ஒரு தொழிலை ஆரம்பிப்பதற்கு பணம் மிகவும் அவசியமாகிறது. தொழிலின் வெற்றி தோல்வியை நிதி ஆதரங்களே தீர்மானிக்கின்றன. கடன் கொடுக்கும் வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் பெருகி வரும் இந்த கால கட்டத்தில், தொழில் செய்ய தேவையான முதலீட்டில் 90% -95% வரை கடனாக பெற வாய்ப்புண்டு. வெறும் 5% சொந்த நிதி வைத்துக் கொண்டு கூட தொழில் நிறுவனங்களை ஆரம்பிக்க முடியும்.
இருப்பினும், தமிழகத்தில் இயக்கம் பெரும்பாலான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எந்தவித கடனுதவியும் பெறாமல், தங்கள் சொந்த முதலீட்டின் மூலமே இயங்கி வருகின்றன. கிட்டத்தட்ட 14% நிறுவனங்கள் அதிக கடன் வட்டிக்கு சுற்றத்தாரிடம் இருந்து நிதி ஆதாரங்களைப் பெற்று வருகின்றன.
நிதி ஆதாரம் (6வது பொருளாதார கணக்கெடுப்பு ) | இந்தியா | தமிழ்நாடு |
சொந்த முதலீடு | 78.20% | 81.3% |
வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் | 9.70% | 4.72% |
முறைசாரா நிதி ஆதாரம் | 12.10% | 13.96% |
சொந்த நிதி ஆதாரம் மூலமாக தொழில்கள் நடத்தப்பட்டு வருவதால், நிறுவனங்களை விரிவாக்கம் செய்யாமலும், தொழில்நுட்ப மேம்பாட்டை எய்தாமலும் உள்ளன. உதாரணமாக, தமிழ்நாட்டில் குறைந்தது 2%க்கு குறைவான தொழில் நிறுவனங்கள் மட்டுமே குறைந்தது 10 பணியாளர்களை கொண்டு இயங்குவதாக கூறப்படுகிறது.
நீங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் மதிப்புக் கூட்டலை அதிகரித்து, சந்தைப்படுத்துவதன் மூலம் மட்டுமே வருமானத்தையும், பணியாளர்களின் வாழ்க்கைத் தரத்தையும் அதிகரிக்க முடியும். எனவே, தொழில் தொடங்க தேவையான நிதி ஆதாரத்தை பெறுவது எப்படி என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்:
தொழில் துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு நாட்டின் தொழில் வளர்ச்சிக்கான முதல் மாநில நிதி நிறுவனமாக 1949 ஆம் ஆண்டில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் துவங்கப்பட்டது.
இந்த நிறுவனம், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நீண்ட காலத் தவணைக் கடன் அளித்து வருகிறது.
புதிய தொழில் நிறுவனங்கள் மற்றும் தற்போதுள்ள தொழில்களின் விரிவாக்கம் / நவீனமயமாக்கல் / செய்ய குறைந்த வட்டி விகிதத்தில் நிதி உதவி வழங்குகிறது.
கால கடன் (TERM LOAN) , நடைமுறை மூலதனக் கடன் ( WORKING CAPITAL TERM LOAN) உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.5 லட்சம் முதல் 30 கோடி வரையிலான கடன்களை வழங்குகிறது. ஹோட்டல்கள், மருத்துவமனைகள் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட சேவைத் துறை திட்டங்களுக்கும் கடன் வழங்குகிறது.
மேலும், இந்த நிறுவனம் மூலம் கடன் பெறும் தகுதியுள்ள தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு 3% வட்டி சலுகையை வழங்குகிறது.
விண்ணப்பம் செய்வது எப்படி?
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பத்தை (Business Loan - Apply Online service) சமர்ப்பிக்கலாம்.
மேலும், இதன் தலைமை அலுவலகம் சென்னை நந்தனத்தில் உள்ளது. மேலும், தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களும் 6 மண்டலமாக பிரிக்கப்பட்டு அதனில் 25 கிளை அலுவலகங்களில் இயங்கி வருகிறது. நேரடியாக விண்ணப்பிக்க விரும்பும் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட மாவட்டத்தின் சம்பந்தப்பட்ட கிளை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (The Tamilnadu Industrial Investment Corporation Ltd)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Entrepreneurship