ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

அடுத்த 20 ஆண்டுகளில் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும் வேலைகள்...!

அடுத்த 20 ஆண்டுகளில் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும் வேலைகள்...!

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

அடுத்த 20 ஆண்டுகளில் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போக உள்ள சில வேலைகளை பற்றி இங்கே காணலாம்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒவ்வொரு மாற்றத்திற்கும் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகுக்கிறது. அதீத தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதர்களுக்கு வேலை இல்லாமல் போகலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால், இரண்டு நபர், ஒரு நாள் முழுவதும் செய்யும் வேலையை தொழில்நுட்பத்தின் உதவியால் 3 மணிநேரத்தில் செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. ஒருபுறம் தொழில்நுட்ப வளர்ச்சி சாதகமான அம்சங்களை கொண்டிருந்தாலும், மற்றொருபுறம் சில சேவைகளுக்கான அழிவையும் குறிக்கிறது. அந்த வகையில், அடுத்த 20 ஆண்டுகளில் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போக உள்ள சில வேலைகளை பற்றி இங்கே காணலாம். இந்தத் துறைகளில் ஏதாவது ஒன்றில் நீங்கள் பணியாற்றினால், பீதி அடையத் தேவையில்லை. தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைவதை போல, நீங்களும் உங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டால் உங்கள் எதிர்கலாம் வளமாக இருக்கும்.

பயண முகவர்கள் (Travel agents) : தொழில்நுட்ப வளர்ச்சி, ட்ராவெல் ஏஜென்ட் வேலையை ஆபத்தில் தள்ளியுள்ளது. முன்பெல்லாம், நாம் எங்கும் சென்றாலும் பயண முகவர்களின் உதவியை நாடுவோம். அவர்கள் நமக்கு தங்கும் இடம், பார்க்க வேண்டிய இடங்களை ஆகியவற்றை பரிந்துரைப்பார்கள். ஆனால், தற்போதைய இளைஞர்களின் கையிலிருக்கும் ஸ்மார்ட் போன் ஒன்றே போதுமானதாக இருக்கிறது.

உங்களிடம் ஒரு கார் அல்லது பைக்கும், மொபைலும் இருந்தால் போதும் உலகையே யாருடைய உதவியும் இல்லாமல் சுற்றி வந்துவிடலாம். ஏனென்றால், கூகிள் அனைவரின் வாழ்க்கையையும் எளிமையாக்கிவிட்டது. எங்கு விடுமுறைக்கு செல்லலாம், எப்படி செல்லலாம், விமான டிக்கெட், ஹோட்டல் புக்கிங் என அனைத்தையும் உட்காந்த இடத்தில் இருந்து ஆன்லைன் வழியாக செய்துவிடலாம். இதனால், பயண முகவர்களின் தேவை முழுமையாக குறையும்.

காசாளர்கள் (Cashiers) : கிட்டத்தட்ட சுமார் 3.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காசாளராக பணிபுரிவதால், இந்த வேலை ஒட்டுமொத்தமாக மறைந்துவிடும் என கூறமுடியாது. ஆனால், இந்த பதவிகளுக்கான தேவை குறையலாம். அதாவது, யு.எஸ். பியூரோ ஆஃப் லேபர் ஸ்டாடிஸ்டிக்ஸ் தகவலின்படி, 2031-க்குள் இந்த வேலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 10% குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கான முக்கிய காரணம் ஆட்டோமேஷன். கொரோன தொற்று துவங்கியதில் இருந்து மக்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதையையே அதிகம் விரும்புகிறார்கள். எனவே, இவர்களுக்கான தேவை குறைவதற்கான வாய்ப்பு அதிகம்.

வங்கி கேஷியர் (Bank Cashier) : BLS தகவலின்படி, 2031 ஆம் ஆண்டில் வங்கி கேஷியர்களுக்கான தேவை குறையும் என்று கணித்துள்ளது. ஏனென்றால், ஆன்லைன் ஷாப்பிங்கை போலவே, ஆன்லைன் பேங்கிங் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தங்களின் சொந்த வாழ்க்கையை பார்க்க கூட நேரம் இல்லாமல் ஓடும் மக்களுக்கு வங்கி செல்வதற்கு எப்படி நேரம் இருக்கும். அதுவும், தற்போது எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்டதால் இவர்கள் வங்கி செல்வதற்கான தேவையும் குறைகிறது. அப்படியே பணம் தேவைப்பட்டாலும், அருகில் இருக்கும் ATM-க்கு செல்லலாம்.

ஓட்டுனர் (driver job) : ஓட்டுனர்களுக்கான தேவை இந்த நிமிடம் வரை இருந்து கொண்டுதான் உள்ளது. எனவே, இது முற்றிலும் மறைவதற்கான வாய்ப்பு குறைவு. இருப்பினும், இந்த வேலையில் இருப்பவர்கள் கடினமான இன்னல்களை சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இதற்கிடையில், தானியங்கி வாகனங்களின் வருகையும் அதிகரிக்கும். எனவே, வரும் காலங்களில் ஓட்டுனர்களின் தேவை குறையலாம்.

