Home /News /employment /

TNPSC Current Affairs 7: முக்கிய நிகழ்வுகளும், அதன் பின்னணி விபரங்களும்

TNPSC Current Affairs 7: முக்கிய நிகழ்வுகளும், அதன் பின்னணி விபரங்களும்

டி.என்.பி.எஸ்.சி

டி.என்.பி.எஸ்.சி

1965 லோகூர் குழுவும், 1967 பாராளுமன்ற நிலைக் குழுவும் நரிக்குறவர் சமூகத்தினரை பழங்குடியினர்  பட்டியலில் சேர்த்திட பரிந்துரை செய்தன.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2/குரூப் 2A, குரூப் 4 எழுத்துத் தேர்வுகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கின்றனர். அனைத்து வகையான தேர்வுக்கும் பொது அறிவு பாடங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

மத்திய மாநில அரசுகளில் சில புதிய முன்னெடுப்புகள் பல்வேறு வழிகளில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எனவே,அத்தகைய முன்னெடுப்புகளையும், அதன் பின்னணி விபரங்களையும் இங்கே பகிர்ந்துள்ளோம்.

நரிக்குறவர் சமூகத்தினர்: 

'குருவிக்காரன் குழுவினருடன் இணைந்த நரிக்குறவன்'  சமூகத்தினரை தமிழ்நாட்டில்  பழங்குடியினர்  பட்டியலில் சேர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் இந்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

நரிக்குறவர்கள் மிகவும் பின்தங்கிய மற்றும் பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய சமூகங்களில் ஒன்றாக உள்ளனர்.  1965 லோகூர் குழுவும், 1967 பாராளுமன்ற நிலைக் குழுவும் இவர்களை பழங்குடியினர்  பட்டியலில் சேர்த்திட பரிந்துரை செய்தன. மேலும், இவர்களில்     பழங்குடியினர்  பட்டியலில் சேர்க்கும் திட்டத்திற்கு இந்திய தலைமைப் பதிவாளர் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளார்.








 யார் அறிவிக்கலாம்?

பட்டியல் சாதியினருக்கும், பட்டியல் பழங்குடியினருக்கும், இதர பிற்படுத்த வகுப்பினருக்கும் இந்தியாவில் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அரசியலமைப்பு பிரிவு 341ன் கீழ் குடியரசுத் தலைவர் எந்தவொரு குறிப்பிட்ட சாதிகளையோ, இனங்களையோ, பழங்குடிகளையோ பட்டியல் சாதிகள் என்று பொது அறிக்கையின் மூலம் அறிவிக்கலாம். பட்டியல் சாதிகளை அறிவிப்பதற்கு மாநில அரசு நிர்வாகத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை.

அதே போன்று, பழங்குடிகளில் அல்லது பழங்குடிச் சமூகத்தில் உள்ள பகுதிகளை பட்டியல் கண்ட பழங்குடியினர் என்று குடியரசுத் தலைவர் பொது அறிக்கையின் மூலம் அறிவிக்கலாம். இந்தியாவின், மொத்த மக்கள்தொகையில் 8.6 % விழுக்காடு மக்கள் பட்டியல் பழங்குடியினர் ஆவார். இந்த பிரிவை அறிவிப்பதற்கு மாநில அரசு நிர்வாகத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை. 

 

2. 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி: 

44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துகின்ற வாய்ப்பை தமிழ்நாடு பெற்றிருக்கிறது. இதில், 150க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பங்குபெற உள்ளன. இதுவரை, இந்தியாவில் நடைபெற்ற அனைத்துவித பன்னாட்டுப் போட்டிகளில் மிகப் பெரியதாய் அமைய உள்ளது.








கூடுதல் தகவல்:

FIDE நடத்தும் 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி ரஷ்யாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், உக்ரைன் -ரஷ்யா போர் காரணமாக, இப்போட்டியை ரஷ்யாவில் இருந்து வெளியேற்றுவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு,முன்னதாக உலக செஸ் போட்டி இந்தியாவில் ஒருமுறை கூட நடந்ததில்லை.

 

3. 6- வது மாநில நிதி ஆணையம்:

செய்தி: ஆறாவது மாநில நிதி ஆணையத்தின் அறிக்கையை அதன் தலைவர் மோகன் பியாரே தமிழக அரசிடம் சமர்ப்பித்தார். 2022 ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து  6- வது நிதி ஆணையத்தின் ஐந்தாண்டு காலம் தொடங்குகிறது.  

