ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

வேலை இழப்பு பற்றி இனி பயம் வேண்டாம் .... இருக்கவே இருக்கு மத்திய அரசின் சூப்பர் திட்டம்!

வேலை இழப்பு பற்றி இனி பயம் வேண்டாம் .... இருக்கவே இருக்கு மத்திய அரசின் சூப்பர் திட்டம்!

வேலையின்மை உதவித்தொகை

வேலையின்மை உதவித்தொகை

Rajiv Gandhi Shramik Kalyan Yojna Benefits: வேலை இழந்த ஒருவருக்கு 24 மாதங்கள் வேலையின்மை உதவித் தொகை கொடுக்கப்படும். முதல் 12 மாதங்கள் உதவித் தொகை அவர் வேலையில் வாங்கிய சராசரியான தினசரி ஊதியத்தில் 50 சதவீதமும், அதற்குப்பிறது 13 முதல் 24 மாதம் வரை 25 சதவிதமாகவும் வழங்கப்படும்

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu |

கொரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய பொருளாதார சுணக்கம், ரஷ்யா படையெடுப்பு, அமெரிக்க பணவீக்கம் போன்ற பல்வேறு காரணங்களினால் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் வீழ்ச்சி காணப்பட்டு வருகிறது. இந்தாண்டின் கடந்த 20 நாட்களின் மட்டும்,    ஐ.டி நிறுவனங்களிலிருந்து 24,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது, நாளொன்றுக்கு தோராயமாக 1200 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டு வருகின்றனர்.

தற்போது ஐடி துறைகளில் காணப்படும் இந்த போக்கு, பொருளாதாரம் முழுவதும் நிகழும்போது ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மையும் அதிகரிக்கக் கூடும். ஏற்கனவே, நாட்டின் வேலையில்லா பிரச்னை அதிகமாக உள்ளது. உதாரணமாக, Centre For Monitoring Indian Economy கூற்றின்படி,  2022  ஜனவரி-பிப்ரவரியில் சராசரி நகர்ப்புற வேலையின்மை 7% ஆகவும்  கிராமப்புற வேலையின்மை விகிதம் 8.35% ஆகவும்  காணப்படுகிறது.  

வேலை இழப்பு பற்றிய ஆரம்ப பயம் பலரிடத்திலும் பொதுவாக காணப்பட்டு வருகிறது. சுகாதாரம், கல்வி, சேமிப்பு, நுகர்வு போன்றவற்றில் பெரும்பாலான மக்கள் கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர். வேலைவாய்ப்பு காலத்தில் உள்ள இளைஞர்களுக்கு மத்திய/ மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் சமூக பாதுகாப்பு குறித்த தகவல்கள்  தெரிந்து கொள்வதும் முக்கியமானதாகும். அந்தவகையில்,  இ.எஸ்.ஐ (ESI ) திட்டத்தின் கீழ், செயல்படுத்தப் பட்டு வரும் ராஜீவ் காந்தி ஷ்ரமிக் கல்யாண் யோஜ்னா குறித்து இங்கே பார்ப்போம்.

இ.எஸ்.ஐ (ESI ) திட்டம் என்றால் என்ன? 

ESI என்பது மத்திய அரசின் தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டமாகும். ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில் உள்ள தொழிலாளிகளுக்கு உடல் நலக்குறைவு, மகப்பேறு, உடல் ஊனமுற்றல் மற்றும் வேலை செய்யும் போது ஏற்படும் இறப்பு போன்ற நிகழ்வுகளின்போது சமூக பொருளாதார பாதுகாப்பு வழங்கவும், மருத்துவ உதவிகள் வழங்கவும் செய்கிறது.

10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளிகளைக் கொண்ட அனைத்து தொழிற்சாலைகளும் (கடைகள், தனியார் கல்வி நிறுவனங்கள், விடுதிகள்,  திரையரங்குகள் உட்பட) இத்திட்டத்தின் கீழ் வரும். மாத ஊதியம் ரூ. 21,000க்கு குறைவாக உள்ள தொழிலாளிகள் இந்த திட்டத்தின் கீழ் உறுப்பினர்களாக சேரலாம்.  தொழிலாளர்கள் தங்களது ஊதியத்தில் மிகக் குறைவான தொகையை மட்டும் பங்களிப்பாக அளிக்க வேண்டும். இதர தொகையை வேலை அளிக்கும் நிறுவனங்கள் அளிக்கும்.    

ராஜீவ் காந்தி ஷ்ரமிக் கல்யாண் யோஜ்னா என்றால் என்ன?

கடந்த 2005-ம் ஆண்டும், இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் ராஜீவ் காந்தி ஷ்ரமிக் கல்யாண் யோஜ்னா என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ், பல்வேறு காரணங்களால் வேலையை இழந்த காப்பீடு பெற்ற நபருக்கு வேலையின்மை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அடிப்படைத் தகுதிகள்:

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, Industrial Disputes Act, 1947  சட்டத்தின் கீழ் ஆட்குறைப்பு செய்யப்பட்ட நபர்கள், அதே சட்டத்தின் கீழ் தொழிற்சாலை மூடுதல் காரணமாக வேலை இழந்த நபர்கள், பணியின்போது அல்லாது ஏற்பட்ட காயத்தால் 40 சதவீதத்திற்கு குறையாத நிரந்தர ஊனத்தின் காரணத்தால் வேலை இழந்த நபர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ், வேலை இழந்த ஒருவருக்கு 24 மாதங்கள் வேலையின்மை உதவித் தொகை கொடுக்கப்படும். முதல் 12 மாதங்கள் உதவித் தொகை அவர் வேலையில் வாங்கிய சராசரியான தினசரி ஊதியத்தில் 50 சதவீதமும், அதற்குப்பிறகு 13 முதல் 24 மாதம் வரை 25 சதவிதமாகவும் வழங்கப்படும்.

மேலும், ஓராண்டு கால் முதுநிலைப் பயிற்சி நிறுவனத்தில் (Advance Vocational Training institue) பயிற்சி பெற வாய்ப்பளிக்கப்படும். இதற்கான, பயிற்சிக் கட்டணத்தையும், ரயில்/போக்குவரத்து செலவுகளை இஎஸ்ஐ ஏற்கும்.

தேவை விழிப்புணர்வு: 

2007 முதல் 2020 வரையிலான கால கட்டத்தில் இத்திட்டத்த்தின் கீழ் வெறும் 13,341  பேர் மட்டுமே பயன்பெற்றுள்ளனர். எனவே, 10 அல்லது அதற்கு மேற்பட்ட தனியார் தொழில் நிறுவனங்களில் (கடை, விடுதி, உணவகம், நகைக் கடை, ஜவுளிக் கடை, திரையரங்குகள்) வேலை செய்து வந்தால், இ.எஸ்.ஐ (ESI ) திட்டத்தின் கீழ் கட்டாயம் நன்மைப் பெற முடியும். இத்திட்டத்தின் கீழ் சேர்ந்தால், 24 மாதங்கள் வேலைவாய்ப்பின்மை ஊக்கத் தொகை பெற தகுதியனவர்கள் ஆகலாம்.

First published:

Tags: ESI