ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

இ-சேவை மூலம் PSTM சான்றிதழ் பெற முடியாமல் தவிக்கும் விண்ணப்பதாரர்கள் - அரசு நடவடிக்கை எடுக்குமா?

இ-சேவை மூலம் PSTM சான்றிதழ் பெற முடியாமல் தவிக்கும் விண்ணப்பதாரர்கள் - அரசு நடவடிக்கை எடுக்குமா?

தமிழில் பயின்றதற்கான சான்றிதழ்

தமிழில் பயின்றதற்கான சான்றிதழ்

கடந்த செப்டம்பர் மாதம் இந்த சான்றினை இ-சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கும் வசதியை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை  அறிமுகப்படுத்தியது

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  PSTM certificate: அரசு இ-சேவை மூலம் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் பெற முடியாத நிலை இருப்பதாகவும் , பள்ளிக்கல்வித்துறை இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று தேர்வர்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

  இந்திய போன்ற தெற்காசிய நாடுகளில் விளிம்பு நிலை மக்களின்  வாழ்கையை மேம்படுத்தும் கருவியாக அரசு வேலைவாய்ப்பு உள்ளது. ஆனால், இந்த வேலைவாய்ப்பை ஜனாநாயகப்படுத்துவதில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. செல்வம் அதிகமிக்கவர்கள் தங்கள் கலாச்சார மூலதனங்களின் வாயிலாக அரசு வேலைவாய்ப்பை அதிகம் பெற்று வந்த சூழலில், தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் சமூக, பொருளாதார நிலைகளை உயர்த்தும் வகையில் தமிழ்நாடு அரசு கடந்த 2010ம் ஆண்டு  PSTM  என்ற சட்டத்தை இயற்றியது.

  இந்த சட்டத்தின் கீழ் , தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 20% இடங்கள் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்பட்டு வருகிறது. குரூப்  1 முதல் குரூப் 4 வரையிலான தேர்வுகளில் SSLC,HSC,DEGREE உள்ளிட்டவைகளை கல்வித்தகுதியாக தமிழ் மொழியில் பயின்ற தேர்வர்கள் இதன்கீழ் பயனடைந்து வந்தனர்.

  முன்னதாக, தமிழ் வழியில் படித்ததற்கான சான்று அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களால் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த செப்டம்பர் மாதம் இந்த சான்றினை இ-சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கும் வசதியை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை  அறிமுகப்படுத்தியது.

  இதன்கீழ், விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பபங்கள் பெறப்படும். இவ்வாறு, பெறப்பட்ட விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட  முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்படும். தலைமை ஆசிரியர் இந்த விண்ணப்பபங்களை சரிபார்த்து மின் கையொப்பம் செய்து சான்றிதழை பதிவேற்றம்  செய்யவேண்டும். அதனையடுத்து, விண்ணப்பதாரர் இந்த சான்றிதழை இ-சேவை மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆன்லைன் மூலமாக மட்டுமே தமிழ் படித்ததற்கான சான்றிதழ்கள் வழங்கப் பட வேண்டும் என்றும், எக்காரணமும் கொண்டு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் கையினால் கொடுக்கக்   கூடாது என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

  இந்த புதிய நடைமுறை அறிமுகமாகி  மூன்று மாதங்கள் மேல் கடந்த நிலையில், தேர்வர்கள் பல்வேறு சிக்கல்களை  எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர். இந்த புதிய நடைமுறையின் மூலம், விண்ணப்பித்த பல தேர்வர்களுக்கு இதுநாள் வரையில் சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என்று புகார் தெரிவிக்கின்றனர்.

  All India civil service coaching Exam
  டிஎன்பிஎஸ்சி நுழைவுத் தேர்வு

  இதுகுறித்து கோயம்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த  தேர்வர் ஒருவர் தெரிவிக்கையில், " இ-சேவை மூலமாக தமிழ் சான்றிதழ் கோரி விண்ணப்பித்து 2 மாதங்கள் மேல் ஆகிவிட்டது. எந்த பலனும் இல்லை. அதன், தற்போதைய நிலையைக் கூட (Application Tracking) அறிந்து கொள்ள முடியவில்லை. பள்ளித் தலைமையாசிரியர்களிடம் கேட்டால்  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படவில்லை  என்று  கூறுவதாக தெரிவித்தார்.

