ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ’96’ திரைப்படம்

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ’96’ திரைப்படம்
96 படத்தில் திரிஷா, விஜய் சேதுபதி
  • News18
  • Last Updated: October 6, 2018, 8:32 PM IST
  • Share this:
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான ‘96’ திரைப்படம் அண்மையில் தமிழில் வெளியான மிகச்சிறந்த காதல் படமாக கொண்டாடப்பட்டு வருகிறது. படம் பார்க்கும் ரசிகர்களை தங்கள் பள்ளி கால நினைவுகளுக்கே அழைத்து போகும் இத்திரைப்படம் பற்றிய ஒரு தொகுப்பை காணலாம்.

ஆரம்பத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா முதல்முறையாக இணைவதுதான் இப்படத்துக்கு ஒரு எதிர்ப்பார்பாக இருந்தது. ஆனால் ரிலீஸுக்கு முன்பு வெளியான டீசரும், பாடல்களும் வைரலாகி இளைஞர்கள் மத்தியில் இப்படம் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு உயர்த்தியது.

1996-ல் ஒன்றாக பள்ளியில் படித்த விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிரிகின்றனர். 22 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு ரீ-யூனியனில் மறுபடியும் சந்திக்கும் அவர்களின் வாழ்வில் ஓரிரவு நடக்கும் சம்பவங்களின் கோர்வைதான் இந்த 96.


சில படங்கள் ரசிகனை 3 மணி நேரம் திருப்திப்படுத்தி அனுப்பிவிடும். ஆனால் ஒருசில படங்கள் தான் படம் முடிந்த பிறகும் ரசிகர்களுடன் உரையாடிக்கொண்டே இருக்கும். அந்த வகையில் படம் முடிந்து வெளியே வரும் ஒவ்வொருவரும் தங்கள் பள்ளி கால நினைவுகளை சுமந்துகொண்டே வெளியே வருவது தான் ‘96’ படத்தின் கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

படத்தில் ராம்-ஆக விஜய் சேதுபதியும், ஜானுவாக த்ரிஷாவும் தங்கள் கேரியரின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார்கள். விஜய் சேதுபதிக்கு என்றே இருக்கும் அந்த அப்பாவி இமேஜ், இப்படத்துக்கு பெரியளவில் கை கொடுத்துள்ளது. அதேபோல்  ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ ஜெஸ்ஸிக்கு பிறகு த்ரிஷாவுக்கு பேர் சொல்லும் ஒரு படமாக 96 அமைந்துள்ளது.

கூடை வைத்த லஞ்ச் பேக், டேப் ரிகார்டர், மேங்கோ சாக்லெட், இளையராஜா பாட்டு என 90-களின் வாழ்வியலை அழகாக திரையில் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் பிரேம்குமார். இன்று சமூக வலைதளங்களில் அனைவரும் தங்களுடைய ஸ்கூல் குரூப் போட்டாக்களையும் யூனிபார்ம் அணிந்த புகைப்படங்களையும் பகிர்ந்து தங்களின் முதல் காதல் அனுபவத்தை பகிரும் அளவு இப்படம் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.மொத்தத்தில், பரபரப்பான இவ்வுலகில் ஏதோவொரு மூலையில் சிதறி போயிருக்கும் நம் பழைய உறவுகளை, ஒரு கணமேனும் திரும்பி பார்க்க வைக்கும் ஓர் பேரனுபவத்தை கொடுக்கும் படம் தான் இந்த 96.
First published: October 6, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்