செய்தித்தாள் (Print media Jobs) : பல காலமாக செய்தித்தாள்கள் இருந்து வந்தாலும், அதற்கான தேவை என்னவோ குறைவாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், வீட்டில் இருப்பவர்கள் அன்றைய செய்திகளை அன்றே தொலைக்காட்சி வழியாக தெரிந்து கொள்கிறார்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு தங்களின் சொந்த வேலைகளை கவனிக்கவே நேரம் இல்லாதபோது, எப்படி செய்தித்தாள் வாசிக்க நேரம் கிடைக்கும்.

டிஜிட்டல் மீடியாவின் எழுச்சி செய்தித்தாள்களுக்கான முக்கியத்துவத்தை குறைத்துள்ளது. செய்தித்தாள்களுக்கு நிருபர்கள் மற்றும் ஆசிரியர்களின் தேவை இருந்தாலும் அதன் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும்.

டெலிமார்கெட்டிங் (Telemarketing) : டெலிமார்கெட்டிங் என்பது வணிகம் சார்ந்த தொழில். இந்த பதவிக்கான தேவை எதிர்காலத்தில் இல்லாமல் போகலாம். ஏனென்றால், இதற்கான பெரிய காரணம் டிஜிட்டல் எழுச்சி மற்றும் விளம்பரம். டிஜிட்டல் விளம்பரங்கள் உலகில் எல்லா மூளை முடுக்கிலும் உள்ள மக்களை சென்றடைகின்றன. மக்கள் அவர்களின் தொலைபேசியில் என்ன தேடுகிறார்களோ, அது குறித்த விளம்பரங்கள் பார்க்கும் அனைத்து பக்கங்களிலும் காண்பிக்கப்படும். எனவே, டெலிமார்க்கெட்டிங் வேலைக்கான தேவை குறையும்.

கிடங்கு தொழிலாளர்கள் (Warehouse workers) : தற்போது பிரபல நிறுவனங்கள் அனைத்தும் பெருவாரியாக கிடங்குகளில் ரோபோக்களை பயன்படுத்துகின்றன. ரோபோக்கள் பொறுப்பேற்றவுடன் கிடங்கு வேலைகள் முதலில் செல்லும். மேலாண்மை ஆலோசனை நிறுவனமான பெயின் & கோ தகவலின் படி, கிடங்குகளில் குறைந்தபட்சம் 70% வேலைவாய்ப்புகள் ஆட்டோமேஷன் மூலம் இழக்கப்படலாம் என கூறியுள்ளது. எனவே, எதிர்காலத்தில் கிடங்கு தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு முற்றிலும் மறைந்து விடலாம்.

கணக்காளர்கள் (Accountants) : அக்கவுண்டன் பணிகளை செய்ய பல மென்பொருள்கள் உள்ளது. ஒரு மனிதன் இதை செய்தால் அவர்களுக்கு மாதம் மாதம் சம்பளம் வழங்க வேண்டும். ஆனால், இந்த வேலைகளை செய்ய மென்பொருட்களை பயன்படுத்தும்போது நேரமும் செலவும் குறைகிறது. குறிப்பாக, இந்த வேலைகளை எக்செல் இன்னும் எளிமையாக்குகிறது. எதிர்க்காலத்தில், கணக்காளர்களுக்கான தேவை குறையலாம்.

டைபிஸ்ட் (Typing Jobs) : டேட்டா என்ட்ரி மற்றும் டைப்பிஸ்ட் வேலைகள் இன்னும் உள்ளன. ஆனால், அதன் தேவை நீண்ட காலத்திற்கு இருக்காது. குரல் அங்கீகாரம் மற்றும் டிக்டேஷன் மென்பொருள் இருப்பதால், டைபிஸ்ட் பதவிக்கான முக்கியத்துவம் குறையலாம். எனவே, இந்த பதவியில் நீங்கள் இருந்தால், உங்களை நீங்கள் மேம்படுத்துக்கொள்வது நல்லது.

இயந்திர தொழிலாளர்கள் (Machine workers)

உலோகம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வெட்டி அதை தேவையான பொருட்களாக உருவாக்கும் தொழிலாளர்களுக்கான தேவை குறையலாம். இந்த தொழிலாளர்களின் பணிகளுக்கு ரோபோக்கள் மாற்றப்படலாம். இயந்திரத் தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பு 2031-க்குள் கிட்டத்தட்ட 46,000 ஆகக் குறையும் என்று BLS கணித்துள்ளது.

தபால் ஊழியர்கள் (Postal workers) : உண்மையை கூறவேண்டும் என்றால், தபால் வருவதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால், ஆட்டோமேஷன் தபால் துறையில் சில பாதிப்பை ஏற்படுத்தும். எதிர்காலத்தில், தபால் துறையில் குறைந்த பணியாளர்கள் தேவைப்படுவார்கள். அதாவது, தபால் சேவையில் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பும் 6% குறைவதற்கான வாய்ப்பு அதிகம். ஏனென்றால், நாம் அனைவரும் சமூக வலைத்தளத்தை அதிகமாக பயன்படுத்த துவங்கிவிட்டோம்; மெயில், முகநூல் என அனைவரும் புதிய தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறோம்.

First published:

Tags: Jobs