• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • UPSC தேர்வு - தமிழக தேர்ச்சிக் குறைவு ஏன்?

UPSC தேர்வு - தமிழக தேர்ச்சிக் குறைவு ஏன்?


UPSC தேர்வு

UPSC தேர்வு

தமிழ் மொழியில் தேர்வெழுத நினைப்பவர்களுக்கு போதிய புத்தகங்கள் இல்லாதது பெரும் பின்னடைவாக உள்ளது. ஆங்கிலத்தில் உள்ளவற்றை தமிழில் மொழிபெயர்த்து படிக்க வேண்டிய சூழல் உள்ளதால், தமிழில் தேர்வெழுத தயங்குகின்றனர் தேர்வர்கள்.

  • Share this:
ஜனநாயக நாட்டின் அடித்தளமான 3 துறைகளில் நிர்வாகத் துறையும் ஒன்று. அதில் முதன்மையானவர்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்., ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகள். இப்பதவிகளை நிரப்புவதற்காக நடத்தப்படும் தேர்வுதான் சிவில் சர்வீஸ் தேர்வு எனப்படும் குடிமைப் பணிகள் தேர்வு.

ஆனால், இத்தேர்வு மூலமாக தேர்வாகும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை எதிர்பார்க்கும் அளவிற்கு இல்லை என்பது வருத்தமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

புள்ளி விவரங்கள் சொல்வது என்ன?

இந்தியாவில் கல்வியில் முன்னணி மாநிலமாக விளங்கும் தமிழகத்திலிருந்து, ஏன் சிவில் சர்வீஸ் தேர்வில் மட்டும் சாதிக்க முடியவில்லை என்ற கேள்வி ஒவ்வொரு ஆண்டு தேர்வின் முடிவுகள் வெளியாகும் போதும் எழுகிறது. கடந்த 5 ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குடிமைப் பணிகள் தேர்வில் 5 முதல் 7 சதவிகிதத்தினர் மட்டுமே தமிழகத்திலிருந்து தேர்ச்சி பெற்றிருகின்றனர்.



மேற்காணும் வரைகலை படம் மூலம் சமீபத்தில் எண்ணிக்கைக் குறைவு இருப்பதையும் பார்க்க முடிகிறது. அதிகாரப்பூர்வமாக மாநில வாரியாக முடிவுகள் வெளியிடப்படாததால் தோராய எண்ணிக்கையிலேயே இந்த புள்ளி விவரங்கள் கணக்கிடப்படுகின்றன.

சந்தைக் கூடமாக மாறுகின்றனவா பயிற்சிக் கூடங்கள்?

தேர்ச்சியாகும் அதிகாரிகளில் குறைவான தமிழக பங்கீட்டிற்கு பல முக்கியக் காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக, சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சியளித்தல் மிகப்பெரும் சந்தையாக மாறி இருக்கிறது. டெல்லி மட்டுமே முந்தைய காலக்கட்டத்தில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சிக் கூடமாக இருந்த நிலையில், அதற்கு அடுத்த நிலையில், தமிழகம் உருவாகி இருக்கிறது.

இந்த உருவாக்கம் வரவேற்கத்தகுந்ததாக இருந்தாலும், காலப்போக்கில் அது பயிற்சி சந்தையாக மாறி இருப்பதையும் மறுக்க முடியாது. தொழிற்போட்டியில், அதிகமான தேர்வர்கள் பயிற்சி மையங்களில் சேர்க்கப்படுகிறார்கள். வெறும் தேர்வாக அல்லாமல் ஒரு ஆளுமையை உருவாக்கக்கூடிய தேர்வான சிவில் சர்வீஸ் தேர்வுக்கு அளிக்கப்படும் பயிற்சி ஒவ்வொரு நபருக்கும் ஏற்றாற் போல் வடிவமைக்கப்பட வேண்டியுள்ளது.

ஆனால், பெருங்கூட்டத்திற்கு பொதுவாக வழங்கப்படும் குறிப்புகள் என்பது போதுமானதாக இல்லை என்கின்றனர் துறை சார்ந்தவர்கள். முக்கியமாக ஒரு போட்டித் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்ற கனவோடு பலர் இருக்கலாம், ஆனால் அதற்கான திறன்களோடு இருக்கிறார்களா என்பதை எந்த பயிற்சி மையமும் சோதித்து சேர்ப்பதில்லை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

மாற்றத்திற்கு உள்ளாக வேண்டிய கல்வி முறை

மற்றொரு முக்கியக் காரணமாக, நமது கல்வி முறை பார்க்கப்படுகிறது. புத்தகத்தை படித்துவிட்டு நேரடியாகக் கேட்கும் கேள்விக்கு மணணம் செய்து வைத்த பதிலை வழங்கும் வகையிலேயே நமது மாணவர்கள் தயார்படுத்தப்படுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆய்ந்தறியும் வகையிலான கற்பித்தல் முறை மிக அவசியமானதாக பார்க்கப்படுகிறது.

