டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இனி தமிழ் மொழி தேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பாடத் திட்டங்கள், விதிகள், ஒவ்வொரு தேர்வுக்குமான நெறிமுறைகள் உள்ளிட்டவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினைப் பொருத்த வரையில், கட்டாயத் தமிழ் மொழித் தேர்வு அனைத்து போட்டித் தேர்வுகளிலும் பின்வரும் வழிவகைகளில் நடத்தப்படும்
(1) தமிழ் மொழித் தகுதித் தாள் (Qualifying Paper), தேர்வர்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்படுகிறது.
(2) தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்புத் தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
(3)மேற்கண்டவாறு நடத்தப்படும் கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி (Minimum Qualifying Marks) கட்டாயமாக்கப்படுகிறது. தகுதித் தாளில் தேர்ச்சி பெறாதவர்களின் இதர போட்டித் தேர்வுத்தாள் / தாட்கள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது.
தொகுதி-I, II மற்றும் IIA ஆகிய இரண்டு நிலைகளைக் கொண்ட தேர்வுகளின் நடைமுறைகள் விவரம்.
(1) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற முதனிலை (Preliminary Examination) மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு (Main Written Examination) என இரண்டு நிலைகளைக் (Two stages of Examination) கொண்டதாக உள்ள தொகுதி l, II மற்றும் IIA ஆகிய அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதித் தேர்வானது. முதன்மைத் தேர்வுடன் (Main Written Examination) விரிந்துரைக்கும் வகையிலான (Descriptive Type) தேர்வாக அமைக்கப்படும்.
(2) மேற்படி முதன்மை எழுத்துத் தேர்வானது, மொழிபெயர்த்தல், சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன், சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல், கடிதம் வரைதல் (அலுவல் சார்ந்தது) மற்றும் கட்டுரை வரைதல் உள்ளிட்ட தலைப்புகள் கொண்டதாக நடத்தப்படும்.
(3) இத்தேர்வு 100 மதிப்பெண்கள் கொண்டதாக அமைக்கப்படும். இத்தகுதித்தாளில் (Qualifying Paper) குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி (Minimum Qualifying marks) பெற்றால் மட்டுமே முதன்மை எழுத்துத் தேர்வின் (Main Written Examination) இதர போட்டித் தேர்வுத்தாள் / தாட்கள் மதிப்பீடு செய்யப்படும்.
ஒரே நிலை கொண்ட (Single stage Examination) தேர்வுகளின் (தொகுதி III மற்றும் IV) நடைமுறைகள் விவரம்
(1) தற்போது நடைமுறையிலுள்ள பொதுத்தமிழ் / பொது ஆங்கிலம் உள்ள நேர்வுகளில், பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு, பொது தமிழ்மொழித் தாள் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக அமைக்கப்படும்.
(2) அதாவது, தொகுதி III, IV போன்ற ஒரே நிலை கொண்ட (Single stage Examination) தேர்வுகளுக்கு, தமிழ்மொழித் தாளானது, தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வாக (Tamil Eligibility - Cum - Scoring Test) நடத்தப்படும். இத்தமிழ்மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வானது 150 மதிப்பெண்களுக்கு பகுதி -அ என கொள்குறி வகையில் (Objective Type)அமைக்கப்படும்.
3) பொது அறிவு. திறனறிவு (Aptitude) . மனக்கணக்கு நுண்ணறிவு (Mental Ability) ஆகிய பாடத்திட்டங்கள் 150 மதிப்பெண்களுக்கு பகுதி - ஆ என கொள்குறி வகையில் (Objective Type) நடத்தப்படும்.
(4) பகுதி அ- வில் குறைந்தப்பட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி (Minimum Qualifying Marks) பெற்றால் மட்டுமே பகுதி ஆ- வில் எழுதிய தேர்வுத்தாளும்/ இதர தாட்களும் மதிப்பீடு செய்யப்படும்.
(5) இவ்விரண்டு பகுதிகளின் (பகுதி அ மற்றும் ஆ) அனைத்துத் தாட்களின் மொத்த மதிப்பெண்களும் தரவரிசைப் பட்டியலுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
ஒரே நிலை கொண்ட (Single stage Examination) இதர போட்டித் தேர்வுகளின் நடைமுறைகள் விவரம்
(1) தற்போது நடைமுறையிலுள்ள பொதுத்தமிழ்/ பொது ஆங்கிலம் உள்ள நேர்வுகளில், பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு, பொது தமிழ்மொழித் தாள் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக அமைக்கப்படும்.
(2) மேற்படி, தமிழ்மொழி தேர்வானது, பகுதி - அ என கொள்குறி வகையில் (Objective Type) 150 மதிப்பெண்களுக்கு தகுதித்தேர்வாக மட்டுமே நடத்தப்படும். தரவரிசைக்கு இம்மதிப்பெண் எடுத்துக்கொள்ளப்படாது.
3) இத்தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி (Minimum Qualifying Marks) பெற்றால் மட்டுமே, பகுதி ஆ மற்றும் இதர போட்டித் தேர்வுத்தாள்/தாட்கள் மதிப்பீடு செய்யப்படும்.
இவ்வாறு பாடத்திட்டம் மற்றும் விதிமுறைகள் குறித்த விவரம் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசாணை வெளியிடப்படும் நாள் முதல் (டிசம்பர் 3, 2021) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கை செய்யப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் மேற்படி தமிழ் மொழித் தாள் கட்டாயமாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TNPSC