TNPSC Group 4 Govt Examination: 2022 ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 நிலை எழுத்துத் தேர்வு நடைபெற்று 4 மாதங்கள் மேல் கடந்த நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் பரவலாகியுள்ளது.
முன்னதாக, 7301 குரூப் 4 நிலை காலி பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி வெளியிட்டது. இதற்கான, எழுத்துத் தேர்வு கடந்த ஜுலை மாதம் 24ம் தேதி நடைபெற்றது. 16.2 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், கிட்டத்தட்ட 14 லட்சம் பேர் தேர்வில் கலந்து கொண்டனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிகளுக்கு, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, வாய்மொழித் தேர்வு என எதுவும் இல்லாமல் நேரடி நியமன எழுத்துத் தேர்வின் மூலமே இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. எனவே, தேர்வர்கள் தங்களது உழைப்புகளை, திறமைகளை ஒட்டுமொத்தமாக இந்த தேர்வில் செலுத்தியிருக்கின்றனர்.
எழுத்துத் தேர்வின் அடிப்படையில் இணைய வழி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வர்கள் அழைக்கப்படுவர். இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின்னர், எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், மூலச்சான்றிதழ் மற்றும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர். கலந்தாய்வின் போதே, விண்ணப்பதாரர் தேர்ந்தெடுத்த பணியின் நியமன ஆணை வழங்கப்படும்.
இதையும் வாசிக்க: TNPSC Group 4 Exam: தட்டச்சர்/சுருக்கெழுத்தர் சான்றிதழ் ஏன் முக்கியமானது?
தேர்வு முடிவுகளை உரிய நேரத்தில் வெளியிடுவது நல்லது:
டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி (UPSC), எஸ்எஸ்சி (SSC), ஐபிபிஎஸ் (IBPS) என அரசுத் தேர்வுகளை இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் எழுதி வருகின்றனர். கடந்த 8 ஆண்டுகளில் மட்டுமே மத்திய அரசுப் பணிகளுக்கு 22 கோடி பேர் விண்ணப்பித்திருப்பதாக கூறப்படுகிறது. இதே காலகட்டத்திலும், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் கிட்டத்தட்ட 1 கோடிக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருக்க கூடும். இதில், மிகக் குறைவான இளைஞர்கள் மட்டுமே டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெருகின்ற்னர். வெகு சிலரே, தேர்வுகளை விட்டு முற்றிலும் வெளியேறி, தனியார் துறைக்கு செல்கின்ற்னர். பெரும்பாலான மாணவர்கள், அரசுத் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டே, தனியார்த் துறையில் குறைந்த ஊதியத்தில் பணி புரிந்து வருகின்றனர்.
இதையும் வாசிக்க: எஸ்எஸ்சி 4500 காலியிடங்கள்: இரண்டே மாதங்களில் தேர்வை கிராக் செய்வது எப்படி?
இத்தகைய தேர்வர்களின் நலனில் அக்கறை கொண்டு தான், டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தேர்வு கால அட்டவணை(Annual Calendar ), தேர்வு முடிவுகள் (TNPSC Result declaration schedule)குறித்த அட்டவணையை வெளியிடும் நடைமுறையை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் சமீப காலமாக வெளியிட்டு வருகிறது.
தேர்வு முடிவின் அடிப்படையில் தான், அடுத்த தேர்வுக்கு எப்போது இருந்து தயாராக வேண்டும், தனியார் அலுவல் பணிக்கும்/ தேர்வு தயாரிப்பிக்கும் உள்ள இடைவெளியை எந்தளவு அதிகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்:
கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட ஆட்சேர்ப்பு அறிவிக்கையில், குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தான் , கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி, தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கான 30% இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, இந்த புதிய முறையைப் பின்பற்றி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி முன்னதாக தெரிவித்திருந்தது.
இதையும் வாசிக்க: நாட்டில் புதிய வேலைவாய்ப்பு குறைகிறதா... தரவுகள் சொல்வது என்ன?
கடந்த நவம்பர் மாதம் 15ம் தேதி, டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட தேர்வு முடிவுகள் கால அட்டவணையில், டிசம்பர் மாதத்திற்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இம்மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.