அது இல்லாததால், ஆய்ந்தறியும் வகையிலான வினாத்தாள் முறையைக் கொண்ட போட்டித் தேர்வுகளில் பல ஆண்டுகள் பயிற்சி பெற்றும் பலனில்லாமல் போவதாக பயிற்சி அளிப்பவர்கள் கருத்துகின்றனர்.

எனவேதான், மருத்துவம் பயின்று முடித்த ஒருவரால் 5 ஆண்டுகள்வரைகூட சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் போவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். புதிய பாடத்திட்ட அறிமுகத்திற்கு பிறகு அதனை சிறிது சிறிதாக சாத்தியப்படுத்த பள்ளிக் கல்வித் துறை முயற்சித்து வந்த நிலையில், கொரோனா காரணமாக அதிலும் தடை ஏற்பட்டுள்ளது. எனினும், இந்த முயற்சிக்கான பலன் கிடைக்க பல ஆண்டுகள் ஆகலாம்.

தமிழுக்கு சாதகமாக இல்லையா சிவில் சர்வீஸ் தேர்வு?

வேறு சில கவனிக்கத்தக் காரணங்களும் முன்வைக்கப்படுகின்றன. சிவில் சர்வீஸ் வினாத்தாளை பொறுத்தவரை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே வழங்கப்படுகின்றன. தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் வினாத்தாள் வழங்கப்படுவதில்லை. இதனால் இந்தி மொழி தெரிந்தவர்களுக்கு சாதகமாக தேர்வு முடிவுகள் வருவதற்கு வாய்ப்பிருப்பதாக, தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் கூறுகின்றனர். தமிழக தேர்வர்கள் மட்டுமின்றி, தென்னிந்திய தேர்வர்களும் இந்த காரணியை தங்களுக்கு பின்னடைவானதாக பார்க்கின்றனர்.

மேலும், சிவில் சர்வீஸ் தேர்வின் பிரதான தேர்வை தங்களது விருப்ப மொழிகளில் எழுத முடியும். அதே சமயம் விருப்பப் பாடத்தையும் அவர்களே தேர்வு செய்யலாம். அதிலும் சிக்கல் இல்லாமல் இல்லை. தமிழ் மொழியில் தேர்வெழுத நினைப்பவர்களுக்கு போதிய புத்தகங்கள் இல்லாதது பெரும் பின்னடைவாக உள்ளது. ஆங்கிலத்தில் உள்ளவற்றை தமிழில் மொழிபெயர்த்து படிக்க வேண்டிய சூழல் உள்ளதால், தமிழில் தேர்வெழுத தயங்குகின்றனர் தேர்வர்கள். அப்படியே தமிழில் எழுதினாலும், முறையான மதிப்பீட்டாளர்கள் இல்லாததால், மதிப்பெண் குறையுமோ என்ற அச்சத்துடனேயே தேர்வர்கள் இருக்க வேண்டியுள்ளது.

தமிழில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்கள்




















 

ஆண்டு
தேர்வெழுதியோர் தேர்ச்சி பெற்றவர்கள்
2014 105 25
2018 100 4

மற்றொரு முக்கிய தகவலையும் நாம் உற்று நோக்க வேண்டியுள்ளது. தமிழகத்திலிருந்து கடைசியாக 2010ஆம் ஆண்டு திவ்யதர்சினி அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தார். அதற்கு முன்னதாக, 2005ஆம் ஆண்டு, நாகராஜன் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தார். கடந்த 10ஆண்டுகளாகியும் முதலிடம் யாரும் வரவில்லை.

தேர்வு முறை எல்லா மாநிலங்களுக்குமானதாக சீர்திருத்தப்பட வேண்டிய கட்டாயம் ஒருபுறம் இருந்தாலும், அடிப்படையான கல்வி சார்ந்த அணுகுமுறைகளை மாநில அரசும் மாற்ற வேண்டி இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: