உரையாடல் அமையும்.

மிஷ்கினின் சைக்கோ படம் தர்க்கரீதியான விமர்சனங்களை எதிர்கொண்ட போது, "ஹெல்மெட்டுடன் சேர்த்து உங்கள் மூளையையும் திரையரங்கு வாசலிலேயே கழற்றி வைத்து வாருங்கள்" என்று மிஷ்கின் கேட்டுக் கொண்டார். நீங்கள் தர்க்கத்தில் கவனம் வைக்கையில் ஒரு திரைப்படம் தரும் கலானுபவத்தை தவறவிடுகிறீர்கள் என்ற அர்த்தத்தில் அவரது வேண்டுகோள் இருந்ததாக அவரது ரசிகர்கள் இதனை எடுத்துக் கொண்டார்கள்.

தர்க்கம் குறித்து தமிழ் சூழலில் பேசப்பட்டவைகளை தொகுத்துப் பார்த்தால், தர்க்கம் குறித்து நமக்கு சில பார்வைகள் இருப்பதை உணரலாம்.

1.தர்க்கம் என்பது நிலையானது, படைப்புக்கு வெளியே இருப்பது.

2.ஒரேவித தர்க்கத்தை வைத்தே அனைத்து திரைப்படங்கள் விமர்சிக்கப்படுகின்றன (அல்லது) விமர்சிக்கப்பட வேண்டும்.

இந்த புரிதல்களின் அடிப்படையிலேயே தர்க்கம் குறித்த நமது உரையாடல்கள் அமைகின்றன. ஆனால் இது சரியா?

ஒரு குழந்தையிடம், "ஒரு ஊர்ல ஒரு பாட்டி.." என்று பாட்டி வடை சுட்ட கதையை கூறினால் எந்த குழந்தையும் கேள்வி கேட்காமல் அதனை ரசிக்கும். அதே குழந்தையிடம், "நம்ம பக்கத்து வீட்டு பாக்கியம் பாட்டி வடை சுட்டப்ப, காக்கா ஒண்ணு ஒரு வடையை எடுத்திட்டுப் போச்சி, நம்ம டாமி அதுகிட்ட போய் காக்கா காக்கா ஒரு பாட்டு பாடுன்னு கேட்டிச்சி..." என்று சொன்னால், அந்தக் குழந்தை நம்பாது. "நம்ம டாமி எப்படி பேசும்" என்று கேள்வி கேட்கும். 

முதல்கதை எங்கோ ஒரு ஊரில் ஏதோ ஒரு பாட்டிக்கு நடக்கிறது. ஆனால், இரண்டாவது கதையில் வருவது குழந்தையின் பக்கத்து வீட்டு பாட்டி. பாடச் சொல்லி கேட்பது அவர்கள் வீட்டு நாய் டாமி. எங்கோ நடக்கும் கதையில் தர்க்கம் பார்க்காத குழந்தை, அதே கதை தனது நடைமுறை வாழ்க்கையை பிரதிபலிக்கையில் நடைமுறை தர்க்கப்படி கேள்வி கேட்கிறது. இங்கே தர்க்கத்தை உருவாக்குவது கதையை நாம் சொல்லும் முறைதானே தவிர, குழந்தையல்ல.

இந்த குழந்தைதான் பார்வையாளர்கள். வாசலில் கழற்றி வைப்பதற்கு அவர்கள் தர்க்கத்தை தங்களின் மூளையில் சுமந்து வருவதில்லை. ஒரு படைப்பில் கதைசொல்லப்படும் முறையே தர்க்கத்தை உருவாக்குகிறது. ஆகையால் தர்க்கத்தை கதையாடல் தர்க்கம் (Narrative logic) என்ற புரிதலுடன் அணுகுவதே சரியானது. மேலும், தர்க்கம் நிலையானதோ, படைப்புக்கு வெளியே இருப்பதோ அல்ல மாறாக படைப்புதான் தர்க்கத்தையே உருவாக்குகிறது. 