  மேலும், இ-சேவை உதவி எண்ணைத் தொடர்பு கொண்டபோது, " சர்வர் பிரச்னை உள்ளது. அதனால், இ-சேவை மூலம் விண்ணப்பிக்க வேண்டாம்" என்று தெரிவிப்பதாக கூறுகிறார்.  ஆன்லைனிலும் விண்ணப்பிக்க இயலாமலும், பள்ளியளிலும் பெற இயலாமலும் பலர் தவிப்பதாகவும் தெரிவித்தார்.

  நியூஸ்18-ல் இருந்து  நாம் தொடர்பு கொண்ட போதும் இத்தகைய பதிலே கிடைத்தது.

  முன்னதாக , இ-சேவை பிரச்னை  தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்த தமிழ்நாடு தகவல் தொடர்பு துறை அமைச்சர் மனோ தங்கராஜ் " PSTM சான்று ஆன்லைன் சேவையை பள்ளிக்கல்வித் துறை நிர்வகித்து வருகிறது .

  தற்போது, சில தொழில்நுட்ப சிக்கல்கள் காணப்படுகின்றன. விரைந்து  தீர்வு காண பிரச்சனை பள்ளிக்கல்வித்துறைக்கு கொண்டு செல்லப்பட்டது" என்று தெரிவித்தார். ஆனால், அமைச்சரின் இந்த ட்விட் பதிவாகி கிட்டத்தட்ட 2 மாதங்கள் கடந்த நிலையில், இ-சேவை தளத்தில் எந்த முன்னேற்றமும் காணப்பட வில்லை.

  மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கில் தான் இ-சேவை திட்டம் தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்டது, வருமான சான்றிதழ் தொடங்கி விதவை சான்றிதழ் வரை  அனைத்தும் இந்த தளத்தின் வாயிலாகவே வழங்கப்பட்டு வருகின்றன.

  TNPSC Group VA Free Examination Coaching
  தேர்வாணையம்

  டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்:

  கடந்த 3 மாதங்களில் குரூப் 1 தேர்வு, மீன்வளத் துறையில்  ஆய்வாளர், சார் ஆய்வாளர் பதவி, சுகாதாரத் துறையில் சுகாதார அலுவலர், கல்வித்துறையில்  நிதியாளர் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி ஆள்சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டது. இந்த, அனைத்து பதவிகளுக்குமே தமிழ் வழியில் பயின்றதற்கான 20% இடஒதுக்கீடு முறை பொருந்தும்.மேலும், இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் போதே, தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும், இல்லையேல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

  தமிழ்வழி சான்று இல்லாதாவர்கள், டிஎன்பிஎஸ்சி அளிக்கும் ஆதாரச்சான்று படிவத்தில், பள்ளித் தலைமை ஆசிரியர்/தொழில்நுட்பக் கல்வி இயக்குனர், பல்கலைக்கழக பதிவாளர் என தொடர்புடைய நிலைகளில் இருந்து கையொப்பம் பெற வேண்டும். படித்த கல்வி நிறுவனங்களை விட்டு தற்போது வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்து வரும் தேர்வர்களுக்கு இது மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.  சில தேர்வர்கள் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளில் தான் வேலைவாய்ப்பு  வெளியான செய்தியை தெரிந்து கொள்கிறார்கள். நேரமின்மையால், தமிழ்வழியில் பயின்றதற்கான ஆதாரச் சான்றிதழில் கையொப்பம் வாங்க முடியாமல் போகிறது. இதன், காரணமாக PSTM சலுகையை இழந்து வருகின்றனர். எனவே, தமிழ்நாடு அரசும், பள்ளிக் கல்வித்துறையும்,   அரசுப் பணியாளர் தேர்வாணையமும் PSTM சான்றிதழ் விவகாரத்தில்  மாணவர்களின் சுமையைக் குறைக்க முன்வர வேண்டும் என்று தேர்வர்கள் கருதுகின்றனர்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Tamil Nadu Government Jobs, TNPSC