குரூப் 1 தேர்வு குளறுபடி: கூடுதல் மதிப்பெண் வழங்கியது டிஎன்பிஎஸ்சி

குரூப் 1 தேர்வு குளறுபடி: கூடுதல் மதிப்பெண் வழங்கியது டிஎன்பிஎஸ்சி
கோப்புப் படம்
  • Share this:
குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட தவறான கேள்விகளுக்கு 6 மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

கேள்வித்தாள் குளறுபடி, வெளிப்படைத்தன்மையின்மை ஆகிய காரணங்களால் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வை ரத்து செய்யக் கோரி, விக்னேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் 24 கேள்விகள் தவறானவை என ஏற்கெனவே டி.என்.பி.எஸ்.சி ஒப்புக்கொண்ட நிலையில், வழக்கு மீண்டும் நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, டி.என்.பி.எஸ்.சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், 96 கேள்விகளுக்கு தவறான பதில்கள் இடம்பெற்றதாக 4390 பேர் மனு அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் 3 பேர் கொண்ட நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் 12 கேள்விகளுக்கு தவறான விடைகள் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.


இதில், 5 கேள்விகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சரியான விடைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், 7 கேள்விகளில் வினாக்களே தவறானவை என்றும் நிபுணர் குழு அறிக்கை அளித்திருப்பதாக டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. அந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், வழக்கு தொடர்ந்தவர் உள்பட மனு அளித்த அனைவருக்கும் கூடுதலாக 6 மதிப்பெண் வழங்கப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

நிபுணர் குழுவின் அறிக்கையை இணையதளத்தில் வெளியிட முடியாது என்று கூறிய டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம், அரசு பணியாளர் தேர்வின் மதிப்பெண்களை இயந்திரத்தனமாக வெளியிடக் கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவையும் சுட்டிக்காட்டியது. வழக்கு விசாரணை ஜூன் 19ஆம் தேதி மீண்டும் நடைபெறவுள்ளது.
First published: June 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்