குரூப் 2 தேர்வின் அடுத்தகட்டம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் முதன்மை எழுத்துத் தேர்வுக்கான கட்டணத்தை 24.12.2018 முதல் 10.01.2019 வரை இணையவழியே (www.tnpscexams.net) மட்டுமே செலுத்த வேண்டும்.

குரூப் 2 தேர்வின் அடுத்தகட்டம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
குரூப் 2 தேர்வு எழுதியவர்கள் (கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: December 18, 2018, 6:45 PM IST
  • Share this:
குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் பதிவேற்றம் தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்வு (மெயின் தேர்வு) 2019 பிப்ரவரி 23-ம் தேதி நடைபெற உள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த மாதம் 11-ம் தேதி (நவ.11) குரூப் 2 முதல்நிலைத் தேர்வினை நடத்தியது. அதில் அனுமதிக்கப்பட்ட 6,26,970 விண்ணப்பதாரர்களில் 4,62,697 விண்ணப்பதாரர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். இதற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி மிக விரைவாக முடிக்கப்பட்டு வெறும் 36 நாட்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளின் முடிவுகளையும் விரைந்து வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து 03.11.2018 நாளிட்ட செய்திக்குறிப்பில் இனிவரும் காலங்களில் அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 2 மாதங்களில் முதல்நிலைத் தேர்வும், 2 மாதங்களில்  தேர்வு முடிவுகளும், 2 மாதங்களில் முதன்மை எழுத்துத் தேர்வும், 3 மாதங்களில் எழுத்துத் தேர்வு முடிவுகளும், 15 நாட்களில் நேர்முகத் தேர்வும் நடத்தி, 10 மாதங்களுக்குள் இறுதி முடிவுகள் வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே அறிவித்திருந்தது.

அதன் அடிப்படையில், தற்போது குரூப் 2 முதல்நிலைத் தேர்வின் முடிவினை 36 நாட்களில் வெளியிட்டு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 2 மாத கால அவகாசத்திற்கும் சற்று  கூடுதலான அவகாசத்துடன் அதாவது 69 நாட்கள் இடைவெளியில் 23.02.2019 அன்று முதன்மை எழுத்துத் தேர்வு நடத்தப்படவுள்ளது.

முதன்மைத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்ட 15,194  விண்ணப்பதாரர்கள், தங்களது சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக 24.12.2018 முதல் 10.01.2019 வரை பதிவேற்றம் செய்ய வேண்டும்.மேலும், தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் முதன்மை எழுத்துத் தேர்வுக்கான கட்டணத்தை  24.12.2018  முதல் 10.01.2019 வரை இணையவழி (www.tnpscexams.net) மட்டுமே செலுத்த வேண்டும். சான்றிதழ் பதிவேற்றம் செய்யாத / விண்ணப்பக் கட்டணம் செலுத்தாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். அவர்கள் முதன்மை எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஏற்கெனவே 23.02.2019 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த (அறிவிக்கை எண் 33/2018; நாள் 14.11.2018) பல்வேறு துறைகளில் நிரப்பப்பட வேண்டிய நூலகர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வேறு ஒரு நாளில் நடத்தப்படும். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Also watch

First published: December 18, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்