Home /News /entertainment /

96 படம்: பழைய உறவுகளை திரும்பி பார்க்கவைக்கும் ஒரு பேரனுபவம்!

96 படம்: பழைய உறவுகளை திரும்பி பார்க்கவைக்கும் ஒரு பேரனுபவம்!

த்ரிஷா, விஜய் சேதுபதி

த்ரிஷா, விஜய் சேதுபதி

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் நேற்று வெளியான 96 திரைப்படம் அண்மையில் தமிழில் வெளியான மிகச்சிறந்த காதல் படமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

    ஆரம்பத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா முதல்முறையாக இணைவதுதான் இப்படத்துக்கு ஒரு எதிர்பார்பாக இருந்தது. ஆனால் ரிலீஸுக்கு முன்பு வெளியான டீசரும் பாடல்களும் வைரலாகி இளைஞர்கள் மத்தியில் இப்படம் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு உயர்த்தியது.

    1996-ம் ஆண்டு ஒன்றாக ஸ்கூல் படித்த விஜய் சேதுபதியும் த்ரிஷாவும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிரிகின்றனர். 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ரீ யூனியனில் மறுபடியும் சந்திக்கும் அவர்களின் வாழ்வில் ஓரிரவு நடக்கும் சம்பவங்களின் கோர்வை தான் இந்த 96.

    சில படங்கள் படம் பார்க்கும் ரசிகனை மூன்று மணிநேரம் திருப்திப்படுத்தி அனுப்பிவிடும். ஆனால் ஒருசில படங்கள் தான் படம் முடிந்த பிறகும் ரசிகர்களுடன் உரையாடிக்கொண்டே இருக்கும். அந்த வகையில் படம் முடிந்து வெளியே வரும் ஒவ்வொருவரும் தங்கள் பள்ளி கால நினைவுகளை சுமந்துகொண்டே வெளியே வருவது தான் 96 படத்தின் கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

    ராமாக விஜய் சேதுபதியும் ஜானுவாக த்ரிஷாவும் தங்கள் கேரியரின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். விஜய் சேதுபதிக்கு என்றே இருக்கும் அந்த இன்னசண்ட் இமேஜ், இப்படத்துக்கு பெரியளவில் கைக்கொடுத்துள்ளது. அதேபோல் வின்னைத்தாண்டி வருவாயா ஜெஸ்ஸிக்கு பிறகு த்ரிஷாவுக்கு பேர் சொல்லும் ஒரு படமாக 96 அமைந்துள்ளது.

    கூடை வைத்த லஞ்ச் பேக், டேப்ரிகார்டர், மேங்கோ சாக்லெட், இளையராஜா பாட்டு என 90-களின் வாழ்வியலை அழகாக திரையில் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் பிரேம் குமார். இன்று சமூக வலைதளங்களில் அனைவரும் தங்களுடைய ஸ்கூல் குரூப் போட்டாக்களையும் யூனிபார்ம் அணிந்த புகைப்படங்களையும் பகிர்ந்து தங்களின் முதல் காதல் அனுபவத்தை பகிரும் அளவு இப்படம் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மொத்தத்தில், பரபரப்பான இவ்வுலகில் ஏதோவொரு மூலையில் சிதறி போயிருக்கும் நம் பழைய உறவுகளை, ஒரு கணமேனும் திரும்பி பார்க்க வைக்கும் ஒரு பேரனுபவத்தை கொடுக்கும் படம்தான் இந்த 96.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: 96 movie, 96 movie review, Trisha, Vijay sethupathi

    அடுத்த செய்தி