சைக்கோ திரைப்படத்தின் நாயகன், கொலையுண்ட பெண்ணின் காலை முகர்ந்து,பன்றி வாசனை வருவதை வைத்து, வில்லன் பன்றிப் பண்ணை வைத்திருக்கலாம் என்ற முடிவுக்கு வருகிறான். இந்தக் காட்சியின் வழியாக இயக்குநர் உணர்த்துவது, கொலையுண்ட பெண் வில்லனின் பன்றிப் பண்ணைக்குப் போயிருக்கிறாள். அதன் வாசம் அவள் கால்களில் படிந்திருக்கிறது என்பது. ஆனால், கொலையுண்ட பெண் காரில் ஏறியதும், அவளை மயக்கப்படுத்தி தனது கைகளில் சுமந்து சென்று கொலைப்படுக்கையில் கிடத்தி வில்லன் அவள் தலையை வெட்டுகிறான். தலையில்லா முண்டம் நடப்பதற்கு வழியில்லை. ஆகவே அவளது உடலை அவன் சுமந்து சென்றே அப்புறப்படுத்தியிருக்க வேண்டும்.

அதாவது அந்தப் பெண்ணின் கால்கள் பன்றிப் பண்ணைக்குள் பதிவதே இல்லை. எனில், எப்படி அவளது கால்களில் மட்டும் பன்றி வாசனை வரும்? கவனியுங்கள், இந்த கேள்வி வெளியிலிருந்து வந்ததில்லை. காலை முகர்ந்து வில்லனின் இருப்பிடத்தை நாயகன் கண்டுபிடிப்பதாக இயக்குநர் வைத்த காட்சியிலிருந்து வருவது. சைக்கோவில் அதிகம் விமர்சிக்கப்பட்டது, கண் தெரியாத நாயகன் கார் ஓட்டிச் செல்லும் காட்சி. மின்சார விளக்கு இருந்தால் கண் தெரியாத நாயகனை வில்லன் எளிதாக வீழ்த்திவிடுவான் என்று, மின்சாரத்தை நிறுத்த காரை ஓட்டிவரும் பெண் சென்றுவிடுவதால் நாயகன் கார் ஓட்ட நேரிடும். கண் தெரியாததை ஒரு பலவீனமாக இயக்குநர் காட்டும் போதுதான், அப்படி பலவீனமான நாயகனால் கார் மட்டும் எப்படி ஓட்ட முடியும் என்ற கேள்வி எழுகிறது.

சொகுசு கார்கள் வைத்திருக்கும் வில்லனின் பண்ணையில் ஒரு ஜெனரேட்டர் கூடவா இருக்காது, ஒரு எமர்ஜென்ஸி லைட்கூடவா வைத்திருக்க மாட்டான் என துணைக்கேள்விகள் எழுகின்றன. நாயகனுக்கு கண் தெரியாது, ஆகவே மின்சாரத்தை நிறுத்தவேண்டும் என்று நுட்பமாக இயக்குநர் தர்க்கத்தைப்பின்னும் போது அதே நுட்பத்துடன் இயக்குநர் தவறவிட்ட இடங்களிலிருந்து  கேள்விகள் எழுகின்றன. தர்க்கம் படைப்புக்கு வெளியே இருப்பதல்ல, படைப்பிலிருப்பது, படைப்பிலிருந்து பிறப்பது. ஆகவே, தர்க்கம் குறித்த கேள்விகளுக்கு விளக்கமளிக்கும் கடமை படைப்பாளிக்கு உண்டு.

இயக்குநர் சொல்லும் எந்தக் கதையை கேட்கவும் பார்வையாளன் தயாராக இருக்கிறான். கதையை தேர்வு செய்யும் இயக்குநரின் சுதந்திரத்தில் அவன் தலையிடுவதில்லை. உதாரணமாக, வில்லனால் கொல்லப்படும் நாயகனின் உயிர்; செத்துப் போன ஒரு ஈக்குள் புகுந்து கொள்கிறது. ஈ உருவில் இருக்கும் நாயகன் வில்லனை பழி வாங்குகிறான். இது நான் ஈ படத்தின் கதை. இறந்த மனிதனின் உயிரும், நினைவும், அவன் அறிவும் ஒரு ஈக்குள் கூடுவிட்டு கூடு பாய்வது நடைமுறை சாத்தியமா? இதில் என்ன லாஜிக் இருக்கிறது? ஆனால், ஐந்து மொழிகளில் நான் ஈ வெற்றி பெற்றது. பார்வையாளர்கள் யாரும் லாஜிக் குறித்து கேள்வி கேட்கவில்லை. ஏனெனில் எந்த கதையை சொல்லவும் படைப்பாளிக்கு உரிமையுள்ளது. அதை சொல்லும் முறையில் அவன் உருவாக்கும் தர்க்கம் ஏற்புடையதாக இருந்தால் மட்டும் போதுமானது.