TNPSC Current affairs-6 | மத்திய அரசின் சில முக்கிய திட்டங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

 

6வது மாநில நிதி ஆணையம்


 

பின்னணி விபரம்: ஒவ்வொரு மாநிலமும் 73 மற்றும் 74 வது அரசியலமைப்பு திருத்தங்களின்படி உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலையை மீளாய்வு செய்யவும், இந்திய அரசியலமைப்பின் 243 I மற்றும் 243 Y இல் கூறப்பட்டுள்ளபடி மற்றும் அதன் பரிந்துரைகளை வழங்கவும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநில நிதி ஆணையத்தை அமைக்க வேண்டும்.

தமிழகத்தில் முதல் மாநில நிதி ஆணையம் 1994 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதுவரை ஐந்து மாநில நிதி ஆணையங்கள் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆறாவது மாநில நிதி ஆணையம், தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்துள்ளது.

4. புதிய காவல் ஆணையம்: 

காவலர் - பொதுமக்களுக்கு இடையேயான உறவை மேம்படுத்தவும், காவல்துறை பணியாளர்களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்திடவும், புதிய பயிற்சி முறைகளைப் பரிந்துரைத்திடவும் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.டி.செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.டி.செல்வம் தலைமையில் காவல் ஆணையம்


கடந்த 1969, 1989 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில், மறைந்த முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசு முறையே மூன்று காவல் ஆணையங்களை அமைத்து, அவற்றின் பரிந்துரைகளைப் பெற்று காவல்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அவ்வப்போது முன்னெடுத்தது. அதன் தொடர்ச்சியாக, தற்போது நான்காவது காவல் ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.

ஆணையத்தின் தலைவர்: சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.டி.செல்வம்

உறுப்பினர்கள்: அலாவுதீன், இ.ஆ.ப., (ஓய்வு), கே.ராதாகிருஷ்ணன், இ.கா.ப., (ஓய்வு), மனநல மருத்துவர் சி.ராமசுப்பிரமணியம், முன்னாள் பேராசிரியர் நளினி ராவ்

5. சர்வதேச அறைகலன் பூங்கா(International Furniture Park): 

தூத்துக்குடியில் 1156 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ள   சர்வதேச அறைகலன் பூங்காவுக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

விபரம்: நாட்டிலேயே முதலாகவும், உலகத்தரத்திற்கு இணையாகவும் சர்வதேச அறைகலன் பூங்காவை உருவாக்கிட அரசு திட்டமிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மீளவட்டான் மற்றும் தெற்கு வீரபாண்டியபுரம் கிராமங்களில் உள்ள 1156 ஏக்கர் நிலப்பரப்பில், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் நெடுஞ்சாலையையொட்டி இந்த பூங்கா  அமையவுள்ளது.

6. முதல் மிதக்கும் சூர்ய மின்சக்தி: 

தூத்துக்குடியில், SPIC நிறுவனத்தின் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள பெரிய நீர் தேக்கத்தில் 150 கோடியே 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆண்டுக்கு 42.0 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்து அதனை தங்களுடைய தொழிற்சாலைகளிலேயே உபயோகப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை தமிழக முதல்வர் கடந்த மார்ச் மாதம் திறந்து வைத்தார்.

 



7. சுவிஸ் ஓப்பன் 300:

சுவிஸ் ஓப்பன் 300 இறகுப்பந்தாட்டத் தொடரில்  பி.வி சிந்து வெற்றி பெற்றார். இது, இப்பருவத்தில் ஒற்றையர் பிரிவில் அவர் கைப்பற்றியுள்ள இரண்டாவது தொடராகும்.

8. All England badmintion Trophy:

அனைத்து இங்கிலாந்து இறகு பந்தாட்டத் தொடரின் இறுதிபி போட்டியில் விளையாட லக்ஷ்யா சென் தகுதிப் பெற்றார். இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற  இந்தியாவின் ஐந்தாவது வீரர் இவர் ஆவார்.

 
Published by:Salanraj R
First published:

Tags: Group 2, TNPSC

அடுத்த செய்தி