Home /News /entertainment /

ரஜினி - கமல் 44 வருடங்கள் ஒன்றாக பயணிக்கும் அதிசயம் நிகழ்ந்தது எப்படி?

ரஜினி - கமல் 44 வருடங்கள் ஒன்றாக பயணிக்கும் அதிசயம் நிகழ்ந்தது எப்படி?

ரஜினிகாந்த் - கமல்ஹாசன்

ரஜினிகாந்த் - கமல்ஹாசன்

Rajinikanth | Kamalhaasan | ரஜினி தனக்கு இணையான கதாநாயகராக வரவேண்டியவர். ஆனால், அவரை நம் படங்களில், வீணடிக்கிறோம் என்று கவலைப்பட்டவர் கமல்.

திரையுலகில் கமலின் 60-ம் ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் ரஜினி கமல் நட்பிற்கான வயது 44. இத்தனை ஆண்டுகாலம் இருவரும் ஒன்றாக பயணிக்கும் அதிசயம் நிகழ்ந்தது எப்படி?

ஆபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிகாந்த் படு ஸ்டைலாக கதவை திறப்பார். அப்படி திறந்து, தமிழ் நெஞ்சங்களில் மட்டுமல்ல கமலஹாசனின் இதயத்திலும் இடம் பிடித்தார். அன்று தொடங்கிய அந்த இருவர் நட்பு, இப்போது வரை தொடர்ந்து வருகிறது. அரைநூற்றாண்டு காலமாக தொடரும் அவர்களது நட்பை அவ்வப்போது நடைபெறும் சினிமா விழாக்களிலும், அரசியல் விழாக்களிலும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அண்மையில் நடந்த ஒரு விழாவில் 40 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினியுடன் தான் போட்ட ரகசிய ஒப்பந்தத்தை போட்டுடைத்தார் கமல். " 'அவர்கள்' படத்தின் போது நாங்கள் இருவரும் மாஸ் நாயகர்கள் இல்லை. ஆனால், அப்போதே, நாங்கள் பெரிய ஆளுமைகளாக மாறுவோம் என்று நானும் ரஜினியும் தீர்மானித்து விட்டோம்" என்று கமல் கம்பீரமாக பேச அதை ரஜினி ஆமோதி்த்து ரசித்தார்.

ரஜினி கமல் இணைந்து நடித்த படங்களில், கமல்தான் கதாநாயகன். ரஜினி பெரும்பாலும் வில்லன், நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தார். அந்த சமயத்திலேயே, ரஜினி தனக்கு இணையான கதாநாயகராக வரவேண்டியவர். ஆனால், அவரை நம் படங்களில், வீணடிக்கிறோம் என்று கவலைப்பட்டவர் கமல். அதனால்தான், இனிமேல், நாம் இருவரும் இணைந்து நடிக்க வேண்டாம். தனித் தனியாக நடிப்போம் என்ற முடிவினை எடுத்தார் கமல். இதில் ரஜினியின் எதிர்காலம் குறித்த அக்கறை கமலுக்கு இருந்தது.கமல் தன் மீது அக்கறைப்பட்டு இப்படி ஒரு ஒப்பந்தம் செய்தார். அந்த ஒப்பந்தத்தால் அதிக பலன் பெற்றவன் நான்தான் என ரஜினிகாந்த் ஒரு மேடையில் கூறினார். நண்பனுக்குத் தான் செய்த உதவியை வெளியில் சொல்லாத கமலும், தான் உச்சத்திற்குச் சென்ற பிறகு, அன்று என் நண்பன் செய்த உதவியால் உச்சம் பெற்றேன் என்று ரஜினி தன்னடக்கத்துடன் அறிவித்ததையும் வைத்து பார்த்தால், இவர்கள் இருவரும் நட்பிற்கு இலக்கணம் என்பதை புரிந்துக் கொள்ளலாம்.

கமலும் ரஜினியும் திரைக்கு வந்து பெயரும் புகழும், போதிய அளவு பணமும் சம்பாதித்து விட்ட இந்தத் தருணத்தில், இருவரும் மாறி மாறி புகழ்ந்து பேசுவது ஆச்சரியமல்ல. ரஜினி, கமல் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த 80 களின் பிற்பகுதியில் ரஜினியும் கமலும் போட்டி போடாமல் பாராட்டி மகிழ்ந்த தருணங்கள் உண்டு.

ரஜினி கமல் ரசிகர் சண்டை என்பது அவ்வளவு பிரபலம். தளபதி குணா இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் வெளியிட்ட போது, திரையரங்குகள் ரணகளமாகின. அந்த அளவிற்கு வெறித்தனமான ரசிகர்களை ரஜினியும் கமலும் கொண்டிருந்தனர். ரஜினியும் கமலும் ஒருவருக்கொருவர் தாக்கி பன்ச் வசனங்களைப் பேசியிருந்தால் பெரிய அளவில் சமூக பதட்டம் ஏற்பட்டிருக்கும். ஆனால், கதையை மீறி ஒருவருக்கொருவர் தாக்கி பன்ச் வசனங்களை பேசியதில்லை. இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் வைத்திருந்த ஆழமான நட்பே அதற்கு காரணம்.கமலின் 60 ஆண்டு கால திரையுலக வாழ்க்கையில் 44 ஆண்டு காலம் தனது நண்பர் ரஜினியுடன் பயணித்திருக்கிறார். ரஜினி திரைக்கு வந்து முதல் மூன்று ஆண்டுகள் கமலுடன்தான் தொடர்ந்து பயணித்திருக்கிறார். கமல் அறிவுரைப்படி பிரிந்து நடித்தவர் இன்று உச்சத்தில் இருக்கிறார். படங்களில்தான் பிரிந்தனரே தவிர, நட்பால், உணர்வால், உறவு கொண்டாடி கொண்டேயிருக்கும் கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையாராகத்தான் ரஜினியும் கமலும் இந்த கணம் வரை இருந்திருக்கிறார்கள். நிஜ வாழ்க்கையிலும் சரி, இந்திய திரைத்துறை வரலாற்றிலும் சரி ரஜினி கமல் போன்ற நட்பை, நண்பர்களை, அபூர்வ சகோதரர்களை நம்மால் பார்க்க முடியாது.

- ஜீவசகாப்தன்                                                                                                                    நியூஸ் 18 தமிழ்நாடு
Published by:Vijay R
First published:

Tags: Kamal Haasan, Rajinikanth

அடுத்த செய்தி