மனிதஉயிர் ஈக்குள் புகுந்து கொள்வதை ஏற்றுக் கொண்டார்களே என்று அந்த ஈ குண்டாந்தடியை எடுத்து வில்லனை தாக்குவதாகவோ இல்லை துப்பாக்கி எடுத்து வில்லனை சுடுவதாகவோ காட்டியிருந்தால் அப்போது பார்வையாளர்கள் எரிச்சல்பட்டிருப்பார்கள். அந்தத் தவறை இயக்குநர் செய்யவில்லை. ஈயால் என்ன முடியுமோ அதை மட்டுமே காட்டியிருப்பார். அதாவது நரேடிவ் லாஜிக்கில் அவர் பிசகவில்லை.

தர்க்கம் படைப்பிலிருந்து எழுவதால், ஒரு படைப்பில் சுட்டப்படும் தர்க்கம் அனைத்துப் படைப்புகளுக்கும் பொருந்துவதில்லை. அதாவது ஒரு திரைப்படத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் தர்க்கம், இன்னொரு படைப்புக்கு பொருந்தவேண்டுமென்பதில்லை. இதை புரிந்து கொண்டால், சூப்பர் ஹீரோக்கள் பறந்தால் ரசிப்பவர்கள் நம்மூர் நாயகர்கள் பறப்பதை ஏன் அனுமதிப்பதில்லை என்பதான குற்றச்சாட்டுகள் எழாது.

சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் நடைமுறை யதார்த்தத்திற்கு வெகு தொலைவில் இருப்பவை. ஏதோ ஒரு ஊரில் ஏதோ ஒரு பாட்டி வடை சுடுவதைப் போல. அவர்களின் உலகில் அவர்கள் பறக்கலாம், சாகஸங்கள் புரியலாம். அதிலும் நுட்பமான வேறுபாடு உண்டு. சூப்பர்மேன், தோர் போன்ற வேற்றுலகவாசிகள் பறப்பதற்கு எந்த பின்புல கதையும் தேவையில்லை. ஸ்பைடர்மேனும், ஹல்க்கும் பூமியைச் சோந்தவர்கள். அவர்கள் சாதாரணமாக பறந்துவிட முடியாது. சிலந்தி கடிக்க வேண்டும் அல்லது ஆராய்ச்சியின் பின்விளைவால் மரபணுவில் மாற்றம் வரவேண்டும்.

இந்த சூப்பர் ஹீரோக்களும் ஒரேநாளில் முளைத்தவர்களல்ல. கதைகளாக காமிக்ஸ்களாக படிக்கப்பட்டு, மக்கள் மனதில் நிலைபெற்று அதன் பிறகு திரைக்கு வந்தவர்கள். சூப்பர் ஹீரோக்கள் குறித்த தர்க்கம் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்ட நிலையில், புதிய சூப்பர் ஹீரோக்களை எவ்வித பின்புலமும் இன்றி இனி ஒருவர் படைத்துவிட முடியும். காலங்காலமாக படித்தும் கேட்டும் வரும் புராண கதாபாத்திரங்களைப் போலத்தான் இந்த சூப்பர் ஹீரோக்களும். ராமாயண திரைப்படத்தில் அனுமான் வேஷமிட்டவர் மலையை சுமந்தபடி பறந்தால் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் அல்லவா? அது அந்த கதாபாத்திரத்துக்கு மட்டுமே அமைந்த சலுகை. அனுமார் வேடத்தில் பறந்தார் என்று, சாதாரண ஒரு கதையில் அந்த நடிகர் பறந்தால் ஒத்துக் கொள்வோமா?

சூப்பர் ஹீரோக்களுக்கு அடுத்த இடத்தில் நமது மாஸ் ஹீரோக்கள் வருகிறார்கள். சூப்பர் ஹீரோக்களைப் போலவே இவர்கள் ஒரே நாளில் உருவானவர்கள் அல்ல.பல வருடங்கள் திரைப்படங்களில் நடித்து, திரைப்படங்களில் உருவாக்கிக்கொண்ட பிம்பத்தை சமூகத்தில் நிலைநிறுத்தி, மாஸ் ஹீரோ என்ற இடத்தை வந்தடைந்தவர்கள். இவர்கள் ஐம்பது பேரை அடிக்கலாம், பிரதமருக்கு சவால்விடலாம், கட்சி தொடங்கி தேர்தலில் நின்று நாலே வாரத்தில் முதலமைச்சராகலாம். இதே வேடத்தை இரண்டாம் மூன்றாம்கட்ட நடிகர்களால் செய்ய முடியாது. "அவர் தாங்க மாட்டார் சார்..." என்பார்கள் சினிமாவில். மந்திரி வரை இவர்கள் போகலாம். அறிமுக நடிகர்கள் என்றால் வட்ட செயலாளர், எம்எல்ஏ வரை அனுமதிக்கப்படுவார்கள். இங்கே தர்க்கம் என்பது படைப்பைத்தாண்டி சமூகத்தில் நடிகர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பத்திலிருந்து உருவாகிறது. 

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை குறிப்பிட வேண்டும். பார்வையாளர்கள் கேள்வி கேட்காத வகையில் நரேடிவ் லாஜிக் கச்சிதமாக அமைந்த திரைப்படங்கள் சிறந்தவையா என்றால்நரேடிவ் லாஜிக்கை வைத்து மட்டுமே ஒரு படத்தை மதிப்பிட முடியாது. இயக்குநர்கள் நரேடிவ் லாஜிக்கை பெரும்பாலும் பார்வையாளர்களின் பலவீனத்திலிருந்தே உருவாக்குகிறார்கள். அறம், மதம், சாதி, மொழி, இனம் போன்ற இந்தியர்கள் எளிதாக உணர்ச்சிவசப்படும் விஷயங்களிலிருந்தே நரேடிவ் லாஜிக் பெரும்பாலும் உருவாக்கப்படுகிறது. நடைமுறையில் நீங்கள் ஒரு அமைச்சரை பொதுவெளியில் உடல்ரீதியாக தாக்குவது சாத்தியமில்லை.

அதையே ஒரு படத்தில் நாயகன் அமைச்சரை ரோட்டில் துரத்தி துரத்தி அடிப்பது போல் காட்டலாம். அந்த அமைச்சர் ஒரு சிறுமியை பாலியல் வல்லுறவு கொண்டார் என்றோ, குடிசைகளை கொளுத்தினார் என்றோ காண்பித்தால் போதுமானது. பார்வையாளர்கள் நடைமுறை யதார்த்தத்தை மறந்து கைத்தட்டி வரவேற்பார்கள். வில்லனும் அவன் செய்யும் கொடுமைகளும் எவ்வளவுக்கெவ்வளவு உக்கிரமாக காட்சிப்படுத்தப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு பார்வையாளர்களை போலியான மிகையுணர்ச்சிக்கு உட்படுத்தலாம். ஆகவேதான், நமது மாஸ் ஹீரோக்களும், இயக்குநர்களும் ஊழல், விவசாயம், கல்வி என மக்களின் ஆதாரப் பிரச்சனைகளை மீண்டும் மீண்டும் கையிலெடுக்கிறோர்கள்.

Also read... Priya Bhavani Shankar: 'இது யாருக்கும் நடக்கலாம்’ எச்சரிக்கும் பிரியா பவானி சங்கர்!

இந்த திரைப்படங்களால் பிரச்சனைகள் எள் முனையளவு அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்வதில்லை. அதேநேரம் நடிகனின் நாயக பிம்பம் படத்துக்குப்படம் ஊதி பெரிதாக்கப்படும். இப்படி போலியாக ஊதிப் பெருதாக்கப்பட்ட பிம்பங்களே அரசியலிலும், சமூகத்திலும் மாற்று சக்திகளாக முன்வைக்கப்படுகின்றன. சிவாஜி கணேசன் எந்தக் கதாபாத்திரத்தை ஏற்றாலும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தார். கள்வன் என்றால் கள்வன், மாற்றுத்திறனாளி என்றhல் மாற்றுத்திறனாளி. ஆனால், எம்ஜி ராமச்சந்திரன் எந்த வேடத்தை ஏற்றாலும், அதில் எம்ஜிஆர் என்ற மனிதனே தெரிந்தார். சிவாஜி கணேசனை திரைப்படங்கள் நடிகனாக காட்டின, எம்ஜி ராமச்சந்திரனை ஆபத்பாந்தவனாக சித்தரித்தன. அரசியலில் ஒருவர் தோற்றதற்கும், இன்னொருவர் வென்றதற்கும் அடிப்படை காரணம் இதுவே. இன்றும் தனிநபராக ஊரைக்காப்பாற்றும் போலி மிகையுணர்ச்சி படங்களின் நாயகர்களே அரசியல் போட்டியில் முன்னிலையில் உள்ளனர் என்பதை கவனிக்கவும். இது நமது ரசனைக்குறைவினாலும், மிகையுணர்ச்சிக்கு ஆட்பட்ட பலவீனத்தாலும் விளைந்த சீக்கு

தமிழ் மொழியில் எடுக்கப்படும் பெருவாரியான படங்கள் பார்வையாளர்களின் பலவீனத்தின் அடிப்படையிலேயே நரேடிவ் லாஜிக்கை உருவாக்குகின்றன. அதன் காரணமாகவே தமிழின் நல்ல படங்கள் பட்டியலை தயாரிக்கையில், பல நூறு கோடிகள் வசூலித்த படங்களை தள்ளி வைத்து, உதிரிப்பூக்கள், அழியாத கோலங்கள், அவள் அப்படித்தான், 16 வயதினிலே என்று பின்னோக்கிப் போகிறோம்..

ஒப்பீட்டளவில் சூப்பர் ஹீரோக்கள் படத்தைவிட மாஸ் ஹீரோக்களின் படங்களில் லாஜிக் அதிகம். இதற்கு அடுத்த, கடைசி நிலையில் வருபவை யதார்த்தவகை படங்கள். நடைமுறை யதார்த்தத்துக்கு நெருக்கமாக எடுக்கப்படும் படங்களில் நடைமுறை யதார்த்தத்தையொத்த கறாரான தர்க்கம் எதிர்பார்க்கப்படும்.  கேளிக்கைக்கு முன்னுரிமை தந்து எடுக்கப்படும் படைப்புகளைவிட, வாழ்க்கையை பிரதிலிக்கும் படங்களே கடுமையான தர்க்க சோதனைக்கு உட்படும். இது முரண் அல்ல இதுவே இயல்பு. இவை ஏற்படுத்தும் விளைவுகள் சுவாரஸியமானவை. ஒரு படைப்பாளி கவனிக்க வேண்டியவை.

தமிழ் சினிமாவில் கடந்த பதினைந்து வருடங்களில் மூன்று இயக்குநர்களுக்கு மட்டுமே திரைப்பட விழா மேடைகளில் நிரந்தரமாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. பாலுமகேந்திரா, பாரதிராஜா, மகேந்திரன். இவர்களைவிட அதிக வணிக வெற்றிகளை குவித்த இயக்குநர்கள் பார்வையாளர்கள் வரிசையில் இருக்கையில் இந்த மூவர் மட்டும் மேடையின் நடுநாயகமாக அமர்த்தப்பட்டார்கள்.

நம் காலத்தில் நடைமுறை யதார்த்தத்திற்கு ஓரளவு நெருக்கமான படைப்புகளை தந்த மூத்த படைப்பாளிகள் இவர்கள். இன்றும் இவர்களே நம் காலத்து நாயகர்கள். படைப்புகள் யதார்த்தத்தை நோக்கி, (சரியாகச் சொன்னால், யதார்த்தத்தில் இருக்கும் உண்மையை நோக்கி) நகரும்போது கறாரான தர்க்கத்தை எதிர்கொள்ளும். அந்த சவாலை எதிர்கொண்டு படைப்புகளை தருகிறவர்களே இங்கு கலைஞர்களாக கொண்டாடப்படுகிறார்கள்.

தர்க்கத்தை ஒருவர் எந்த தளத்தில் எத்தனை நேர்மையுடன் எதிர்கொள்கிறார் என்பதை வைத்தே, அவரது பெயர் காற்றில் கரைவதும், காலங்கடந்து கலைஞனாக நிலைப்பதும் தீர்மானிக்கப்படும் என்பதை இந்த மூன்று கலைஞர்கள் நமக்கு உணர்த்துகிறார்கள்.

வணிக சினிமாவில் புழங்கும் தர்க்கம் குறித்த பருந்துப் பார்வையிது. இதனைஆரம்பமாகக் கொண்டு இன்னும் ஆழமாக தர்க்கம் குறித்து ஆராய முடியும்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Director mysskin